செவ்வாய், 13 மார்ச், 2018

குதிரையும் "சிவாஜிராவும்"


குதிரையும் "சிவாஜிராவ்" என்ற ரஜனியும்!
================================================ருத்ரா

டிவியில் காட்டினார்கள்.
குதிரையில் போய்க்கொண்டிருந்தார் ஒருவர்.
அது சிவாஜி அல்ல.
சிவாஜிராவ் என்கிற ரஜனி தான்.
மூக்காம்பிகைக்கு வெள்ளி வாள்
கொடுத்த மக்கள் திலகம் போல்
இந்த ஆன்மீக திலகம்
அந்த இமயமலை யாத்திரையில்
ஆரோகணம் செய்து கொண்டிருந்தார்.
ஒருவர் காட்டும்
பக்தியிசம் பற்றி கருத்துரை செய்வது
நாகரிகத்துக்கு ஏற்புடையது அல்ல.
ஆனால் பக்தியிசம்
நாகரிகத்தின் மலர்ச்சிக்குரிய பாதை அல்ல‌
என்று  சொல்வதில்
எந்த அநாகரிகமும் இல்லை.
ஒரு மின்விளக்கு
மின்காந்தக்கதிர் அலைக்கோட்பாடு
போன்ற
விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள்
பற்றிய சிந்தனைக்கீற்றுகள் எல்லாம்
மழுங்கடிக்கப்பட்டது
இந்த பக்தியிசம் மண்டிய தேசத்தில் தான்.
 மனித வளர்ச்சிக்கும் பக்தியிசத்துக்கும்
இடையே மூடத்தனமாய்
ஒரு  முரண்பாடு இருக்கும்போது
இந்த ஆன்மிகத்தை
மலர்ச்சியின் ஆயுதமாக‌
நிச்சயம் மாற்றமுடியும் என்ற‌
"பசப்பல் வாதத்தை"
ஏன் கையில் எடுக்கிறார் ரஜனி?
இந்தியாவின் அரைகுறைக்கற்பனைகளின்
அவியல்களில் ஆக்கப்பட்ட‌
அம்புலிமாமா புராணங்களை
வைத்துக்கொண்டு
நாம் அன்றே "ப்ளாஸ்டி சர்ஜரியின்"
முன்னோடிகள் என்று மார்தட்டும்
பிரதமர்கள் ஆளும் புண்ணியபூமியில்
நாமும்
பாபா சூத்திரத்தை வைத்து
பாராளவேண்டும் என்று
அந்தக்குதிரைச்சவாரியை
மேற்கொண்டாரோ ரஜனி?
மனிதனில்
யானையின் தலையை ஒட்டவைத்த
விநாயக புராணங்களில்
நம் மெடிக்கல் ஸயன்ஸை
நிலைநாட்டும் ஆன்மிகபுரட்சியை
வைத்துக்கொண்டா
நாம் பரிணாமத்தின் படிகளை
கடந்து நடக்கப்போகிறோம்?
மழுப்புவதும் குழப்புவதும் தான்
ஆன்மிக அரசியலா?
"ரசிகர்களாக" இருக்கும் இளைஞர்களே !
உங்கள்
மெடுல்லா ஆப்லாங்கட்டா
செரிப்ரம் செரிபெல்லம்
இவைகளில் எல்லாம்
எப்போது குதிரை சவாரி செய்யப்போகிறீர்கள்?
மூளையின் மடிப்பு மலைகளில்
அந்த நியூரான்களை உங்கள் லகான்களாக்கி
இந்தக்குதிரைகளில் ஏறி
உலகை வலம் வரப்போகிறீர்களா?
இல்லை
சினிமாவின் இந்த அட்டைக்குதிரைகளில்
பயணம் துவக்கப்போகிறீர்களா?
சிந்தியுங்கள்.
உங்கள் திருப்புமுனையில்
நம் வரலாறுகள்
புதுப்பிக்கப்படட்டும்!
வாழ்த்துக்கள்.

==================================================


2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமையாக சொன்னீர்கள் நண்பரே.. ரசிகன் என்ற அறியாமைகளுக்கு, நிஜ குதிரைக்கும், மண குதிரைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி கில்லர்ஜி அவர்களே!
அரசியல் எனும் விஞ்ஞானம் இன்னும் இங்கு அஞ்ஞானமாகவே இருப்பது தான் நமது வேதனையான காமெடி.

கருத்துரையிடுக