நாகேஷ்
______________________________________
ருத்ரா
சினிமாத் திரை எனும்
வெங்கலக்கடையில்
ஒரு பூனைபோல் .நுழைந்த யானை
சிரிக்க வைத்து சிரிக்க வைத்து
தன் நகைச்சுவை அங்குசத்தால்
பார்ப்பவர்களை ஆட்சி செய்தது.
படங்கள் ஒவ்வொன்றையும்
நாம் சொல்லிக்கொண்டே போனால்
நூறு இமயங்களின் சிகரங்களை
ஏறிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூன்று படங்களை குறிப்பிட விரும்புகிறேன்.
சர்வர் சுந்தரம்.
அருமையான நடிப்பு
ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிரிப்பு
கொடி கட்டி பறக்கிறது.
நிறைவேறாத காதலை
தேவதாஸ் பிழிந்து பிழிந்து தந்திருக்கிறது
உணர்ச்சியின் எரிமலையிலிருந்து.
சிரிப்பு மூட்டிக்கொண்டே
அதே சோகத்தை வெளிக்கொணர்ந்த
நாகேஷ் எங்கோ ஒரு உச்சிக்கு போய் நிற்கிறார்.
அதிலும் ஒரு காட்சி.
காதலிக்கு பூங்கொத்து தருவார்
உற்சாகம் பொங்க.
அவள் காதலிக்க வில்லை என்று
தெரிந்ததும்
அந்த பூங்கொத்து குப்பைக்கூடைக்குத் தான்
போகும் என்று தெரிந்தும்
இப்போதே குப்பையில் போட்டு விடாதே
என்பதை
நகைச்சுவை கலந்த சோகத்தோடு சொல்வார்.
ஒரு சிரிப்புக்குள் எங்கோ சொருகிவைத்திருந்த
ஒரு சம்மட்டியை எடுத்து
நம் நெஞ்சத்தை நொறுக்கிவிடுவது போல்
காட்டிவிடுவார்.
இதைப்போல எத்தனையோ காட்சிகள்.
அடுத்து திருவிளையாடல்.
சிவாஜியுடன் அந்த கேள்வி பதில்..
நீ கேட்கிறாயா?
நான் கேட்கட்டுமா?
என்று அவர் கேட்டவுடன்
அவர் காட்டும் அந்த பதற்றத்தில் கூட
ஒரு பயத்தையும் காட்டுவார்.
அதிலும் அவர் நம்மை குலுங்க குலுங்க
சிரிக்க வைத்து விடுவார்.
நடிப்பு என்றால் சோகத்தை தத்துவத்தில்
தோய்த்து தருவது தான்.
அந்த கனமான உணர்ச்சிகளில்
ஒரு சிரிப்பின் இழையையும்
மெல்லிய மயிலிறகாய் வருடி நம்
இதயத்தின் ஆழத்தையே
துளைத்துக்கொண்டு விடுவார்
நீர்க்குமிழி என்ற படத்தில்.
மரணம் தன் தோளில் அமர்ந்த போதும்
அந்த சுமையை சிரித்து சிந்திக்க வைக்கும்
நகைச்சுவையால்
அந்த கனபரிமாணத்தை இலேசாக்கி விடுவார்.
இந்த மூன்று படங்களையும் தாண்டி
எப்போதும்
சட்டம் போட்டு சுவரில் மாட்டியிருப்பது போல்
ஒரு படம் உண்டு.
அது
காதலிக்க நேரமில்லை.
என் நினைவுகளில் சிரிப்பு அலைகளாய்
உலா வந்து கொண்டே இருக்கும் படம் அது.
எதைச்சொல்வது?
எதை விடுவது?
அந்தப்படம் வந்த வருடத்திலிருந்து
நேற்று பார்த்த விண்குழல் காட்சிகள்
வரையும்
என்னிடம் ஆட்சி செய்து கொண்டிருக்கும்
படம் அதுவே தான்.
டி எஸ் பாலையாவுடன் அவர் அடிக்கும்
லூட்டி ஒன்றே போதும்.
அந்த படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேன்
என்று கணக்கு எடுத்தால்
செஞ்சுரியை தாண்டியிருக்கும் என
நினைக்கிறேன்.
அவர் சேட்டைகள்
ஹாலிவுட் நடிகர் "ஜெர்ரி லூயிஸை"
நினைவு படுத்துவதாக இருக்கலாம்.
அவர் ஒரு ஃப்ரேமுக்குள் நிற்பார்.
ஆனால் இவர் நின்று கொண்டிருப்பதே தான்
இங்கு ஃப்ரேம்.
பாலச்சந்தர் அவர்கள் தன் "டைரக் ஷனை"
இவரிடம் கூர் தீட்டிக்கொண்டார்
என்பதே நிஜம்.
_____________________________________________________________