சனி, 31 மார்ச், 2018

பிச்சை நன்றே பிச்சை நன்றே



பிச்சை நன்றே பிச்சை நன்றே
============================================ருத்ரா

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
இந்த மூதுரை மொழிகள்
இன்று மூச்சிழந்து போயின.
"பிச்சை நன்றே பிச்சை நன்றே..நம்
கோவணம் இழந்தாவது பிச்சை நன்றே.
கோவணம் என்பது நம்
ஓட்டுகள்!
இன்று
நாம் தெரிந்த புதுமொழிகள்
இவை மட்டுமே.
தமிழ் தமிழன் என்றெல்லாம்
உணர்ச்சியை கொப்பளிக்கின்றவர்கள்
வெறும் கோமாளிகள் என்று
கொக்கரிக்கின்ற தமிளர்கள் எனும்
மந்தைக்கூட்டமே
எங்கணும் நாம் பார்க்கிறோம்.
கல் என்ற வினைச்சொல் மேலும் மேலும்
படி அறி தெரி தெளி
அப்புறம் தெறி
என்று ஒலிப்பதை
மறந்து
அதற்கு பொட்டிட்டு பூச்சூடி
குடமுழக்குகள் செய்து
கொட்டு முழக்குபவர்களே
இங்கு பெரும்பான்மை ஆகிப்போனார்கள்.
அதை வியாபாரமாக்கி விளம்பரமாக்கி
இன்னும் பெரிய கார்பரேட்டுகள் ஆக்கி
அதில் அரசியல் செய்து
ஓட்டுப்பெட்டிகளை
கொள்ளையடித்துப்போகும்
கூட்டங்கள் நம் முதுகுக்குப்பின்னே
மோப்பமிட்டு வருகின்றன.
இந்த சூழ்ச்சிக்காரர்கள்
தமிழ் நாட்டையே பலைவனமாக்கி
இந்தியா எனும் பெரும் நாட்டின்
ஒரு சுடுகாட்டு மாநிலமாய்
தமிழ்நாட்டை ஆக்கி விட திட்டம்
தீட்டுகிறார்கள்.
சாதி மத வெறியின் உள்  குத்துக்களை
அவர்கள்
ஆயுதமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
இந்த தமிழர்களோ
ஏதாவது ஒரு இலவசம் கிடைக்க‌
ஒரு கியூ கிடைத்தால் போதும்
அதில் போய் நின்று
கரையான் புற்றுகளாய் மாறி
தவம் கிடக்கிறார்கள்.
"வெறும் சோற்றுக்கோ வந்தது
இந்த பஞ்சம்" என்று
எரிமலைக்குழம்பை உமிழ்ந்த தமிழ்
இன்று மாற்றான்களின்
எச்சில்களாய் மாறிக்கிடக்கும்
அவலங்கள் எப்படி வந்தன?
தமிழனின் சுடர்வீசும் அறிவுக்கண்டமான‌
குமரிக்கண்டமே
அன்றொரு நாள் கடலில் மூழ்கியது!
அதன் மிச்ச சொச்சமாய்
இருக்கின்ற நம் நிலத்துண்டமும்
இன்னொரு குமரிக்கண்டமாய்
ஒரு "அறியாமைக்கடலில்" மூழ்கி
மறைந்து போய்விடுமோ
என்ற அச்சமே எங்கும் நிலவுகின்றது.
நம் உயிர் ஆதாரமான‌
"காவேரி"யே
காவு கொடுக்கப்பட‌
இந்த சுயநலக்கும்பல்கள்
கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கின்றன.
உண்மைத்தமிழனே
நீ பொங்க வேண்டிய தருணம் இது!
மொட்டை முனிய சாமிகளுக்கு
பொங்கல் வைத்து கெடா வெட்டி
ஆடிப்பாடும் நேரம் அல்ல இது!
விழிப்பாய் தமிழா!
எழுவாய் தமிழா!

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக