புதன், 21 மார்ச், 2018

"கயல்முள் அன்ன ....." பாடலின் பொழிப்புரை

"கயல்முள் அன்ன ....." பாடலின் பொழிப்புரை.
================================================ருத்ரா இ.பரமசிவன்
(தலைவியின் பிரிவுத்துயரம் பற்றிய பாடல் இது)

கயல்முள் அன்ன..
=================================================ருத்ரா.

நாற்றிய போன்ம் வால்செறி  எல்லே
எத்துணை எரித்தும் தண்காழ் சேக்கை
கிடந்தே குளிர்பூங்  காலொடு இழையும்.
அழல் அவிர் மாண் இழை பூட்டுகம் என்னே.
கொல்சுரம் கல்படு ஆற்றின் மீமிசை
அவன் ஏகிய காலை எரிதழல் ஊண்கொள்
நோகுதல் செய்யும் காதல் நோயிலும்
பனித்துறை பகன்றையின் உரிஉடுத்தன்ன‌
களிக்கும் ஆயினும் கள்ளம் ஒளிக்கும்
ஆர்த்த ஓதையின் அரிக்குரல் நுவலும்.
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
மூத்தார் முளிதரும் வாய்ச்சொல் என் தரும்?
முழவின் பாணி மூசும் வண்டென‌
அலைவுறும் யானோ அளியள் மன்னே.

=================================================




பொழிப்புரை
=============


நாற்றிய போன்ம் வால்செறி  எல்லே

நாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள். நான்று (நாண்டுகிட்டு) அதாவது தூக்கிட்டு என்றபொருளில் வரும் இந்த சொல்லின் "வேர்"ஆன "நால்" என்பதிலிருந்து "நாற்றிய" என இங்கு வந்துள்ளது.இதற்கு "ஊசல்" போல் தொங்குதல் என்று பொருள்.

போன்ம் = போலும்
வால்செறி = ஒளி மிகவும் அடர்ந்த
எல்லே = பகல் தோன்றக்காரணமான சூரியன் (எல்+ஏ இங்கு ஏ  ஏகாரம் தேற்றம்)


எத்துணை எரித்தும் தண்காழ் சேக்கை


எவ்வளவு எரித்தாலும் இந்த வைரம் பாய்ந்த மரத்தில் செய்த கட்டிலில்


கிடந்தே குளிர்பூங்  காலொடு இழையும்.


படுத்துக்கிடந்து குளிர்பொருந்திய பூங்காற்றில் பின்னிக்கிடப்பேன்.


அழல் அவிர் மாண் இழை பூட்டுகம் என்னே.


நெருப்பில் பொன் சுடப்பட்டு மிகச்சிறப்பாக செய்யப்பட்ட அணிகலன்கள் அணிகின்றேன்.ஆயினும் என்ன பயன்?



கொல்சுரம் கல்படு ஆற்றின் மீமிசை


கொலைவெறி மிக்க கள்வர்கள் நிறைந்த காட்டில் அந்த கரடு முரடான கற்கள் நிறைந்த பாதையில் மேலும் மேலும் முன்செல்ல‌


அவன் ஏகிய காலை எரிதழல் ஊண்கொள்


என் தலைவன் புறப்பட்ட பொழுதே அந்த பிரிவுத்துயர் எனும் நெருப்பே நான் உட்கொள்ளும் உணவு ஆனது.



நோகுதல் செய்யும் காதல் நோயிலும்


அத்தகைய துன்பம் தரும் அந்த காதல் நோயிலும்


பனித்துறை பகன்றையின் உரிஉடுத்தன்ன‌


குளிர்ந்த நீர்க்கரையில் பூக்கும் பகன்றை எனும் மலர்களில் நெய்த‌
ஆடையை உடுத்தாற்போல் (அவன் நினைவில்)


களிக்கும் ஆயினும் கள்ளம் ஒளிக்கும்


இன்புறுவேன்.இருப்பினும் அதை வெளிக்காட்டாது மறைப்பேன்.


ஆர்த்த ஓதையின் அரிக்குரல் நுவலும்.


நான் எழுப்பும் துயர ஒலிகளில் ஒரு நுண்குரலும் (அப்பெரிய ஒலிகளில் இருத்து சலித்தெடுத்தது போன்ற) (இது "அரிக்குரல்" என எழுதப்பட்டுள்ளது)  மெல்லிதாக கேட்கும்.(இது என் தலைவனின் இதய ஒலி)


கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்


ஆனால்  சுருங்கிய கன்னங்களில் மீன் முள் போன்ற நரைத்த முதிர்ந்த மயிர்களோடு இருக்கும்... முதியவர்களின் முகத்தில் அதாவது கன்னக்கதுப்புகளில்  எல்லாம் விறைத்த நரைமுடிகள்  பரந்திருக்கும் காட்சியை


"கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்"


என்ற வரிகளால் "நரி வெரூஉத் தலையார்" எனும்  சங்கத்தமிழ்ப்புலவர் "ஒரு சிறப்பான ஓவியம் தீட்டியிருக்கிறார்..இவ்வரிகள் புறநானூற்றுப்பாடல் 195ல் வருகின்றன. "பொருண்மொழிக்காஞ்சி"எனும் துறையில் அவர் இப்படி நரை திரைகளால் மனிதர்கள் முதிர்வுற்ற நிலையிலும் "மானிட நேயம்"அற்று தீய நோக்கங்களால் இந்த சமுதாயத்தை பாழ்  படுத்தக்கூடாது என்றும் "நல்லன செய்ய" வேண்டும் என்றும்  சொல்கிறார்..அதே பாடலில் தான்


"நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்..."


என்னும் உலகப்புகழ்பெற்ற வரிகள் இடம்பெறுகின்றன.நரி வெரூஉத் தலையாரின் "கயல் முள் அன்ன நரைமுதிர் திரைக்கவுள்"...என்னும்வரி எனக்கு மிகவும் அற்புதமானவையாகத்தோன்றியது. அதனால் அதையே தலைப்பாக்கி இந்த சங்கநடைச்செய்யுளை ஆக்கியுள்ளேன்.இங்கு தலைவி காதல் துயர் உற்று வாடுகையில் இந்த  முதியோர்களின் சொற்களில் ஒரு பயனும் இல்லை என்று அவள் நினைக்கின்றாள்.



மூத்தார் முளிதரும் வாய்ச்சொல் என் தரும்?


அந்த வயதானவர்கள் தரும் குழைந்த ஆறுதல் மொழிகள்

என்ன பயன் தரும்.?


முழவின் பாணி மூசும் வண்டென‌


அதிர்கின்ற முரசின் தாளத்துக்கேற்ற  பரப்பில் மொய்க்கும் வண்டும் அதிர்ந்து நடுங்குதல் போல்


அலைவுறும் யானோ அளியள் மன்னே.


அல்லாடும் நான் மிக இரங்கத்தக்கவள் அல்லவா!




============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக