திங்கள், 12 மார்ச், 2018

அந்தக்குரல்கள் ஓயவில்லை.

அந்தக்குரல்கள் ஓயவில்லை.
===============================================ருத்ரா

அந்த ரோட்டோர குப்பை தொட்டி
நிறைந்து வழிந்தது.
அதற்குள் ஒரு குட்டி நாய்.
சினிமாபோஸ்டரை மெத்தையாக்கி
படுத்துக்கிடந்தது.
அதன் சின்ன வாயின் கூரிய அரிசிப்பல்
தெரிய குரைத்து குரைத்து
குதித்துக்கொண்டிருந்தது.
தோளில்
ஒரு பெரியகறுப்புப்  பிளாஸ்டிக் பையை
யானையை மல்லாக்க கிடத்தியது போல்
வைத்துக்கொண்டு
ஒரு சிறுவன் அங்கே
குப்பையில் கிடக்கும்
அலுமினிய இரும்புத்துண்டுகளை
சேகரிப்பவனாய்
அந்த குப்பையைக்  கிளறினான்.
அந்த நாய்க்குட்டியோ
அவனை நோக்கி
சின்னஞ்சிறிய அந்த பல்வரிசையை
வைத்துக்கொண்டு
"வள் வள் " என்றது.
என்னவோ  ஐ .நா வில்
குட்டி நாடுகள் எல்லாம்
கொழுத்த நாடுகளின் சுரண்டற்கோட்பாட்டை
இப்படி சன்னக்குரல்களில்
சத்தம் போட்டு  சத்தம் போட்டு
சரித்திரத்தை மாற்றிவிடுவதைப்போல்
குரைத்துக்கொண்டிருந்தது.
பொறுக்கித்தான் தின்னவேண்டும்
என்ற வர்க்கத்தில் தான்
அவனும் இருக்கிறான் என்று தெரியாமல்
அந்தக் குட்டி
அவனை நோக்கி
குரைத்துக்கொண்டே இருந்தது.
போதாதற்கு
அந்த பொடிப்பல்லை வைத்து
அவனைக் கவ்வியது.
அவன் அந்த  கருப்புப்பையை வைத்து
தடுத்துக்கொண்டான்.
அவன் அந்த குப்பைத்தொட்டியை
அந்த குட்டிக்கே
லீசுக்கு விடுவது போல்
விட்டு விட்டு போய் விட்டான்.
இருந்தாலும்
அது குரைத்துக்கொண்டே இருக்கிறது.
அந்தக்குரல்கள் ஓயவில்லை.

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக