செவ்வாய், 13 மார்ச், 2018

ஒளியோடு ஓடிப்பிடித்து விளையாடு



ஒளியோடு ஓடிப்பிடித்து விளையாடு
==================================================ருத்ரா


அமெரிக்காவில்
லாஸ் ஏஞ்சல்ஸில்  ஒரு பூங்கா!
பொழுது சாயும் வேளை.
காலாற அங்கே வந்தேன்.
அந்தி அங்கே
காலை மடித்துப்போட்டுக்கொண்டு
புல் விரிப்பில் உட்கார்ந்து
அந்த "அந்தியையே "
பார்த்துக்கொண்டிருந்தது போல்
ஒரு தோற்றம்.
அங்கே மரங்களைப்பார்த்து
நின்று நின்று செல்வேன்.
என்னவோ
அந்த மரங்களின் இலைகள் எல்லாம்
 நாக்குகளாய் முளைத்து
நம்மூர் டிவிக்களில்
சதுரக்கட்டங்களில் இருந்துகொண்டு
பேச்சாளர்கள்
நெறியாளரோடு
சள சளப்பது போல் இருந்தது.
அந்த பேச்சுக்களின் சூடு தாங்காமல்
மரமே தீப்பற்றிக்கொண்டு
ஒரே சிவப்பு மரமாய்
எனக்குத்தெரிந்து.
அதை குளிர்விப்பது போல்
வானத்து முழு நிலவு
அப்போது தான் இலைகளின் ஊடே
வெள்ளி முலாம் பூசத்துவங்கியிருந்தது.
இலைகளின் ஒவ்வொரு இடைவெளியும்
ஒவ்வொரு கண்ணாய்
என்னைக்கண்ணடித்து கண்ணடித்து
கண்ணாமூச்சி விளையாட அழைத்தது.
அந்த நிலவொளியில்
இரண்டு மூன்று சிறுவ சிறுமியர்
மரங்கள் தோறும்
ஒளிந்து ஒளிந்து "ஹைட் அன்ட் சீக் "
விளையாடிக்கொண்டிருந்தனர்.
வானத்து நிலவு தரையிறங்கி
நிலாப்பிஞ்சுகளாய்
அந்த மரத்தை சுற்றி சுற்றி
விளையாடியது போல்
எனக்குத்தோன்றியது.
நானும் அங்கேயே
இலைகளின் ஆயிரம் கண்களோடு
கண் சேர்த்து
கண் பொத்தி
அந்த நிலாப்பிழம்போடு
விளையாடிக்கொண்டிருந்தேன்.
"மங்கியதோர் நிலவினிலே...."
முறுக்கிய மீசைப்புல்   தளிரிடையில்
"பாரதி" எனக்குள்
முறுக்கேற்றிக்கொண்டிருந்தான்.

========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக