வியாழன், 8 மார்ச், 2018

மகளிர் தினம்

மகளிர் தினம்
==============================ருத்ரா

தெருப்புழுதி கூட‌
அரிதாரத்தைப் பூசிக்கொண்டது.
இன்று மகளிர் தினம்

____________________________________


சட்டம் ஒழுங்கு எனும்
"கருப்பணசாமிக்கு" பலியிட‌
அந்த கர்ப்பிணிப்பெண் (உஷா) தான்
கிடைத்தாளா?

_____________________________________


கடவுள் பாதியை கொடுத்துவிட்டார்.
இந்த மனிதன் அந்த 33 சதவீதத்துக்கும்
300 ஆண்டுகள் தவணை கேட்கின்றான்!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________

தினம் தினம் சில்லரையாய்
நரகம் தான் பெண்களுக்கு!
இன்று மட்டும் தோ"ரண"ங்களா?

_______________________________________

பெண்கள் என்றால் கவிஞர்களுக்கு
"வெள்ளாவியில்"
வேகவைக்கப்பட்டவர்களாத் தான் வேண்டும்.
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு
இவர்களுக்கு
இரவில் விளையாட
இந்த "மரப்பாச்சிகள்" தான் வேண்டும்!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________________

பெண்ணே
நீ சீற்றம் கொள்ளத்தான் வேண்டும்.
இனி புயல்களைத்தான்
கர்ப்பம் தரிக்க வேண்டும்.
இந்தப் "பயல்களை" அல்ல.
இவர்கள் உன்னிடம்
பிறக்கும்போதே உனக்கு
கொண்டுவருவது
உன் பொன்விலங்குகளைத்தான்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________

யோசித்துப்பார்
ஆணாத்திக்கம் உன் கருவிலிருந்து தான்
உரு பிடிக்கிறது.
உன் காதல் வானத்திலேயே
இந்த "கற்றாழைகளின்"
முட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________

பூக்களும்
பட்டாம்பூச்சிகளும்
உன்னை புழுவாக்கவே
கவர்ச்சி காட்டுகின்றன.
நிலாக்களும் விண்மீன்களும்
சொற்களில் தேனூற்றி
உன்னை இருட்டுக்கடலில்
மூழ்கடிக்கலாம்.
உன் அறிவு உன் ஆயுதம்.
உணர்ச்சிகளை
அறிவின் சல்லடையில் இட்டு
உன் "ஷவர்" ஆக்கிக்கொள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக