வெள்ளி, 23 மார்ச், 2018

நான் நான் என்று....

நான் நான் என்று....
===================================ருத்ரா

நான் நான் என்று துருத்திக்கொண்டே இரு.
இல்லாவிட்டால் துருப்பிடித்து விடுவாய்.
“நான்” யார் என்று ஆத்மீக மழுங்கடிப்பில்
மடங்கிப்போய் விடாதே.
நான் எனும் உன் முனை
பிரபஞ்சத்தின்
அந்தப்பக்கம் வரை செல்லும்.
குறுக்கிடும் எதுவும்
உன் நட்பே.
ஊடுருவு.
உள் துளை.
நியூட்ரினோ எனும்
நியூட்ரானின் நுண்பிஞ்சு
எத்தனை உலகங்களை
அடுக்கி வைத்தாலும்
ஊடுருவும் என்று
சொல்கிறான் விஞ்ஞானி.
ஒரு சாணி உருண்டையைப்பிடித்து
உன் எதிரே
அடையாளப்படுத்தி வைத்துக்கொண்டு
உன் “நெட்டுருக்களை”
“ஓங்கரிப்பதில்”
ஆயிரம் ஆண்டுகள்
நரைத்துப்போய் தொலைந்தும் விட்டன.
சூரிய உதயம்
கடலிலும் மலையிலும் காட்சிகொடுப்பது இருக்கட்டும்.
அது எப்போது
உன் நம்பிக்கை அலைகளிலும்
உன் எண்ண அடுக்குகளிலும்
தலை காட்டுவது.
இந்த காற்று மலை மழை எல்லாமே
நீ என்று நனை.
நாளை எனும் எம் எம் ஃபோம்
உனை படுக்கவைக்க‌
உன் இமையோரம் கனவு நங்கூரங்களை
எறிகின்றது.
நீ என்பவன் எப்போதும் “இன்று” தான்
நீ நாளைக்குள் புகுந்துகொள்வதானாலும்
உன் தோள்மீது
எப்போதும்
தொங்கிக்கொண்டிருக்கவேண்டும்
“இன்று”
இது எப்போதோ இறந்து போய்
நேற்றுகளாய் அழுகிய நிலையிலும்
இன்று எனும் உன்
உயிர்ப் பாக்டீரியாக்கள்
எத்தனை கோடிஆண்டுள் என்றாலும்
பனி ஃபாசில்களில்
உன் சாட்சியை காட்டிக்கொண்டே
இருக்கும்.
சம்ப்ரதாயங்கள் எனும்
பிணங்கள்
பெரும் பாறைகளாய்
உன் கழுத்தைக்கட்டிக்கொண்டு
சங்கிலியில் உன்னை
இடறிக்கொண்டிருக்கிறது.
இந்த‌
எல்லாவற்றிலிருந்து
விடுதலையாகும்
இலக்கணச்சொற்களே
“நான்” “நீ” என்பது.
ஒன்றின் அர்த்தம் இன்னொன்று.
வெற்றிடம் இருக்கிறதே
என்று
அதை கடவுள்களால் இட்டு நிரப்பதே.
வெற்றிடம் தான்
ஆற்றலின் கருவுக்கெல்லாம் கரு.
விழித்துக்கொள் போதும்.

=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக