செவ்வாய், 27 மார்ச், 2018

ஒரு வெள்ளை ரோஜா

ஒரு வெள்ளை ரோஜா
====================================================ருத்ரா

பத்திரிகைகள்
பச்சைப்பொய்களின் காடுகள்.
தொலைக்காட்சிப்பெட்டிகள்
மக்களை தன் முன் உட்காரவைக்க‌
செய்யும்
கீரி பாம்பு விளையாட்டுகளின்
கூடைகள்.

பள்ளிகள் கல்லூரிகள்
உண்மையைத்தவிர‌
மற்ற எல்லாவற்றையும்
கற்றுத்தீர்ந்து
அப்புறம் வெளியே வந்து
கத்திச்சண்டைகள் போட்டு
எத்தனைத்தலைகளை வெட்ட முடியுமோ
அவ்வளவையும் வெட்டி
வென்று காட்டி
கொக்கரிப்பதற்கான‌
கட்டிடங்கள்.

ஒரு ரூபாய் முதலீடு போட்டு
ஒரு கோடி சம்பாதிப்பது எப்படி?

நீ தள்ளி முள்ளி ஓடுவதில்
உன் முரட்டுக்கால்களில்
சவட்டித்தள்ளுவதில்
எத்தனை எத்தனை கபாலங்கள்
குவிகின்றனவோ
அவையெல்லாம்
உன் ரத்னக்கல் பதித்த மகுடங்கள்.

எப்போதும்
தன் அண்டை மனிதர்களோடு
வில் அம்பு சகிதம்
வேட்டையாடிக்கொண்டிருப்பதே
உயர்ந்த பொருளாதாரம்.

இளைய தலைமுறை என்பது
நமக்குபின்னேயே
நம் முதுகை உரசி நிற்கும்
தலைமுறைகளின் தலைகளைக்கூட‌
சும்மா சீப்புகொண்டு
தலை சீவுவதுபோல்
சீவியெறிந்து முன்னேறுவது.

இதற்கு வைத்திருக்கும்
இவர்களின் விஞ்ஞானக்கருவிகள்
அகல அகலமான கைபேசிகள்.
அவற்றின் டிஜிடல் ரம்பப்பற்களில்
ஆயிரம் ஜிபி ரெண்டாயிரம் ஜிபி என்று
அசுரப்பசியெடுத்து
ஒன்பது கோடி மைல்கள் தூரத்தில் உள்ள
சூரியனைக்கூட‌
தர்ப்பூசணி பழமாய்
அறுத்துக் கூறுபோட்டுத் தின்ன துடிக்கும்
மின்னணு நாக்குகளின் வெறி.

ஓட்டுகள் எனும் பொய்களின்
நச்சு மழைகள்
ஒவ்வொரு தடவையும் அந்த‌
குண்டு சட்டிக்குள்
ஜனநாயகம் என்று
மூக்கைச்சிந்தி அழுகின்றன.
இந்த அடிமாடுகளுக்கு
"கோ பூஜைகள்" மட்டும் தடபுடல்.

இலவசம் என்றால் போதும்.
இமயமலைகளையும்
திருவள்ளுவர்களையும்
நம் "எட்டுத்தொகைகளையும்" கூட‌
ஒரு "தொகைக்கு"
அந்த குழிக்குள் போட்டு மூடிவிட‌
தயார்.

சாதி மதங்களின் மத்தாப்பு
கொளுத்தி
நம் சரித்திரங்களையே
சாம்பலாக்கத்துடிக்கும்
வெறிகளின் கொடும்புயல்
ஒன்று மையம் கொண்டிருக்கிறதே!
அதைப்பற்றி
கொஞ்சமும் ஓர்மையில்லாத‌
மந்தைகள் அதோ ஓடுகின்றன.

ஏன் இப்படி எதிர்மறையாய்
எழுதிக்கொண்டு போகிறீர்கள்?
எதற்கு இந்த அவநம்பிக்கையின்
சுடுகாட்டுக்குட்டிச்சுவர்களில்
உட்கார்ந்து கொண்டு ஒப்பாரிகள்
என்று
நீங்களும் ஒரு இனிய ஒப்பாரியை
ஏதோ ஒரு டிவியின்
சூப்பர் சிங்கர்த்தனமான ஆர்கெஸ்ட்ராக்களில்
அறைந்து அறைந்து
குரலெழுப்புவது புரிகிறது.

பாசிடிவ் நம்பிக்கையாய்
ஒரு வெள்ளைரோஜாவை ஏந்திக்கொண்டு
செல்லத்துவங்கிய மனிதர்களும்
உண்டு..
ஆனால் அவர்கள்
இப்போது நிற்பது
எந்த பாலைவனமோ
தெரியவில்லை.
சுற்றிலும்
மணல் மணல் மணல்...மணல்.
அதனுள்ளே
உயிரற்ற கூடுகள்.
மொழியற்ற ஓடுகள்.
கூழ்ச்சதைகள் கூட
அப்படியே உறைந்து விறைத்து
எழுதிவைத்திருக்கும்
ரகசியங்கள்.
அவற்றின் துருத்திய
கால் கை எலும்புகள் மட்டும்
வெளியே ஏதோ அடையாளங்களாய்...
எங்கும்
மணல்...மணல்...மணல்.
இவையே மனித சரித்திரங்கள்!

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக