சனி, 31 மார்ச், 2018

பிச்சை நன்றே பிச்சை நன்றே



பிச்சை நன்றே பிச்சை நன்றே
============================================ருத்ரா

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
இந்த மூதுரை மொழிகள்
இன்று மூச்சிழந்து போயின.
"பிச்சை நன்றே பிச்சை நன்றே..நம்
கோவணம் இழந்தாவது பிச்சை நன்றே.
கோவணம் என்பது நம்
ஓட்டுகள்!
இன்று
நாம் தெரிந்த புதுமொழிகள்
இவை மட்டுமே.
தமிழ் தமிழன் என்றெல்லாம்
உணர்ச்சியை கொப்பளிக்கின்றவர்கள்
வெறும் கோமாளிகள் என்று
கொக்கரிக்கின்ற தமிளர்கள் எனும்
மந்தைக்கூட்டமே
எங்கணும் நாம் பார்க்கிறோம்.
கல் என்ற வினைச்சொல் மேலும் மேலும்
படி அறி தெரி தெளி
அப்புறம் தெறி
என்று ஒலிப்பதை
மறந்து
அதற்கு பொட்டிட்டு பூச்சூடி
குடமுழக்குகள் செய்து
கொட்டு முழக்குபவர்களே
இங்கு பெரும்பான்மை ஆகிப்போனார்கள்.
அதை வியாபாரமாக்கி விளம்பரமாக்கி
இன்னும் பெரிய கார்பரேட்டுகள் ஆக்கி
அதில் அரசியல் செய்து
ஓட்டுப்பெட்டிகளை
கொள்ளையடித்துப்போகும்
கூட்டங்கள் நம் முதுகுக்குப்பின்னே
மோப்பமிட்டு வருகின்றன.
இந்த சூழ்ச்சிக்காரர்கள்
தமிழ் நாட்டையே பலைவனமாக்கி
இந்தியா எனும் பெரும் நாட்டின்
ஒரு சுடுகாட்டு மாநிலமாய்
தமிழ்நாட்டை ஆக்கி விட திட்டம்
தீட்டுகிறார்கள்.
சாதி மத வெறியின் உள்  குத்துக்களை
அவர்கள்
ஆயுதமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
இந்த தமிழர்களோ
ஏதாவது ஒரு இலவசம் கிடைக்க‌
ஒரு கியூ கிடைத்தால் போதும்
அதில் போய் நின்று
கரையான் புற்றுகளாய் மாறி
தவம் கிடக்கிறார்கள்.
"வெறும் சோற்றுக்கோ வந்தது
இந்த பஞ்சம்" என்று
எரிமலைக்குழம்பை உமிழ்ந்த தமிழ்
இன்று மாற்றான்களின்
எச்சில்களாய் மாறிக்கிடக்கும்
அவலங்கள் எப்படி வந்தன?
தமிழனின் சுடர்வீசும் அறிவுக்கண்டமான‌
குமரிக்கண்டமே
அன்றொரு நாள் கடலில் மூழ்கியது!
அதன் மிச்ச சொச்சமாய்
இருக்கின்ற நம் நிலத்துண்டமும்
இன்னொரு குமரிக்கண்டமாய்
ஒரு "அறியாமைக்கடலில்" மூழ்கி
மறைந்து போய்விடுமோ
என்ற அச்சமே எங்கும் நிலவுகின்றது.
நம் உயிர் ஆதாரமான‌
"காவேரி"யே
காவு கொடுக்கப்பட‌
இந்த சுயநலக்கும்பல்கள்
கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கின்றன.
உண்மைத்தமிழனே
நீ பொங்க வேண்டிய தருணம் இது!
மொட்டை முனிய சாமிகளுக்கு
பொங்கல் வைத்து கெடா வெட்டி
ஆடிப்பாடும் நேரம் அல்ல இது!
விழிப்பாய் தமிழா!
எழுவாய் தமிழா!

==========================================================


வியாழன், 29 மார்ச், 2018

காவேரி


காவேரி
==============================ருத்ரா

போதும் ஆடுபுலி ஆட்டம்.
ஓட்டு வங்கியை
காவேரியில் பதுக்கி வைத்து
இங்கே
எத்தனை முகமூடிகள்?
அவன் தான் காரணம்.
இல்லை
இவன் தான் காரணம்.
அந்தக்கட்சியின் துரோகம் இது.
இந்தக்கட்சியின் கையாலாகாத தனம் இது.

எது எப்படியோ
வெள்ளம்போல வருகிற தண்ணீரை
வரப்புகளும் மொட்டைவாய்க்கால்களும்
எச்சில் படுத்தியது போக‌
எல்லாம் கடலுக்குள் சமாதியாகவிட்டு
வறண்ட காலத்தில்
ஒப்பாரி வைக்கும்
விவசாயிகளின் அறிவுநுட்பம் அற்ற‌
கையறு நிலை இது.

மற்றும்
டெல்லியே காரணம்.
அதுவும் இந்த
காவிரியைப்பார்க்கிறது
வேறு கண்ணில் பார்க்கிறது.
கற்பனையில்
மதவெறி சுழித்து ஓடும்
ரத்தங்களின் ஆறாய்.

கர்நாடகமும் தமிழ்நாடும்
நூறு கைள் முளைக்க
அந்த நூறுகைகளையும்
முறுக்கிக்கொண்டு
பாகுபாலி கணக்காய்
வாள்வீசி ரத்தம் குடித்து
அரசியல் சினிமா
அரங்கேற்றம்
நடத்தும் காட்சி இது.

இந்த மனிதர்கள் எல்லாம்
முகமூடி கழற்றி ஒரு நாள்
அந்த நீரையாவது குடிக்கலாமா
என்று தவியாய் தவிப்பார்கள்
ஆம் அது..
தங்கள் சிறுநீரையே.

அப்போது காவிரி வறண்டு
அதன் ஊற்று தூர்ந்து
பாலைநிலம் மட்டுமே
அவர்கள் காலடியில் இருக்கும்.
மக்களின் மற்றும்
கால்நடைகளின்
எலும்புக்கூடுகளின் குப்பையே
அங்கு சிதறிக்கிடக்கும்.

=================================================



ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா?
===========================================ருத்ரா

"இன்றொரு நாள் போதுமா?"
இது டி.எஸ்.பாலையா பாடும் பாட்டல்ல.
நம் தமிழ்நாடு படும் பாடு.
காவிரி பூம்பட்டினம் நம்மிடம் இருக்கிறது.
கரிகாலனின் கல்லணையும்
காவேரியின் சாட்சியாக‌
ஈராயிரம் ஆண்டுகளாக‌
நம் தமிழின் உயிரின்
ஆவணமாக இருக்கிறது.
சிலம்பு ஒலிக்கிறது.
அதன் அக்கினி வரிகளில்
நம் காவிரி எனும் உண்மை
எழுத்தெல்லாம் தகிக்கிறது.
ஆனால்
காவிரி மட்டும் நமக்கு இல்லை
என்று சொல்லாமல் சொல்ல‌
அல்லது
"வெறும் கையை முழம் போடுவது போல்"
மேலாண்மை வாரியத்தின் மேல்
இன்னொரு மேல் பூச்சு பூசப்பட‌
பொம்மை வாரியம் இருக்கப்போகிறது
என்று
அறிவிக்கை செய்யப்போகும்
டில்லி மட்டுமே இங்கு இருக்கிறது..
காவேரி இங்கு இல்லை!
ஒரு நாள்
ஒரு நாள் ...என்று
சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
அந்த விநாடிமுட்கள் குத்திக்கிழிக்கும்
காலச் சக்கரத்தின் அடியில்
காவேரியும் நாமும்
கூழாகிக்கொண்டிருக்கிறோம்.
மத்திய சர்க்காருக்கு
தீர்ப்பின்  சம்மட்டி அடி விழுந்த போதும்
ஏதோ
ஒரு தேர்தலின்
சாணக்கியத்திற்காக
சில தந்திர வார்த்தைகள் கொண்டு
அவர்கள்
நம் நெஞ்சின் மீதே "ரோடு ரோலர்களாய் "
சொக்கட்டான்கள் உருட்டுகிறார்கள்.
ஆனால்...
இங்கே
அவருக்கு நூற்றாண்டு விழா
இவருக்கு பிறந்த நாள் விழா
என்று
"அட்டை செட்டிங்கில்"
ஆண்டுகொண்டிருப்பவர்கள்
கொஞ்சமும் கவலையின்றி
இன்னும் கொஞ்ச நாளில்
விழா எடுப்பார்கள்!
சிலை எடுப்பார்கள்!
ஆம்
வெறும் சிலையாக எஞ்சி விடப்போகும்
நம் காவிரி அன்னைக்கு
சிலை மட்டுமே எடுப்பார்கள்.
காவிரி இனி
நம் கண்களில் மட்டுமே
இத்தனை டி  எம் சி கண்ணீர்
அத்தனை டி எம் சி கண்ணீர்
என்று
புள்ளி விவரம்
சொல்லிக்கொண்டிருக்கும்.

=============================================================

புதன், 28 மார்ச், 2018

அண்ணே அண்ணே (1)

அண்ணே அண்ணே (1)
‍‍‍============================================ருத்ரா

"சொடக்கு மேலே..."

"ஏண்டா! சினிமாப்பாட்டெல்லாம் தூள் பறக்குது..."

"அட! போங்கண்ணே.."

"ஏண்டா சலிச்சுக்கிறே?"

"எங்கே...இதுக்குமேலே சொடக்கு போட்டு பாரு..என்ன நடக்கும் தெரியும்ல.. கடப்பாரைய வச்சு நெம்பினாலும் ஒண்ணும் இங்கே கவிழாது.. ஜாக்கிரதை"ன்னு கடப்பாரைய தூக்கி கிட்டு திமு திமுன்னு வந்துட்டாய்ங்கண்ணே.."

"அது சரி .நீ ஏண்டா சொடக்கு போட்டே?"

"அதாண்ணே...நீங்களே சொல்லிட்டீங்களே.தூள் பறக்குதுண்ணு..
ஆமாண்ணே.. ஒரு சிட்டிகை பட்டணம் பொடி எடுத்து போடலாம்ணு தான் "சொடக்கு மேலே"ண்ணு பாட ஆரம்பிச்சேன்."

"போடா...ங்ங்.  நீயும் உன் பாட்டும்."பொடி மட்டை"த்தலையா..
ஓடிப்போய்டு....."

(இவர் கையை ஓங்க...அவர் ஓடிவிடுகிறார்)

================================================================
(நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது)
 பொழிப்புரையுடன்  "சுள்ளியம் பேரியாற்றுவெண்நுரை
  ===========================================================ருத்ரா



 சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை

  ==========================================ருத்ரா

சிலம்பி வலந்த பொரிசினை ஓமைக்
கான்செறி முள்ளிய பரல்வெங்காட்டின்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை திரங்கிய
வரி வரி சுழிநீர் வந்து வந்து அலைப்ப‌
அகல்திரைப் பௌவம் ஆழத்திருந்து
வாட்சுறா போழ்ந்த கொடுவாய் அன்ன‌
உடலும் தின்னும் உள்ளும் தின்னும் அவ்
உடல் ஊறு நோயும் உள்சுடு நோயும்
நோன்றல் ஆற்றிய பின்னை எஞ்சும்
என்பு நெய்த கூடு உயிரிழை நைந்து!
தழல் உண்டவள் போலும் எரிந்தேன்
ஆயினும் அஃது வான் ஈர் தண்மழை.
தகரத்துச் சாந்தின் ஒள்ளிய‌ ஞெகிழி
உன் கூடல் உள்ளிய களிப்பின் செத்து
இன் தீ காட்டும் இமிழ்தரும் நின்பெயர்.
புல்வேய் குரம்பை போர்த்த குடுமியில்
நறவுபெய் நடுநிலா பூக்கள் தடவி அவன்
உறவு காட்டும் அம்மவோ பெரிதே.

================================================================




"சுள்ளியம் பேர் ஆறு"  - பாடல் குறித்து



அகநானூறு "களிற்றியானை நிரை" தொகுதியில் 149 ஆம் பாடல் "எருக்காட்டூர் தாயங்கண்ணனார்" என்னும் ஆழ்ந்த புலமையுள்ள‌ சங்கத்தமிழ்  புலவரால் பாடப்பட்டது. அவர் அதில் சேரநாட்டு ஆறான‌ "சுள்ளியம் பேர் ஆறு" அலையெழுப்பிக்கொண்டு வெள்ளிய நுரைப்பூக்களை அகலப்பரப்பிக்கொண்டு ஓடும் "அழகை "சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க" என்று சிறப்புற எழுதியிருக்கிறார். அந்தச் சொற்றொடர் ஏதோ நம்மை அந்த ஆற்றில் ஒரு படகில் ஏற்றி அது வெண்நுரைப்படலம் கிழிபடச் சென்று கொண்டிருப்பதைப்போலவே உணர்ந்தேன். அந்த சொற்றொடரைத் தலைப்பாக்கி எழுதிய ஒரு சங்கநடைச் செய்யுட்கவிதையே இந்த "சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை" ஆகும்.



இந்தப்பாடலில் தலைவனைப்பிரிந்து வாடும் தலைவியின்"பிரிவுத்துயரம்" தான் விவரிக்கப்படுகிறது.


பொழிப்புரை:



சிலம்பி வலந்த பொரிசினை ஓமைக்

கான்செறி முள்ளிய பரல்வெங்காட்டின்

சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை திரங்கிய

வரி வரி சுழிநீர் வந்து வந்து அலைப்ப‌



தலைவன் பொருள்தேடிச்செல்லும் காடும் ஆறும் தான் தலைவியின் கண்முன்னே வருகின்றன.ஓமை மரங்கள் அடர்ந்த அந்தக்காட்டில் சிலந்திகள் நூல்கள் பின்னும் சுள்ளிகளாய் இருக்கும் கிளைகளேஅதிகம் உள்ளன.அந்த முட்காட்டில் பருக்கைக்கற்கள் காலில் இடறுகின்றன. அந்தக்காட்டில் "சுள்ளியம் பேராறு" வெண் நுரை பூத்து ஆற்றுநீர்ப்பரப்பில் சுருக்கங்கள் போன்ற (திரங்கிய) சிற்றலைகளை உருவாக்குகின்றன.அவை சுழித்து சுழித்து வரி வரிகளாய் அவளைச்சுற்றியே வந்து அலைக்கழிப்பது போல் துயரம் கொள்கிறாள்.



அகல்திரைப் பௌவம் ஆழத்திருந்து

வாட்சுறா போழ்ந்த கொடுவாய் அன்ன‌

உடலும் தின்னும் உள்ளும் தின்னும் அவ்

உடல் ஊறு நோயும் உள்சுடு நோயும்

நோன்றல் ஆற்றிய பின்னை எஞ்சும்

என்பு நெய்த கூடு உயிரிழை நைந்து!



அகன்ற பேரலைகள் தளும்பும் கடலின் அடி ஆழத்திலிருந்து சுறா மீன்கள் வருகின்றன.கூரிய கொம்பு உடையச் சுறாமீன்கள் வாய்கள் பிளப்பது போல் அந்தக் காதல் நோய் அவளை விழுங்க முனைகிறது என்கிறாள் தலைவி. அந்நோய் அவள் உடலில்ஊறி உள்ளத்துள் சூடு ஏற்றுகிறது.இப்படி இந்நோய் என்னைச் சிதைத்த பின் என் நைந்த உயிரிழைகொண்டு நெய்யப்பட்ட என் எலும்புக்கூடுதான் மிஞ்சும் என்கிறாள்.



தழல் உண்டவள் போலும் எரிந்தேன்

ஆயினும் அஃது வான் ஈர் தண்மழை.

தகரத்துச் சாந்தின் ஒள்ளிய‌ ஞெகிழி

உன் கூடல் உள்ளிய களிப்பின் செத்து

இன் தீ காட்டும் இமிழ்தரும் நின்பெயர்.



அவள் சொல்கிறாள்: நெருப்பையே உண்டுவிட்டவள் போல் ஆனேன்.இருந்தாலும் எனக்குள் அவன் நினைவு வானத்தைப் பிளந்து கொட்டும் குளிர்மிக்க மழையாகத்தான் (வான் ஈர் தண்மழை) இருக்கிறது.மணம் பொருந்திய சந்தன மரத்தை வெட்டி எரித்த ஒளிமிக்க நெருப்பின் கொழுந்தாக சுடர் வீசுகிறது."உன்னோடு இன்புற்றுக் களிப்பாக இருந்தது போல் எண்ணி (களிப்பின் செத்து) இந்த இனிய தீயையும் உணர்கிறேன்.இது உன்னைத்தான் எனக்குக் காட்டுகிறது.உன் பெயரின் ஒலி கூட அதில் கேட்கிறது."


புல்வேய் குரம்பை போர்த்த குடுமியில்

நறவுபெய் நடுநிலா பூக்கள் தடவி அவன்

உறவு காட்டும் அம்மவோ பெரிதே.



புல்லில் வேயப்பட்ட சிறு வீடுகள் சூழ்ந்த அந்த மலை உச்சியில் நடு இரவின் நிலா ஒளி பொழிகிறது.அது ஒரு மயக்கம் தரும் இனிய தேன்மழையை தூவுகிறது.அது பூக்களை வருடி ஒளி பூசுகிறது. அதில் என் தலைவனின் காதல் உறவு எவ்வளவு பெருமை மிக்கதாய் மிளிர்கிறது!


=====================================================ருத்ரா

செவ்வாய், 27 மார்ச், 2018

தமிழருவி அவர்களே

தமிழருவி அவர்களே
============================================ருத்ரா


நீங்கள் ஒலிப்பதில்
எந்த தமிழும் இல்லை.
எந்த அருவியும் இல்லை.
காந்திஅடிகளை
ரஜனி எனும் நடிகருக்கு
ஒப்பிடுவதன் மூலம்
ஏதோ ஒரு அதல பாதாளத்தில்
நீங்கள் விழுந்து கிடப்பதாக‌
தெரிகிறது.
ஆம்.
உங்கள் பேச்சில்
கூவம் தான் சலசலக்கிறது.
ரஜனியை முதல்வராக கூப்பிட சொல்லி
ரசிகர்களை
உசுப்பேற்றிவிடுவதில்
உங்களுக்கு யாரோ
பக்கத்தில் இருந்து
கோலி சோடா உடைத்துக்கொடுத்து
உசுப்பேற்றி விடுகிறார்கள்.
ரஜனியைப்பற்றி
"அணில் ஆடு இலை ஈட்டி.."
என்று
பாப்பா பாடம் சொல்வதோடு
நிறுத்திக்கொள்ளுங்கள்.
காந்தியடிகளின்
ஆத்மிகத்தில்
விடுதலைக்கான வீரம் இருந்தது.
இந்த பாபாவோ
படப்பிடிப்புகளில் தான்
கூடு கட்டிக்கொண்டிருக்கிறார்.
இவர்
அட்டையில் கட்டும்
அரசியலில்
முளைக்கும் விடியலும்
வெறும் "லேசர்"விளையாட்டுகள் தான்.
தமிழருவி அவர்களே
உங்கள் பெயரில் உள்ள‌
தமிழை யாருக்கும் அடகு வைக்கவேண்டாம்.
அந்த "தமிழ்" தமிழர்களுக்கு
மட்டுமே உரியது.
அதை கழற்றித்தந்துவிடும்
நேரம் இப்பொழுது உங்களுக்கு
வந்து விட்டது.

=================================================

ஓலையின் ஒலிகள் (3)

மணங்கமழ் ஐம்பால் மடந்தை
================================================ருத்ரா
ஓலையின் ஒலிகள் (3)


வெய்ய வறுக்கும் வெம்மை நெடுவெயில்
சுனைதொறும் ஊச்சும் அவல் நிறை நிலனே
வெள் வெள் வெரூஉ தர பாழ்படு சுரத்திடை
நெடும்புல் புதைபு கடுங்கண் உழுவை
புல்லென சிற்றசை சில்வரி காட்ட‌
அவ்வேங்கை தொலைச்சுமுன் அண்ணிய யாவும்
அகல்நெடும் விசையில் கதழ்பரி செய்யும்.
கலிமாக் கூட்டம் விடைசெவி முடுக்கி
கடுகியே அகலும் அக்கானத்தில் ஆங்கு ஒரு
பொறிமா அலமரும் கையறு நிலையில் தன்
மென் தோல் சிலிர்த்து கண்கள் உதிர்த்தன்ன‌
விரையும் ஒடுங்குயிர் காட்சிகள் மலியும்.
முருக்கின் நிவந்த செம்பூ பெயல் மழை
ஊழ்த்த தீயின் உருவம் ஒக்கும்.
சூர் அம் காட்டின் கடுவளி ஆர்க்கும்
பேஏய் ஓசை எதிர்தரப் போந்தும்
கழை வெட்கும் தோளன் மயங்குவன் அல்லன்.
காந்தள் கைவிரல் வருடித் தரூஉம்
மழைக்கண் அரிவைத் தீண்டல் உய்த்து
மணங்கமழ் ஐம்பால் மடந்தை
அருவிய கூந்தல் தழீஇய பொழுதின்
பொலங்கிளர் காலையும் உள்ளி மீளும்
ஐய நின் வெண்மணற் குன்றம் அன்ன‌
சிற்றரண் சிதையா நிற்கும். விரைவுமதி ஆர்க்க!
உள்ளம் தளும்பும் அலைகள் சமஞ்செய்.
அவள் நெகிழ் வளை மீட்டுதி.உன் தேர்மணிக்
கலிமாக்  கதழ்பரிய  விரைதி!விரைதி !

====================================================



ஒரு வெள்ளை ரோஜா

ஒரு வெள்ளை ரோஜா
====================================================ருத்ரா

பத்திரிகைகள்
பச்சைப்பொய்களின் காடுகள்.
தொலைக்காட்சிப்பெட்டிகள்
மக்களை தன் முன் உட்காரவைக்க‌
செய்யும்
கீரி பாம்பு விளையாட்டுகளின்
கூடைகள்.

பள்ளிகள் கல்லூரிகள்
உண்மையைத்தவிர‌
மற்ற எல்லாவற்றையும்
கற்றுத்தீர்ந்து
அப்புறம் வெளியே வந்து
கத்திச்சண்டைகள் போட்டு
எத்தனைத்தலைகளை வெட்ட முடியுமோ
அவ்வளவையும் வெட்டி
வென்று காட்டி
கொக்கரிப்பதற்கான‌
கட்டிடங்கள்.

ஒரு ரூபாய் முதலீடு போட்டு
ஒரு கோடி சம்பாதிப்பது எப்படி?

நீ தள்ளி முள்ளி ஓடுவதில்
உன் முரட்டுக்கால்களில்
சவட்டித்தள்ளுவதில்
எத்தனை எத்தனை கபாலங்கள்
குவிகின்றனவோ
அவையெல்லாம்
உன் ரத்னக்கல் பதித்த மகுடங்கள்.

எப்போதும்
தன் அண்டை மனிதர்களோடு
வில் அம்பு சகிதம்
வேட்டையாடிக்கொண்டிருப்பதே
உயர்ந்த பொருளாதாரம்.

இளைய தலைமுறை என்பது
நமக்குபின்னேயே
நம் முதுகை உரசி நிற்கும்
தலைமுறைகளின் தலைகளைக்கூட‌
சும்மா சீப்புகொண்டு
தலை சீவுவதுபோல்
சீவியெறிந்து முன்னேறுவது.

இதற்கு வைத்திருக்கும்
இவர்களின் விஞ்ஞானக்கருவிகள்
அகல அகலமான கைபேசிகள்.
அவற்றின் டிஜிடல் ரம்பப்பற்களில்
ஆயிரம் ஜிபி ரெண்டாயிரம் ஜிபி என்று
அசுரப்பசியெடுத்து
ஒன்பது கோடி மைல்கள் தூரத்தில் உள்ள
சூரியனைக்கூட‌
தர்ப்பூசணி பழமாய்
அறுத்துக் கூறுபோட்டுத் தின்ன துடிக்கும்
மின்னணு நாக்குகளின் வெறி.

ஓட்டுகள் எனும் பொய்களின்
நச்சு மழைகள்
ஒவ்வொரு தடவையும் அந்த‌
குண்டு சட்டிக்குள்
ஜனநாயகம் என்று
மூக்கைச்சிந்தி அழுகின்றன.
இந்த அடிமாடுகளுக்கு
"கோ பூஜைகள்" மட்டும் தடபுடல்.

இலவசம் என்றால் போதும்.
இமயமலைகளையும்
திருவள்ளுவர்களையும்
நம் "எட்டுத்தொகைகளையும்" கூட‌
ஒரு "தொகைக்கு"
அந்த குழிக்குள் போட்டு மூடிவிட‌
தயார்.

சாதி மதங்களின் மத்தாப்பு
கொளுத்தி
நம் சரித்திரங்களையே
சாம்பலாக்கத்துடிக்கும்
வெறிகளின் கொடும்புயல்
ஒன்று மையம் கொண்டிருக்கிறதே!
அதைப்பற்றி
கொஞ்சமும் ஓர்மையில்லாத‌
மந்தைகள் அதோ ஓடுகின்றன.

ஏன் இப்படி எதிர்மறையாய்
எழுதிக்கொண்டு போகிறீர்கள்?
எதற்கு இந்த அவநம்பிக்கையின்
சுடுகாட்டுக்குட்டிச்சுவர்களில்
உட்கார்ந்து கொண்டு ஒப்பாரிகள்
என்று
நீங்களும் ஒரு இனிய ஒப்பாரியை
ஏதோ ஒரு டிவியின்
சூப்பர் சிங்கர்த்தனமான ஆர்கெஸ்ட்ராக்களில்
அறைந்து அறைந்து
குரலெழுப்புவது புரிகிறது.

பாசிடிவ் நம்பிக்கையாய்
ஒரு வெள்ளைரோஜாவை ஏந்திக்கொண்டு
செல்லத்துவங்கிய மனிதர்களும்
உண்டு..
ஆனால் அவர்கள்
இப்போது நிற்பது
எந்த பாலைவனமோ
தெரியவில்லை.
சுற்றிலும்
மணல் மணல் மணல்...மணல்.
அதனுள்ளே
உயிரற்ற கூடுகள்.
மொழியற்ற ஓடுகள்.
கூழ்ச்சதைகள் கூட
அப்படியே உறைந்து விறைத்து
எழுதிவைத்திருக்கும்
ரகசியங்கள்.
அவற்றின் துருத்திய
கால் கை எலும்புகள் மட்டும்
வெளியே ஏதோ அடையாளங்களாய்...
எங்கும்
மணல்...மணல்...மணல்.
இவையே மனித சரித்திரங்கள்!

====================================================

சனி, 24 மார்ச், 2018

ராம ராஜ்ஜியம்

ராம ராஜ்ஜியம்
=====================================ருத்ரா

ராமன் என்றால் அழகானவன்.
ராமன் என்றால் அறிவானவன்.
ராமன் என்றால் ஒழுக்கமுள்ளவன்.
ராமன் என்றால் நல்லவன்.
இன்னும் இன்னும்
"ராமன் எத்தனை ராமனடி?"
என்றெல்லாம்
பக்தியின் இன்னிசை ஒரு தேன்மழையில்
நம்மைக்குளிப்பாட்டும்.
அப்படியென்றால்ராமராஜ்யம்
உலகத்திலேயே சிறந்த ஜனநாயக‌மா?
ஒரு மனிதனாக அவதாரம் எடுத்த கடவுளே
ராமன் என்றால்...
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான்
என்று காட்ட வந்தவரே
ராமன் என்றால்...
அவர் ஏன் வில்லும் அம்பும் ஏந்திநிற்கும்
சத்ரியராக வரவேண்டும்?
கீழ் சாதிக்காரன் ஒருவன்
த‌ன் மனைவியை "பழி" சொல்லிவிட்டான்
என்று தன் மனைவியை
தீக்குளிக்கச்சொன்னவனின்
சினத்தீ யாரை நோக்கிச்சுட்டெரித்தது?
அவன் மீட்டுக்கொண்டு  வரும் வரை
அவள் அசோக வனத்தில்
மாற்றான் மன்னனின் சிறையில் இருந்தது
ஊரறிந்த ரகசியம் தானே!
ஒரு கீழ் சாதிக்காரன் அந்த
வினாவை எழுப்பியது தான்
"கடவுளாய்" அவதரித்த அந்த
சாதிமுறை வார்ப்புகளில் உருவாக்கப்பட்ட‌
அந்த சத்ரிய குலத்தானுக்கு
பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
வர்ணாசிரமம் "கடவுள்"களையே
கசாப்பு செய்யத்தயாராய் இருந்தது.
ராமன் எத்தனை ராமனடி என்கிறார்களே
ராமன் ஒரு சேரிச்சிறுவனாயிருந்து
அவனும் எப்படியோ குருகுலத்தில் வந்து
வேத வாக்கியங்களைக்கேட்டிருந்தால்
அவன் காதிலும் ஈயத்தை காய்ச்சி
ஊற்றியிருப்பார்களே!
மனிதனை மனிதன் சுரண்டும்
இந்த கேவலமான சாதிமுறைகள்
புனிதப்படுத்தப்படவா
கடவுள்கள் இங்கே அவதாரம் செய்தனர்?
ராமராஜ்யம் என்று
நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை
காங்கிரஸ்காரரான "காந்திஜி"சொன்னதுதானே
என்று
தந்திரமாய் முழங்குபவர்களே
அந்த காந்தியைத்தின்ற‌
துப்பாக்கிக்குண்டுகள் உங்கள்
"கோட்சே"வினுடையவை தானே.
முன்பு இந்த ரதம் நின்றுவிட்டபிறகு தான்
பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அப்படி நீங்கள் டில்லி வரைக்கும்
கொண்டு சென்று நிறுத்தினால்
எதுவாவது இடிக்கப்படவேண்டுமே
எங்கள் அச்சம் எல்லாம் இது தான்.
அங்கே தான்
ஜனநாயகத்தின் உறைவிடமான‌
பாராளுமன்றம் இருக்கிறது!

===============================================================




கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்

கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
==================================================ருத்ரா
ஓலையின் ஒலிகள் (2)


அரைநாட் கங்குல் அன்ன நுதலிய
நெடுவான் ஏறி நிறைமதி சூடும்
ஒளியிழை ஏந்தி மன்றல் நோக்கும்
மடமை ஒக்கும் முகம் திருத்திய‌
கண்டாய் என்னை. என்சொல் விதிர்ப்பாய்?
ஆறலை மள்ளர் அடுபசி ஆற்ற‌
அம்தூம்பு கொடிச்சுரை ஊண் கொண்டாங்கு
கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
பொறிநிழல் தூஉய் கண்கள் படுக்கும்
வெள்ளிடை போழ் விரைபசும்பாசிடை
நனந்தலை ஆங்கு களவு மயக்கிய‌
காலை களிகூர கலந்தனம் மன்னே.
பூளைப்பூ மலி அலரிடை நோக‌
குவவுக்கூர் திரை குடக்குஏர்பு எறிதர‌
ஓவாது உணக்கும் கொடுநோய் கொள்ள‌
பசந்தேன் மாணிழாய்.காட்டுதி ஆறு.
என் நெகிழ்வளை மீட்டுதி.நன்றே மொழிவாய்.

=========================================================




வெள்ளி, 23 மார்ச், 2018

நான் நான் என்று....

நான் நான் என்று....
===================================ருத்ரா

நான் நான் என்று துருத்திக்கொண்டே இரு.
இல்லாவிட்டால் துருப்பிடித்து விடுவாய்.
“நான்” யார் என்று ஆத்மீக மழுங்கடிப்பில்
மடங்கிப்போய் விடாதே.
நான் எனும் உன் முனை
பிரபஞ்சத்தின்
அந்தப்பக்கம் வரை செல்லும்.
குறுக்கிடும் எதுவும்
உன் நட்பே.
ஊடுருவு.
உள் துளை.
நியூட்ரினோ எனும்
நியூட்ரானின் நுண்பிஞ்சு
எத்தனை உலகங்களை
அடுக்கி வைத்தாலும்
ஊடுருவும் என்று
சொல்கிறான் விஞ்ஞானி.
ஒரு சாணி உருண்டையைப்பிடித்து
உன் எதிரே
அடையாளப்படுத்தி வைத்துக்கொண்டு
உன் “நெட்டுருக்களை”
“ஓங்கரிப்பதில்”
ஆயிரம் ஆண்டுகள்
நரைத்துப்போய் தொலைந்தும் விட்டன.
சூரிய உதயம்
கடலிலும் மலையிலும் காட்சிகொடுப்பது இருக்கட்டும்.
அது எப்போது
உன் நம்பிக்கை அலைகளிலும்
உன் எண்ண அடுக்குகளிலும்
தலை காட்டுவது.
இந்த காற்று மலை மழை எல்லாமே
நீ என்று நனை.
நாளை எனும் எம் எம் ஃபோம்
உனை படுக்கவைக்க‌
உன் இமையோரம் கனவு நங்கூரங்களை
எறிகின்றது.
நீ என்பவன் எப்போதும் “இன்று” தான்
நீ நாளைக்குள் புகுந்துகொள்வதானாலும்
உன் தோள்மீது
எப்போதும்
தொங்கிக்கொண்டிருக்கவேண்டும்
“இன்று”
இது எப்போதோ இறந்து போய்
நேற்றுகளாய் அழுகிய நிலையிலும்
இன்று எனும் உன்
உயிர்ப் பாக்டீரியாக்கள்
எத்தனை கோடிஆண்டுள் என்றாலும்
பனி ஃபாசில்களில்
உன் சாட்சியை காட்டிக்கொண்டே
இருக்கும்.
சம்ப்ரதாயங்கள் எனும்
பிணங்கள்
பெரும் பாறைகளாய்
உன் கழுத்தைக்கட்டிக்கொண்டு
சங்கிலியில் உன்னை
இடறிக்கொண்டிருக்கிறது.
இந்த‌
எல்லாவற்றிலிருந்து
விடுதலையாகும்
இலக்கணச்சொற்களே
“நான்” “நீ” என்பது.
ஒன்றின் அர்த்தம் இன்னொன்று.
வெற்றிடம் இருக்கிறதே
என்று
அதை கடவுள்களால் இட்டு நிரப்பதே.
வெற்றிடம் தான்
ஆற்றலின் கருவுக்கெல்லாம் கரு.
விழித்துக்கொள் போதும்.

=================================================

சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை..

சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை..
=================================================ருத்ரா
ஓலையின் ஒலிகள் (1)



சிலம்பி வலந்த பொரிசினை ஓமைக்
கான்செறி முள்ளிய பரல்வெங்காட்டின்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை திரங்கிய
வரி வரி சுழிநீர் வந்து வந்து அலைப்ப‌
அகல்திரைப் பௌவம் ஆழத்திருந்து
வாட்சுறா போழ்ந்த கொடுவாய் அன்ன‌
உடலும் தின்னும் உள்ளும் தின்னும் அவ்
உடல் ஊறு நோயும் உள்சுடு நோயும்
நோன்றல் ஆற்றிய பின்னை எஞ்சும்
என்பு நெய்த கூடு உயிரிழை நைந்து!
தழல் உண்டவள் போலும் எரிந்தேன்
ஆயினும் அஃது  வான் ஈர் தண்மழை.
தகரத்துச் சாந்தின் ஒள்ளிய‌ ஞெகிழி
உன் கூடல் உள்ளிய களிப்பின் செத்து
இன் தீ காட்டும் இமிழ்தரும் நின்பெயர்.
புல்வேய் குரம்பை போர்த்த குடுமியில்
நறவுபெய் நடுநிலா பூக்கள் தடவி அவன்
உறவு காட்டும் அம்மவோ பெரிதே.

=======================================================

வியாழன், 22 மார்ச், 2018

ரஜனியின் முன்னே...

ரஜனியின் முன்னே...
==============================================ருத்ரா இ பரமசிவன்


இமயமலைக் கோவில்களுக்கு எல்லாம்
சென்று வந்து விட்டீர்கள்
உங்களுக்கு பின்பலம் அல்லது பின்புலம்
பி.ஜே.பி தானே?
ஊடக காமிராக்கள் கேள்விக்கணைகளால்
ரஜனி எனும் மாமலையைத்துளைத்தன.
அதற்கும் அந்த "ஸ்டைல் சிரிப்பே" பதில்.
அப்புறம் சொல்கிறீர்கள் :
என் பின்னே கடவுள் ..
அதற்கு பின்னே மக்கள்...என
ஆன்மீக அரசியலுக்கு
"டெஃபினிஷன்" கொடுத்துவிட்டீர்கள்.

"வாகஸ் பாபுலி வாகஸ் தே"
அதாவது
மக்கள் குரலே மகேசன் குரல்!
இவை லத்தின் சொற்கள்.
எங்கள் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணன்
சொல் இயல் படி
அதன் தோலுரித்துப்பார்த்தால்
அதற்குள் இருப்பது தமிழ் எனும் திராவிடமே!


இமயமலை சென்றது போல்
நீங்கள்
மேலை நாட்டுப் பனிமலைகளுக்குச் சென்று
அங்கேயும் எங்காவது இப்படி
ஒரு விஞ்ஞான இயல்படி
"ஸ்டேடிஸ்கல் நார்மல் கர்வ் ஷேப்பின்"
ஒரு புடைப்பு லிங்கம் பார்த்து
"ஓ இது ஒரு இயற்கை கணிதம்
இதை ஆளும் மனிதனே தேவன்"
என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் அதற்கு
குறுக்கே மறித்துக்கிடக்கும்
மோடிகளும் ஷாக்களும்
அதை மறைக்கும்
தந்திரம் செய்வார்கள்.

பார்க்கலாம்.
இவருக்கு பின்னே இருக்கிற‌
மகேசனுக்கு பின்னே இருக்கிற‌
இவரது மக்கள்
இவருக்கும் முன்னே வந்து
அரசியல் ஞானம் ஊட்டும்
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
வருக! வருக!
ரஜனி அவர்களே!
இமயத்தின் குகை இருக்கட்டும்.
"வாக்ஸ் பாபுலி"யின் வாக்குப்பெட்டி எனும்
குகைக்குள் நுழைந்து வாருங்கள்.
அப்புறம் நீங்கள்
"பாயும் புலியே" தான்.
எல்லாம் புரியும்.
எல்லாம் தெளியும்.

===========================================











புதன், 21 மார்ச், 2018

"கயல்முள் அன்ன ....." பாடலின் பொழிப்புரை

"கயல்முள் அன்ன ....." பாடலின் பொழிப்புரை.
================================================ருத்ரா இ.பரமசிவன்
(தலைவியின் பிரிவுத்துயரம் பற்றிய பாடல் இது)

கயல்முள் அன்ன..
=================================================ருத்ரா.

நாற்றிய போன்ம் வால்செறி  எல்லே
எத்துணை எரித்தும் தண்காழ் சேக்கை
கிடந்தே குளிர்பூங்  காலொடு இழையும்.
அழல் அவிர் மாண் இழை பூட்டுகம் என்னே.
கொல்சுரம் கல்படு ஆற்றின் மீமிசை
அவன் ஏகிய காலை எரிதழல் ஊண்கொள்
நோகுதல் செய்யும் காதல் நோயிலும்
பனித்துறை பகன்றையின் உரிஉடுத்தன்ன‌
களிக்கும் ஆயினும் கள்ளம் ஒளிக்கும்
ஆர்த்த ஓதையின் அரிக்குரல் நுவலும்.
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
மூத்தார் முளிதரும் வாய்ச்சொல் என் தரும்?
முழவின் பாணி மூசும் வண்டென‌
அலைவுறும் யானோ அளியள் மன்னே.

=================================================




பொழிப்புரை
=============


நாற்றிய போன்ம் வால்செறி  எல்லே

நாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள். நான்று (நாண்டுகிட்டு) அதாவது தூக்கிட்டு என்றபொருளில் வரும் இந்த சொல்லின் "வேர்"ஆன "நால்" என்பதிலிருந்து "நாற்றிய" என இங்கு வந்துள்ளது.இதற்கு "ஊசல்" போல் தொங்குதல் என்று பொருள்.

போன்ம் = போலும்
வால்செறி = ஒளி மிகவும் அடர்ந்த
எல்லே = பகல் தோன்றக்காரணமான சூரியன் (எல்+ஏ இங்கு ஏ  ஏகாரம் தேற்றம்)


எத்துணை எரித்தும் தண்காழ் சேக்கை


எவ்வளவு எரித்தாலும் இந்த வைரம் பாய்ந்த மரத்தில் செய்த கட்டிலில்


கிடந்தே குளிர்பூங்  காலொடு இழையும்.


படுத்துக்கிடந்து குளிர்பொருந்திய பூங்காற்றில் பின்னிக்கிடப்பேன்.


அழல் அவிர் மாண் இழை பூட்டுகம் என்னே.


நெருப்பில் பொன் சுடப்பட்டு மிகச்சிறப்பாக செய்யப்பட்ட அணிகலன்கள் அணிகின்றேன்.ஆயினும் என்ன பயன்?



கொல்சுரம் கல்படு ஆற்றின் மீமிசை


கொலைவெறி மிக்க கள்வர்கள் நிறைந்த காட்டில் அந்த கரடு முரடான கற்கள் நிறைந்த பாதையில் மேலும் மேலும் முன்செல்ல‌


அவன் ஏகிய காலை எரிதழல் ஊண்கொள்


என் தலைவன் புறப்பட்ட பொழுதே அந்த பிரிவுத்துயர் எனும் நெருப்பே நான் உட்கொள்ளும் உணவு ஆனது.



நோகுதல் செய்யும் காதல் நோயிலும்


அத்தகைய துன்பம் தரும் அந்த காதல் நோயிலும்


பனித்துறை பகன்றையின் உரிஉடுத்தன்ன‌


குளிர்ந்த நீர்க்கரையில் பூக்கும் பகன்றை எனும் மலர்களில் நெய்த‌
ஆடையை உடுத்தாற்போல் (அவன் நினைவில்)


களிக்கும் ஆயினும் கள்ளம் ஒளிக்கும்


இன்புறுவேன்.இருப்பினும் அதை வெளிக்காட்டாது மறைப்பேன்.


ஆர்த்த ஓதையின் அரிக்குரல் நுவலும்.


நான் எழுப்பும் துயர ஒலிகளில் ஒரு நுண்குரலும் (அப்பெரிய ஒலிகளில் இருத்து சலித்தெடுத்தது போன்ற) (இது "அரிக்குரல்" என எழுதப்பட்டுள்ளது)  மெல்லிதாக கேட்கும்.(இது என் தலைவனின் இதய ஒலி)


கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்


ஆனால்  சுருங்கிய கன்னங்களில் மீன் முள் போன்ற நரைத்த முதிர்ந்த மயிர்களோடு இருக்கும்... முதியவர்களின் முகத்தில் அதாவது கன்னக்கதுப்புகளில்  எல்லாம் விறைத்த நரைமுடிகள்  பரந்திருக்கும் காட்சியை


"கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்"


என்ற வரிகளால் "நரி வெரூஉத் தலையார்" எனும்  சங்கத்தமிழ்ப்புலவர் "ஒரு சிறப்பான ஓவியம் தீட்டியிருக்கிறார்..இவ்வரிகள் புறநானூற்றுப்பாடல் 195ல் வருகின்றன. "பொருண்மொழிக்காஞ்சி"எனும் துறையில் அவர் இப்படி நரை திரைகளால் மனிதர்கள் முதிர்வுற்ற நிலையிலும் "மானிட நேயம்"அற்று தீய நோக்கங்களால் இந்த சமுதாயத்தை பாழ்  படுத்தக்கூடாது என்றும் "நல்லன செய்ய" வேண்டும் என்றும்  சொல்கிறார்..அதே பாடலில் தான்


"நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்..."


என்னும் உலகப்புகழ்பெற்ற வரிகள் இடம்பெறுகின்றன.நரி வெரூஉத் தலையாரின் "கயல் முள் அன்ன நரைமுதிர் திரைக்கவுள்"...என்னும்வரி எனக்கு மிகவும் அற்புதமானவையாகத்தோன்றியது. அதனால் அதையே தலைப்பாக்கி இந்த சங்கநடைச்செய்யுளை ஆக்கியுள்ளேன்.இங்கு தலைவி காதல் துயர் உற்று வாடுகையில் இந்த  முதியோர்களின் சொற்களில் ஒரு பயனும் இல்லை என்று அவள் நினைக்கின்றாள்.



மூத்தார் முளிதரும் வாய்ச்சொல் என் தரும்?


அந்த வயதானவர்கள் தரும் குழைந்த ஆறுதல் மொழிகள்

என்ன பயன் தரும்.?


முழவின் பாணி மூசும் வண்டென‌


அதிர்கின்ற முரசின் தாளத்துக்கேற்ற  பரப்பில் மொய்க்கும் வண்டும் அதிர்ந்து நடுங்குதல் போல்


அலைவுறும் யானோ அளியள் மன்னே.


அல்லாடும் நான் மிக இரங்கத்தக்கவள் அல்லவா!




============================================================

செவ்வாய், 20 மார்ச், 2018

கயல்முள் அன்ன..

கயல்முள் அன்ன..
=================================================ருத்ரா.

நாற்றிய போன்ம் வால்செறி  எல்லே
எத்துணை எரித்தும் தண்காழ் சேக்கை
கிடந்தே குளிர்பூங்  காலொடு இழையும்.
அழல் அவிர் மாண் இழை பூட்டுகம் என்னே.
கொல்சுரம் கல்படு ஆற்றின் மீமிசை
அவன் ஏகிய காலை எரிதழல் ஊண்கொள்
நோகுதல் செய்யும் காதல் நோயிலும்
பனித்துறை பகன்றையின் உரிஉடுத்தன்ன‌
களிக்கும் ஆயினும் கள்ளம் ஒளிக்கும்
ஆர்த்த ஓதையின் அரிக்குரல் நுவலும்.
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
மூத்தார் முளிதரும் வாய்ச்சொல் என் தரும்?
முழவின் பாணி மூசும் வண்டென‌
அலைவுறும் யானோ அளியள் மன்னே.

=================================================



விடியல் பரிதி !





விடியல் பரிதி !
=====================================ருத்ரா

விசும்பின் துளிபெய்து வியன் நிலம் கீறி
மெய் வருத்தம் உரம் சேர்த்து
கனலும் கதிரொடு தன் புனல் இழைத்து
காய்நெல் அறுத்து கழனி வளம் ஆக்கி
ஊஞ்சல் ஞாலம் தன் உயிரீந்து ஆட்டி
ஓங்கலிடையே தமிழின் ஒளியாய்
உலகு புரக்கும் உழவத்தமிழா..உனை
உறிஞ்சும் தும்பிகள் உலா வந்திடும்
கள்ளம் அறிதி! உள்ளம் தெளிதி!
யானை புக்க புலம் போல நம்
கவளமும் சிதறி வளங்களும் அழிந்து
நிகழ்தரு வல்லிய கொடுமைகள் அகல‌
எழுவாய்!எழுவாய்! எழுதரும் கனலியே
இருள் கிழிக்கும் விடியல் பரிதி
நீயே!நீயே!நீயே தான்!

====================================

ஞாயிறு, 18 மார்ச், 2018

"ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்"

"ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்"
=================================================ருத்ரா

இது
விஜயசேதுபதியின் படம் அல்ல!
நம் தமிழ் நாட்டு அரசியலின்
உயிரான பிரச்னைகளுக்கெல்லாம்
ரஜனி அவர்கள்
சிரித்துக்கொண்டே மழுப்புவதன்
அர்த்தம் தான்
"ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்."
"சர்வர் சுந்தரம்" என்று ஒரு படம்
அதில் நாகேஷ் அவர்களின் நடிப்பு
அற்புதமாய் இருக்கும்.
அதில் ஒரு காட்சி.
நாகேஷின் தாயாராக நடிக்கும்
லெட்சுமி அவர்கள்
நாகேஷ்ஷிடம்
"ஏண்டா எப்படா கல்யாணம் பண்ணிக்கப்போறே"
என்று கேட்பார்.
"போம்மா! இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்?"
என்று பிகு பண்ணுவார்.
அதற்குப்பிறகும்
அந்தக்கேள்வியை அந்த அம்மா
திருப்பி திருப்பி கேட்க வேண்டும்.
அவர் பிகு பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும்.
அப்புறம் அவர்
திடீரென்று ஒத்துக்கொண்டு
அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பாராம்.
இப்படி சொல்லவேண்டும் என்று
அம்மாவுக்கு அவர் ஒத்திகை நடத்திவிட்டு
மீண்டும் அவர் கேள்வி கேட்கச்சொல்லுவார்.
அதன் படி அம்மா ஆரம்பித்து விடுவார்.
அவரும் பிகு பண்ணி
இப்போ கல்யாணம் வேண்டாம் என்பார்.
அதற்கு அம்மா
"சரி தான் போடா.அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்"
என்பார்.
அந்த நகைச்சுவைக்கு
தியேட்டரே சிரித்து சிரித்து
அதன் சுவர்கள் எனும் "விலாவுக்கே"
வலி வந்து விடும்.
அந்த லட்சுமி அம்மாள் மாதிரி
புத்திசாலிகள்
இருந்தால்
தமிழகம் தப்பிக்கும்.
இல்லையெனில்
"காவிரியில்
தண்ணீர் கிடைத்தாலும்
கண்ணீர் கிடைத்தாலும்
கவலையில்லை.
விவசாயிகள்
பஞ்சத்தில் எலும்புக்குவியலாகி
வீழ்ந்தாலும் கவலை இல்லை.
தமிழுக்கும் அமுது என்று பேர் என்று
பாடுவதற்கு பதில்
இந்திக்குத் தான் அமுது என்று பேர்
என்று பாடினாலும் கவலையில்லை.
திராவிடம் என்றால்
அது மோடிஜியின்
"ஜிப்பா பாக்கெட்டில் இருக்கிறது"
என்று சொன்னாலும்
கவலையில்லை.
மனிதன் சாதி மதம் புழு பூச்சி தமிழ் தமிழன்
எல்லாம் ஒன்று தான் என்று
அத்வைத பாபா சொல்லியிருக்கிறார்"
என்று
"ஆத்மீக அரசியலின்"
பஞ்ச் டைலாக் கேட்க‌
எல்லோரும் தயாராய் இருங்கள்
அன்பான தமிழர்களே!

====================================================


சனி, 17 மார்ச், 2018

மனிதன்





மனிதன்
========================================ருத்ரா

எனக்குத்தெரியாது என்று
தெரியாது.
எனக்கு தெரியாது என்று
தெரியும்.
எனக்கு தெரியும் என்று
தெரியாது.
எனக்குத் தெரியும் என்று
தெரியும்.
அறிவின் நான்கு நிலைகள் பற்றி
அறிஞர்களின் கருத்து.
நான்காவது நிலையே
ஆன்றோர் நிலை.
முதல் நிலையே
பிள்ளைநிலை.
மனிதனின் குறுக்குவெட்டுத்தோற்றம்
மூளையைப் பற்றியது அல்ல.
உணர்வைப்பற்றியது.
கல்லும் புழுவும்
சமன்பாட்டுக்குள் வராது.
புல்லும் புழுவும்
சமன் செய்து சீர் தூக்கலாம்.
உயிர் தான் அங்கு இணைப்பிழை.
இன்னும்
மனிதர்கள்
மண்ணுக்குள்ளிருந்தும்
கல்லுக்குள்ளிருந்தும்
விழித்து எழுந்த பாடில்லை.
சதை கிழிக்கும் கோரைப்பல்லோடு தான்
அவன் தூக்கம் கலைத்தான்.
அவன் இமைகள் உயர்ந்த போது
"கல்லைக்"கொண்டு தான்
"கல்"வி கற்றான்.
வாயின் மாமிச நாற்றம் நின்றபோது
சொல்லைக்கற்றான்.
படிப்படியாய்
அவனுக்கே அவன் கடவுள் ஆனான்.
புரியாதவர்கள்
கல்லின் முன் நிற்கிறார்கள்.
புரிந்தவர்கள்
தந்திரம் செய்தார்கள்.
மனிதன் மனிதனை தின்ன ஆரம்பித்தான்.
நச்சு வட்டம் சுழல்கிறது.

=======================================
19 செப்.2017ல் எழுதியது.

வெள்ளி, 16 மார்ச், 2018

ஏதும் அறியோம் பராபரமே!

I completely forgetten Rajinikanth here
புகைப்படம் :நன்றி மார்ச் 15. 2018  "ஒன் இந்தியா தமிழ்" இதழ்.

 ஏதும் அறியோம் பராபரமே!
==========================================ருத்ரா

"வெள்ளை உடை உடுத்தி
இமயமலை வயிற்றுக்குள்
குடல்கள் வழிபோல
குறுகலாயும் நீண்டும்
குகை வழிப்போன
ஆன்மிகச்  செல்வர் ரஜனி அவர்களே!
"சூப்பர் ஸ்டாரையும்
உங்கள் பெயரையும்" கூட
உதறித்தள்ளிவிடும் ஒரு
உன்னத இடம் தன்னில்
நின்றுகொண்டிருக்கிறீர்கள்.
வெள்ளைத்தாமரையாய் நிற்கும் நீஙகள்
அரசியல் பாத்திரம் ஏற்கும்
காவித்தாமரையாய் தான் மீண்டும்
குதிரை ஏறி வருவீர்களோ!
நாங்கள் ஏதும் அறியோம் பராபரமே !




வியாழன், 15 மார்ச், 2018

"அமமுக"

"அமமுக"
=====================================ருத்ரா

தமிழ் நாட்டு அரசியலில்
ஒரு ரம்மி விளையாட்டு இது.
"செட்" சேர
"செட்" கலைய‌
ஒரு சுவாரசியம் மிக்க‌
காட்சி இது.
மேலூர் எல்லாம் மக்கள் தலைகள்.
உற்சாகம் மிக்க தொண்டர்கள்.
அவர்கள் மீசைத்துடிப்புகளில்
புறநானூற்றுக் கொப்பளிப்புகள்.
பெயரில்
ஏன் திராவிடம் இல்லை?
ஏன் பெரியாரிசம் இல்லை?
டிவிக்கள் கணை தொடுத்தததில்
ஏதும் அர்த்தம் இல்லை.
"வில்" இல்லாமல்
தொடுத்த கணைகள் அவை.
ஆம்!.. நுட்ப அரசியல் சிந்தனை எனும்
வில் இல்லாமல் தொடுத்தவை அவை.
தமிழ் மண்ணில்
திராவிடம் எப்போதோ
உழுது உரமேறி விட்டது.
ஆத்திகத்தை நினைத்துக்கொண்டு
உலக்கையை குத்தினாலும்
அரிசியாய் வருவது திராவிடமே..
அதன் கண்ணுக்குத்தெரியாத‌
நாத்திகமே.
இந்த மக்கள் பாதயாத்திரை போவதும்
லட்ச லட்சமாய் இருமுடிகட்டி
ஜோதி பார்க்கப்போவதும் கூட‌
அந்த இல்லாத கடவுளைத்தேடித்தான்.
கடவுளை
அவர்கள் அறிவு
தரிசனம் செய்த அடுத்த கணமே
அவர்கள் கையில் இருப்பது
எல்லா எழுத்துகளும் அழிந்த "சிலேட்டு" தான்.
ஆத்மிக யாத்திரைக்குள்
நாத்திக தேடல் தான்
காலடிகள் பதிக்கின்றன.
இந்த தமிழ் மக்களின்
மனங்கள் வண்ணக்குழம்பின்
ஒரு கலைடோஸ் கோப்.
அதனால் பெரியாரும் திராவிடமும்
கிராமத்தின் தூசிகளில் புழுதிகளில் கூட‌
பதிந்து கிடக்கிறார்கள்.
காவியை "வர்ணமடித்தே" தீருவோம்
என்று
கச்சை கட்டுபவர்கள்
இங்கே ஏமாந்து தான் போவார்கள்.
இந்த‌
"அமமுக"வுக்குள்
வானிலை அறிவிப்பாளர்களால்
இன்னும் பெயர் வைக்கப்படாத‌
ஏதோ ஒரு புயல் சின்னம் தோன்றலாம்.
அது "எத்தனையாவது நம்பர்
எச்சரிக்கை கூண்டு" ஏற்றப்போகிறது
என்பதை
நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்து சிதறும்
அந்த "ஓட்டுப்போடும்"
திருவிழாவில் தான் தெரியவரும்!
"காந்திப்புன்னகை" வலிமை மிக்கது.

==================================================








ஓலைத்துடிப்புகள்









ஓலைத்துடிப்புகள் 
===========================ருத்ரா இ பரமசிவன்


கண்டிகும் அல்லமோ கொண்க‍   நின் கேளே?
தெண்டிரை பாவை வௌவ‌
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.

கற்பனை நயம் மிக்க வரிகளால் நம்மைக்கவர்ந்த சங்கத்தமிழ்ப்புலவர்  அம்மூவனார் எழுதிய ஐங்குறு நூற்றுப்பாடல் (125) இது. தெள்ளிய திரை என்று பொருள் படும் கடல் அலைகளின் நுண்மையான விளையாட்டு மிகவும் உற்று நோக்கத்தக்கது.அம்மூவன் எழுதிய "தெண்டிரை பாவை" எனும் சொல் கடல் விஞ்ஞானத்தில் அலைகளின் நுணுக்கமான இயக்கங்களை குறிக்கிறது.அதில் கிடைக்கும்"தெள்ளிய மண்ணில்" பாவை செய்து விளையாடும் தலைவியின் பால் மணம் மாறாத மனத்துள்ளும் சுரக்கும் காதலின் பிஞ்சு ஊற்றில் ஒரு பிரளயமே ஒளிந்திருக்கிறது என்பதை காட்டவே இந்த சங்கநடைக்கவிதையை யாத்து உள்ளேன்



(தலைவின் துயரம் கண்டு பொருள் தேடச்சென்ற தலைவனை நோக்கி சொல்லுவது போல் பாடப்பட்ட தோழியின் கூற்று.)

இலஞ்சி பழனத்தவள்
============================================ருத்ரா இ பரமசிவன்

இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
கடாஅய்ச் செல்லும் இரும்ப‌ணைத் தோள!
அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!
தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
அளியள் காண்குவை.விரைதி விரைதி.
குவளையுள் குவளை பல்மழை தூஉய்
மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
முதிர் தகையன்று அறிதி அறிதி.
பால் இழி தாமரை காமர் புரையா
ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
பாவை கையில் மற்றொரு பாவை
படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.

===============================================






பொழிப்புரை
===========================================ருத்ரா  இ  பரமசிவன்.

இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
கடாஅய்ச் செல்லும் இரும்பணைத் தோள!
அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!


உறுதி மிக்க மூங்கில் போன்ற தோள் வலிமை மிக்க தலைவனே!இலஞ்சி எனும் அடர்நிழல் தவளும் நீர்ச்சுனைகள் நிறைந்த ஊரின்
கனிச்சோலைகள் போல் கண்ணேதிரே எழிற்கோலம் காட்டும் உன் காதலியின் முகம் தோன்றும்படி கல்லும் முள்ளும் கலந்து வெம்மை
மிகுந்த காட்டுவழியில் கடந்து  செல்கிறாய்.கடலின் அலைகள் அரித்து அரித்து மண்திட்டாய் நிற்கும் கரை கூட கரைந்து போய்விடுகிறது. நிலப்பகுதியை பறித்துக்கொள்ளும் கடல் சங்குகளின் ஒரு வித ஒலியோடு ஆர்ப்பரிக்கிறது.அது போல் உன் நெஞ்சம் தலைவியை நினைத்து வேத‌னை உறுகிறது.



தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
அளியள் காண்குவை.விரைதி விரைதி.
திணையின் திரிதரு திரள்நெரி மயக்கமனைய‌
நின் ஆறலைக்கண்ணும் ஆழி சூழ்ந்தது.

கடல் அலைகளின் சீற்றம் மிகக்கடுமையானது.தொள் என்றால் குழி பறி என்று பொருள்.அப்படி குழி பறித்த அலைகளே தொண்டி எனும் பட்டினத்தை உருவாக்கும்.தொண்டி எனும் ஊர் அப்படி உருவானதே அங்கே அந்த அலைகள் இன்னும் சில விளையாடல்களைச் செய்கின்றன.ஆழத்திலிருந்து மிகக்குழைவான வண்டல் மண்ணை தெள்ளியெடுத்து கரையில் குவிக்கிறது.தலைவி அதனோடு சிறுபிள்ளை போல் பொம்மை செய்து விளையாடுகிறாள்.ஆனால் அதே அலைகள் சீற்றத்தோடு அப்பொம்மையை பறித்துக்கொண்டு போய்விடுகிறது.மண்திரை அதாவது கரையை மண்கலந்து நீராட்டும் அலைகள் இப்படி வெறியோடு விளையாடுவது கண்டு தலைவி அச்சமுற்று அழுது கலங்குகிறாள்.அவள் பொம்மை அழிந்துபோனது பொறுக்காமல் அழுகிறாள்.இங்கே அது வெறும் பொம்மை அல்ல.உன்னை உன் நினைவைக் கொண்டு புனைந்த வடிவு அது.எனவே விரைவில் வந்து அவளைத் தேற்று.கொடிய பாலையின் வழித்தடங்களில் அலையும் உனக்கு இவளது கடற்கரை விளையாட்டு ஒரு திணை மயக்கம் திரண்டு நெரிக்கும் துன்பத்தை கொடுக்கிறது.


குவளையுள் குவளை பல்மழை தூஉய்
மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
முதிர் தகையன்று அறிதி அறிதி.
பால் இழி தாமரை காமர் புரையா
ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
பாவை கையில் மற்றொரு பாவை
படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.


அவள் அழுகையில் கண்ணுக்குள் கண் பூப்பது போல் குவளைக்குள் குவளைகள் குவிந்து அடர்மழையை கண்ணீராய் பொழிகிறது. இன்னும் காதலின் முதிர்ச்சி பெறாமல் மடம் எனும் சிறு பிள்ளைத்தனம் மட்டுமே அந்த வெள்ளைமனத்தில் பொங்கும் வெண் கண்ணீரில் அவள் மூழ்குகின்றாள்.ஐது எனும் மென்மை படர்ந்த அழகிய‌ முன்னங்கைகளை உடைய அவள் வெட்கமுறுவது ஒரு ஒப்பற்ற எழில் மிகு  காட்சி ஆகும்.பால் வழியும் தாமரை முகம் அவளது முகம்.ஆனாலும் காமம் புகாத அந்த பிஞ்சுக்காதலில் ஒளி சுடரும் நெற்றியில் கூர்ந்து  சிந்திப்பதால் ஏற்படும் சுருக்கங்கள் ஏதுமில்லை.இருப்பினும் அவள் ஒரு சிறுமி போல் தான் இருக்கிறாள்.தெரிந்து கொள்.ஒரு மரப்பாய்ச்சியின் கையில் இன்னொரு மரப்பாய்ச்சி போல் இருக்கிறாள். அந்த மண் பொம்மை கரைந்ததற்கு அழுதுகொண்டே இருக்கும் அவளை விரைவாய் வந்து தேற்று.பொம்மைகளோடு ஒன்றிப்போனாலும் இவள் பொம்மை அல்ல.அதுவும் பஞ்சாரை எனும் கோரைப்புல்லைக்கொண்டு கூந்தல் முடித்த பொம்மைப்பெண் அல்ல.

===============================================================
மே  12  2015 ல்  எழுதியது.











புதன், 14 மார்ச், 2018

சக்கர நாற்காலியில் ஒரு பிரபஞ்சம்









Dr. STEPHEN HAWKING

சக்கர நாற்காலியில் ஒரு பிரபஞ்சம்  
================================================ருத்ரா 

சக்கரநாற்காலியில் வசித்துக்கொண்டே 
இந்த பிரபஞ்சத்தை உன் அறிவால் 
வாசித்துக்கொண்டே  இருந்த 
சக்கரவர்த்தியல்லவா நீ.
இந்த விண்மீன் ஒருநாள் தன நிறையில் 
எல்லையற்ற மடங்குகள் அதிகரிக்கும்போது 
இந்த வெளியையே சுருட்டி மடக்கி 
ஒரு புள்ளியாக்கி பிரபஞ்சத்தின் 
ஒரு மயானத்துக்கு "குழி" வெட்டுகிறது.
இந்த கருந்துளை அல்லது கருங்குழிக்குள் 
பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகங்கள் கூட 
உறிஞ்சப்பட்டு விடுகின்றன.
அதனால் ஒளியின் கதிர் அங்கு சுருண்டு கொள்கிறது.
காலத்தின் அம்பு அங்கே உருகி மறைகின்றது.
உன் கணக்கீடுகளால் 
அதை வருடிக்கொண்டே இருந்தாய்.
அதை சூத்திரப்படுத்தினாய்.
பிறகு தான் அங்கு இருப்பது 
கல்லறை இல்லை என்று உன் அறிவின் கூர்மை 
ஒரு கோட்பாட்டை நட்டு வைத்தது.
அது தான் "வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி."
அந்த கருந்துளை ஒரு ஆற்றல் துகளின் 
கதிர் வீச்சை வெளிப்படுத்துகிறது என்று 
ஒரு சமன் பாடு உருவாக்கினாய்.
அது "ஹாக்கிங் ரேடியேஷன்" என்று 
கொண்டாடப்படுகிறது.
1963 வாக்கில் மருத்துவர்கள் உனக்கு 
ஆயுள் முடியப்போகிறது 
என்று கை விரித்து விட்டார்கள்.
ஏ எல் எஸ் எனும் நரம்பு சிதைவு 
அதாவது 
அமையோட்ரோஃபிக்  லேட்டரல்  ஸ்க்ளோராசிஸ் 
உன்னை வாரிக்கொண்டு போய்விடும் 
என்கிறார்கள்.
உன் மூளையின் வலிமைக்கு முன்னே 
அந்த காலன் தோற்றுவிட்டான்.
உனக்கு குரல் இல்லை.
கை கால் அசைவுகள் இல்லை.
ஆனால் 
உன் முனைப்பான கணித நுட்பம் 
உன் கன்னக்  கதுப்புகளின் 
மெல்லிய நரம்புகளை அசைத்தன.
அது உன் உறுப்பு ஆகிப்போன 
கணினியை இயக்கி 
குரலை ஒலித்தது.
திரையில் எழுதியது.
உலகப்புகழ்   பெற்ற உன் சமன்பாடுகளை 
உருவாக்கினாய்.
அது அந்த பிரபஞ்சத்தின் 
விளிம்போர ஜன்னல்களை 
எங்களுக்கு திறந்து காட்டியது.
இறக்கும்போது 
அந்த நரம்புகள் எதை மீட்டியிருக்கும்?
சந்தேகமில்லாமல் 
நம் பிரபஞ்சத்தின்   இதயத்துடிப்பின் 
இ.சி.ஜி.வரிகளைத்தான். 
உன் விஞ்ஞான வேட்டையும் வேட்கையுமே 
24 வயதில் உனக்கு விழ வேண்டிய 
முற்றுப்புள்ளியை 
இந்த 76 வயது வரை அறிவின் 
மின்னல் இழையாய் நீட்டித்து தந்தது.
எங்கள் பேராசைக்கோ அளவே இல்லை.
இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்கு 
அது நீட்டிக்கப்பட்டால் 
எப்படியிருக்கும்?
என்று கண்ணீர்த்துளிகளோடு 
கற்பனை செய்துகொண்டே இருக்கிறோம்.
அந்த ஹிக்ஸ் போஸான் துகள் எனும் 
மாய இழைவி 
நம் பிரபஞ்சத்துக்கள் 
ஒரு கள்ளத்தனமான "நிறையை"
நிரவி விட்டு விடலாம்.
அப்போது என்றாவது ஒருநாள் 
(அது பில்லியன் பில்லியன் ..ஆண்டுகள் கூட 
ஆகலாம்)
அது ப்ரோட்டான் நிறையை 
146 மடங்குக்கு அதிகரிக்க செய்யலாம்.
அப்போது குவாண்டம் டன்னலிங் எனும் 
நுண் அளவு இயக்கவியல் செய்யும் "துளைப்பால்"
இந்த பிரபஞ்சம் 
ஒரு பிரம்ம்ம்ம்ம்மா ..ண்ட  "குமிழி" யாய் 
வீங்கி வடிக்கலாம்.
அதாவது அதற்கு 146 பில்லியன் எலக்ட்ரான் வோல்ட் 
ஆற்றல் உள்ள அணு உலை வேண்டும்.
அஞ்சற்க என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த உலகத்தின் சைசுக்கு 
ஒரு அணு உலை ஏற்பட்டால் தான் 
வாய்ப்பு உண்டு.
அந்த ஹிக்ஸ் போஸான் பற்றி 
உன் எச்சரிக்கை எங்களை 
உன் பக்கம் 
சிந்திக்க வைத்துக்கொண்டே இருக்கும் 

===================================================

Stephen Hawking Says 'God Particle' Could Wipe Out the Universe


Simulated data from the Large Hadron Collider particle detector shows the Higgs boson produced after two protons collide.
Credit: CERN
மேலே கண்ட புகைப்படங்களுக்கும் கீழே  உள்ள "லிங்கு"களுக்கும்  என் நன்றி!
https://www.nytimes.com/2018/03/14/obituaries/stephen-hawking-dead.html


https://www.livescience.com/47737-stephen-hawking-higgs-boson-universe-doomsday.htm

செவ்வாய், 13 மார்ச், 2018

ஒளியோடு ஓடிப்பிடித்து விளையாடு



ஒளியோடு ஓடிப்பிடித்து விளையாடு
==================================================ருத்ரா


அமெரிக்காவில்
லாஸ் ஏஞ்சல்ஸில்  ஒரு பூங்கா!
பொழுது சாயும் வேளை.
காலாற அங்கே வந்தேன்.
அந்தி அங்கே
காலை மடித்துப்போட்டுக்கொண்டு
புல் விரிப்பில் உட்கார்ந்து
அந்த "அந்தியையே "
பார்த்துக்கொண்டிருந்தது போல்
ஒரு தோற்றம்.
அங்கே மரங்களைப்பார்த்து
நின்று நின்று செல்வேன்.
என்னவோ
அந்த மரங்களின் இலைகள் எல்லாம்
 நாக்குகளாய் முளைத்து
நம்மூர் டிவிக்களில்
சதுரக்கட்டங்களில் இருந்துகொண்டு
பேச்சாளர்கள்
நெறியாளரோடு
சள சளப்பது போல் இருந்தது.
அந்த பேச்சுக்களின் சூடு தாங்காமல்
மரமே தீப்பற்றிக்கொண்டு
ஒரே சிவப்பு மரமாய்
எனக்குத்தெரிந்து.
அதை குளிர்விப்பது போல்
வானத்து முழு நிலவு
அப்போது தான் இலைகளின் ஊடே
வெள்ளி முலாம் பூசத்துவங்கியிருந்தது.
இலைகளின் ஒவ்வொரு இடைவெளியும்
ஒவ்வொரு கண்ணாய்
என்னைக்கண்ணடித்து கண்ணடித்து
கண்ணாமூச்சி விளையாட அழைத்தது.
அந்த நிலவொளியில்
இரண்டு மூன்று சிறுவ சிறுமியர்
மரங்கள் தோறும்
ஒளிந்து ஒளிந்து "ஹைட் அன்ட் சீக் "
விளையாடிக்கொண்டிருந்தனர்.
வானத்து நிலவு தரையிறங்கி
நிலாப்பிஞ்சுகளாய்
அந்த மரத்தை சுற்றி சுற்றி
விளையாடியது போல்
எனக்குத்தோன்றியது.
நானும் அங்கேயே
இலைகளின் ஆயிரம் கண்களோடு
கண் சேர்த்து
கண் பொத்தி
அந்த நிலாப்பிழம்போடு
விளையாடிக்கொண்டிருந்தேன்.
"மங்கியதோர் நிலவினிலே...."
முறுக்கிய மீசைப்புல்   தளிரிடையில்
"பாரதி" எனக்குள்
முறுக்கேற்றிக்கொண்டிருந்தான்.

========================================================




குதிரையும் "சிவாஜிராவும்"


குதிரையும் "சிவாஜிராவ்" என்ற ரஜனியும்!
================================================ருத்ரா

டிவியில் காட்டினார்கள்.
குதிரையில் போய்க்கொண்டிருந்தார் ஒருவர்.
அது சிவாஜி அல்ல.
சிவாஜிராவ் என்கிற ரஜனி தான்.
மூக்காம்பிகைக்கு வெள்ளி வாள்
கொடுத்த மக்கள் திலகம் போல்
இந்த ஆன்மீக திலகம்
அந்த இமயமலை யாத்திரையில்
ஆரோகணம் செய்து கொண்டிருந்தார்.
ஒருவர் காட்டும்
பக்தியிசம் பற்றி கருத்துரை செய்வது
நாகரிகத்துக்கு ஏற்புடையது அல்ல.
ஆனால் பக்தியிசம்
நாகரிகத்தின் மலர்ச்சிக்குரிய பாதை அல்ல‌
என்று  சொல்வதில்
எந்த அநாகரிகமும் இல்லை.
ஒரு மின்விளக்கு
மின்காந்தக்கதிர் அலைக்கோட்பாடு
போன்ற
விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள்
பற்றிய சிந்தனைக்கீற்றுகள் எல்லாம்
மழுங்கடிக்கப்பட்டது
இந்த பக்தியிசம் மண்டிய தேசத்தில் தான்.
 மனித வளர்ச்சிக்கும் பக்தியிசத்துக்கும்
இடையே மூடத்தனமாய்
ஒரு  முரண்பாடு இருக்கும்போது
இந்த ஆன்மிகத்தை
மலர்ச்சியின் ஆயுதமாக‌
நிச்சயம் மாற்றமுடியும் என்ற‌
"பசப்பல் வாதத்தை"
ஏன் கையில் எடுக்கிறார் ரஜனி?
இந்தியாவின் அரைகுறைக்கற்பனைகளின்
அவியல்களில் ஆக்கப்பட்ட‌
அம்புலிமாமா புராணங்களை
வைத்துக்கொண்டு
நாம் அன்றே "ப்ளாஸ்டி சர்ஜரியின்"
முன்னோடிகள் என்று மார்தட்டும்
பிரதமர்கள் ஆளும் புண்ணியபூமியில்
நாமும்
பாபா சூத்திரத்தை வைத்து
பாராளவேண்டும் என்று
அந்தக்குதிரைச்சவாரியை
மேற்கொண்டாரோ ரஜனி?
மனிதனில்
யானையின் தலையை ஒட்டவைத்த
விநாயக புராணங்களில்
நம் மெடிக்கல் ஸயன்ஸை
நிலைநாட்டும் ஆன்மிகபுரட்சியை
வைத்துக்கொண்டா
நாம் பரிணாமத்தின் படிகளை
கடந்து நடக்கப்போகிறோம்?
மழுப்புவதும் குழப்புவதும் தான்
ஆன்மிக அரசியலா?
"ரசிகர்களாக" இருக்கும் இளைஞர்களே !
உங்கள்
மெடுல்லா ஆப்லாங்கட்டா
செரிப்ரம் செரிபெல்லம்
இவைகளில் எல்லாம்
எப்போது குதிரை சவாரி செய்யப்போகிறீர்கள்?
மூளையின் மடிப்பு மலைகளில்
அந்த நியூரான்களை உங்கள் லகான்களாக்கி
இந்தக்குதிரைகளில் ஏறி
உலகை வலம் வரப்போகிறீர்களா?
இல்லை
சினிமாவின் இந்த அட்டைக்குதிரைகளில்
பயணம் துவக்கப்போகிறீர்களா?
சிந்தியுங்கள்.
உங்கள் திருப்புமுனையில்
நம் வரலாறுகள்
புதுப்பிக்கப்படட்டும்!
வாழ்த்துக்கள்.

==================================================


திங்கள், 12 மார்ச், 2018

அந்தக்குரல்கள் ஓயவில்லை.

அந்தக்குரல்கள் ஓயவில்லை.
===============================================ருத்ரா

அந்த ரோட்டோர குப்பை தொட்டி
நிறைந்து வழிந்தது.
அதற்குள் ஒரு குட்டி நாய்.
சினிமாபோஸ்டரை மெத்தையாக்கி
படுத்துக்கிடந்தது.
அதன் சின்ன வாயின் கூரிய அரிசிப்பல்
தெரிய குரைத்து குரைத்து
குதித்துக்கொண்டிருந்தது.
தோளில்
ஒரு பெரியகறுப்புப்  பிளாஸ்டிக் பையை
யானையை மல்லாக்க கிடத்தியது போல்
வைத்துக்கொண்டு
ஒரு சிறுவன் அங்கே
குப்பையில் கிடக்கும்
அலுமினிய இரும்புத்துண்டுகளை
சேகரிப்பவனாய்
அந்த குப்பையைக்  கிளறினான்.
அந்த நாய்க்குட்டியோ
அவனை நோக்கி
சின்னஞ்சிறிய அந்த பல்வரிசையை
வைத்துக்கொண்டு
"வள் வள் " என்றது.
என்னவோ  ஐ .நா வில்
குட்டி நாடுகள் எல்லாம்
கொழுத்த நாடுகளின் சுரண்டற்கோட்பாட்டை
இப்படி சன்னக்குரல்களில்
சத்தம் போட்டு  சத்தம் போட்டு
சரித்திரத்தை மாற்றிவிடுவதைப்போல்
குரைத்துக்கொண்டிருந்தது.
பொறுக்கித்தான் தின்னவேண்டும்
என்ற வர்க்கத்தில் தான்
அவனும் இருக்கிறான் என்று தெரியாமல்
அந்தக் குட்டி
அவனை நோக்கி
குரைத்துக்கொண்டே இருந்தது.
போதாதற்கு
அந்த பொடிப்பல்லை வைத்து
அவனைக் கவ்வியது.
அவன் அந்த  கருப்புப்பையை வைத்து
தடுத்துக்கொண்டான்.
அவன் அந்த குப்பைத்தொட்டியை
அந்த குட்டிக்கே
லீசுக்கு விடுவது போல்
விட்டு விட்டு போய் விட்டான்.
இருந்தாலும்
அது குரைத்துக்கொண்டே இருக்கிறது.
அந்தக்குரல்கள் ஓயவில்லை.

================================================

டாக்டர் எம்.சீனிவாசன்





புகைப்படம் நன்றி தினமலர் 12 மார்ச் 2018


இதயங்களின் அஞ்சலி ஒரு "இதய மருத்துவருக்கு"
===============================================================ருத்ரா

மதுரை வடமலையான் மருத்துவமனையின்
டாக்டர் எம்.சீனிவாசன் அவர்கள் மறைவிற்கு
இதயங்களின் கண்ணீர் அஞ்சலி.


உங்கள் இதயத்தை நிறுத்திவைத்துவிட்டு
நீங்கள் எங்கு சென்றீர்கள்?
இங்கே ஆயிரக்கணக்காய் இதயங்கள்
உங்கள் இதயத்துடிப்பைக்கேட்கத்
துடிக்கின்றன.
மரண தேவனுக்கே இதய அடைப்பு
ஏற்பட்டதாய் செய்தி வந்து
மருத்துவம் பார்க்க கிளம்பி விட்டீர்களோ?
அவனையும் குணப்படுத்தியிருப்பீர்கள்.
ஆனால் அவன் உங்கள் மீது
வீசிய பாசக்கயிற்றுக்கு
கொஞ்சமும் நேசம் இல்லையே!
அன்பின் இதயம் இல்லையே!
நின்ற இதயத்தையும் துடிக்கவைத்து
மரண விகிதத்தை எங்கே
ஒரு பூஜ்யநிலைக்கு நீங்கள்
கொண்டு சென்றுவிடுவீர்களோ
என்று உங்களைக்கொண்டு சென்றானோ
அந்த மரண தேவன்?
ஆயிரம் வாசல் இதயம் என்று
ஒரு கவிஞன் பாடினான்.
அப்படித்தான் எல்லா இதயங்களின்
வாசற்படியிலும் நின்று
உங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன..
இந்த இதயங்கள்.
வலது ஆரிக்கிள்
இடது ஆரிக்கிள்
வலது வெண்டிரிக்கிள்
இடது வெண்டிரிக்கிள் என்று
இந்த இதயத்தின்
அஞ்சறைப்பெட்டிக்குள் எல்லாம்
இந்த இதய நோயாளிகளின்
உயிரைப்பத்திரப்படுத்தி
காப்பாற்றி நீங்கள் செய்த சாதனைகள்
எத்தனை? எத்தனை?
இப்போது நீங்கள்
எந்த அறைக்குள்
ஒளிந்து கொண்டிடிக்கிறீர்கள்?
போதும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு?
இந்த நைந்த இதயங்களின்
கண்ணீர் வெள்ளத்துக்கு அணைகள் ஏது?
எங்கள் ஆழ்ந்த இரங்கல்களின்
அடி ஆழத்தில்
அதோ உங்கள் இதய‌த்தின்
தொப்பூள் கொடி போல்
கிடக்கிறதே
அந்த "ஸ்டெதஸ்கோப்"
அதுவும் கூட‌
உங்கள் பெயரை துடித்து துடித்து
எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

===========================================================



சனி, 10 மார்ச், 2018

அன்பான ரஜனி அவர்களே !



அன்பான ரஜனி அவர்களே !
==============================================ருத்ரா

எங்கள் அன்பான ரஜனி அவர்களே !
நீங்கள் ஓட்டமும் நடையாய்
இமயமலை ஏறியிருப்பதன்
உந்துதல்விசை எது?
உங்கள் வழக்கமான
"பாபா"வை தேடியா?
இல்லை
அந்த சூத்திரக்கயிற்றின்
மறுமுனைக்கு பூஜை செய்யவா?
எது எப்படியிருப்பினும்
உங்கள் கருத்துக்கள் கேட்க
ஆவலாய் இருக்கும் மக்களுக்கு
மூடிய உதடுகளும்
அல்லது அந்த "ஸ்டைலான" சிரிப்புகளும்
தான் பதில்களா?
ஊடகங்கள் வேண்டுமானால்
அந்த மௌனத்துக்கே
விழா எடுத்து தோரணங்கள்
தொங்க விடலாம்!
ட்விட்டர்கள் வைரல் ஆக்கலாம்.
இந்த கத்துக்குட்டித்  தனங்களையெல்லாம்
ஆண்டவன் சொல்றான்
இவன் கேட்கிறான் என்று
ஃ பிலிம் காட்டுவது
நிச்சயம் நீங்கள் சொல்லும்
அறவழியின் ஆன்மிக அரசியல் அல்ல.
உண்மையில்
காவிரி ஆறு இப்போது
நெருப்பு ஆறு
அதன் பிரச்சினைகள்
இங்கே கொழுந்து விட்டு
எரிந்து கொட்டிருக்கின்றன.
தமிழனின் உரிமைகளை
தந்திரமாய் பறிக்கின்றனர்.
அந்த மூடு திரைக்குள்
ஒரு துர்நாடகம் நடத்துகிறது கர்நாடகம்.
அந்த காவித்திரைக்குள்
தமிழர் நாகரிகமும்
அவன் வளங்களும்
குழி தோண்டிப்புதைக்கப்பட
ஒரு சூழ்ச்சி உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
234 தொகுதிகளிலும்
தமிழர்களின் இதயத்துடிப்புகளை
அலைவிரிக்கப்புறப்பட்டிருக்கும்
நீங்கள்
இமயமலையின் ஏதோ ஒரு குகைக்குள்
போயா
தியானம் செய்யவேண்டும்?
பற்றி எரியும் நெருப்புக்காட்டில்
தமிழகம் தத்தளிக்கும்போது
பிடில் வாசிக்கும் நீரோவாக
இமயமலைக்கு ஓடுவதன்
மர்மம் தான் என்ன?
எம் ஜி ஆரின்
"மர்மயோகி அல்லது மந்திரிகுமாரி "படத்தைப்போல
இந்த சாணக்கிய குருக்களின்
சதிகளை முறியடிக்கக்கிளம்பிவிட்டீர்களா?
உங்கள் பஞ்ச் டைலாக்குகள்
வெறும் உச்சரிப்புகள் அல்ல இனி!
இந்த ஜனநாயகத்தின் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்புகள்.
அந்த உயிர் எழுத்துக்களை
ஊர்வலம் போகபயன் படும்
பொம்மை எழுத்துக்களாய் மாற்றிவிடாதீர்கள்.
ஒரு எழுச்சிக்காட்டுங்கள்.
இந்த தமிழகம் காக்க வாருங்கள்!
"நெருப்புடா! கபாலிடா!"
புதிய விடியலுக்கு
ஒரு வெளிச்சம் காட்டட்டும்.

=================================================




வெள்ளி, 9 மார்ச், 2018

மாறித்தான் போனார்கள்!

மாறித்தான் போனார்கள்!
===========================================ருத்ரா இ.பரமசிவன்

பெண்ணே!
தண்டைகள் குலுங்க‌
கிளிந்தட்டு விளயாடிய போது
நினைத்திருந்தாயா?
கிளிச்சிறகுகளை கத்தரித்து விட்டு
கூண்டுக்குள் வைத்து
கூடி கும்மாளம்
அடித்துக்கொண்டிருப்பார்கள் என்று.
ஆனாலும் கிளியே பார்.
காலம் மாறிவிட்டது.
வயதுக்கு வந்து விட்டாய் என்று
உலக்கைக்கோடுகள் போட்டு
உன் உலகத்தை குறுக்கி வைத்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

குங்கும செப்புக்குள்
ஒரு மாளிகை கட்டி
உன்னை வைத்திருந்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

முரட்டுத் தாய் மாமன்களின்
மீசைக்கு நெய்தடவி
ஆசைக்கு தீனியாகி உன்னை
உறவு என்னும் கொட்டாங்கச்சிக்குள்
மடக்கி வைத்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

காதலாவது கத்தரிக்காயாவது என்று
வரதட்சிணையும் கழஞ்சுத்தங்கமும்
கொடுத்து வாங்கிவந்த கணவனுக்கு
கத்தரிக்காய் வதக்குவதும்
கறி சோறு ஆக்கிப்போடுவதுமே
உன் எல்லை என்று இருந்தவர்களும்
மாறித்தான் போனார்கள்.

பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
என்றவர்களும்
புதை குழிக்குப்போய்
ரொம்ப நாளாய் ஆச்சு.
அவர்களும் மாறித்தான் போனார்கள்.

இப்போது பார்.

மாட்டுச்சங்கிலியை நினவுபடுத்தும்
மாங்கல்யம்
சுவரில் ஆணியில்
தொங்குகிறது.

பந்தல் கெட்டிமேளம் மொய்களோடு
அத்தியாயத்தை முடித்துக்கொள்ள்ளும்
கல்யாணங்கள்
பதிவாளர் அலுவலகத்தில்
கையெழுத்துக்கு வந்தது.

பெண்ணே!
வளையல்களை மட்டும் குலுக்கி
கிளர்ச்சியூட்டும் உன் கையில்
விஸாவும் பாஸ்போர்ட்டும் அல்லவா இருக்கிறது.

உனக்கு எதற்கு இந்த‌
வேதமும் பிரம்மமும்
என்று ரகசியம் காத்தவர்கள்
உன் அறிவுச்சுடரில்
பிரம்மன்கள் எல்லாம்
அணைந்து போய் நின்ற ரகசியத்தை
இவர்கள் புரிந்து கொண்டார்கள்.

உன் அறிவுப்பெட்டகம் திறந்த போது
இந்த அஞ்சறைப்பெட்டிகளோடு
கம்பியூட்டர்களும் அல்லவா
திறந்து கொண்டுவிட்டன.
அதில் உன் சமையல் திறங்கண்டு
அடிமையாகின பலப்பல‌
பன்னாட்டுக்கம்பெனிகள்.

அம்மிக்கல் இருந்தபோது நீ அரைத்தாய்.
மிக்ஸி வந்த போது
இவனும் அரைக்கிறான்.
கிணரும் கல்லும் இருந்தபோது
நீயே எல்லாம் துவைத்தாய்.
வாஷிங் மெஷினில்
இன்று அவனும் துவைக்கிறான்.
அடுக்களையில் அன்று
பாத்திரங்கள் தேய்த்து தேய்த்து
மல்யுத்தம் புரிந்தாய்.
டிஷ் வாஷரில்
அள்ளிப்போடுகிறான் பாத்திரங்களை
இவனும் இன்று.
"டெம்பரேச்சர் ஆவன்"
குமிழ்கள் இருவரும் திருகலாம்.
சமையலும் கூட பொதுவுடைமை.

ஓ! பெண்ணே!
எந்திரமாய் இருந்தாய்.
எந்திரப்புரட்சியில்
எழுச்சி கொண்டாய்.

பெண்ணே!
நீ இவர்களுக்கு எந்திரமாய் இருந்தபோதும்
அறிவுக்கண் விழித்து
அதிர்ச்சி வைத்தியம் அளித்துவிட்டாயே.
இப்போது எந்திரங்களின் எந்திரங்களுக்கெல்லாம்
பொறி நுட்பம் எழுதத்தெரிந்த பிறகு
இந்த உலகம் கூட‌
உன் கால் கொலுசுவின்
ஒரு குண்டுமணிக்குள் தான்
குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பெண்ணே! நீ வாழ்க!

====================================================
07 ஜூன் 2014 ல் எழுதியது..

வியாழன், 8 மார்ச், 2018

மகளிர் தினம்

மகளிர் தினம்
==============================ருத்ரா

தெருப்புழுதி கூட‌
அரிதாரத்தைப் பூசிக்கொண்டது.
இன்று மகளிர் தினம்

____________________________________


சட்டம் ஒழுங்கு எனும்
"கருப்பணசாமிக்கு" பலியிட‌
அந்த கர்ப்பிணிப்பெண் (உஷா) தான்
கிடைத்தாளா?

_____________________________________


கடவுள் பாதியை கொடுத்துவிட்டார்.
இந்த மனிதன் அந்த 33 சதவீதத்துக்கும்
300 ஆண்டுகள் தவணை கேட்கின்றான்!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________

தினம் தினம் சில்லரையாய்
நரகம் தான் பெண்களுக்கு!
இன்று மட்டும் தோ"ரண"ங்களா?

_______________________________________

பெண்கள் என்றால் கவிஞர்களுக்கு
"வெள்ளாவியில்"
வேகவைக்கப்பட்டவர்களாத் தான் வேண்டும்.
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு
இவர்களுக்கு
இரவில் விளையாட
இந்த "மரப்பாச்சிகள்" தான் வேண்டும்!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________________

பெண்ணே
நீ சீற்றம் கொள்ளத்தான் வேண்டும்.
இனி புயல்களைத்தான்
கர்ப்பம் தரிக்க வேண்டும்.
இந்தப் "பயல்களை" அல்ல.
இவர்கள் உன்னிடம்
பிறக்கும்போதே உனக்கு
கொண்டுவருவது
உன் பொன்விலங்குகளைத்தான்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________

யோசித்துப்பார்
ஆணாத்திக்கம் உன் கருவிலிருந்து தான்
உரு பிடிக்கிறது.
உன் காதல் வானத்திலேயே
இந்த "கற்றாழைகளின்"
முட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________

பூக்களும்
பட்டாம்பூச்சிகளும்
உன்னை புழுவாக்கவே
கவர்ச்சி காட்டுகின்றன.
நிலாக்களும் விண்மீன்களும்
சொற்களில் தேனூற்றி
உன்னை இருட்டுக்கடலில்
மூழ்கடிக்கலாம்.
உன் அறிவு உன் ஆயுதம்.
உணர்ச்சிகளை
அறிவின் சல்லடையில் இட்டு
உன் "ஷவர்" ஆக்கிக்கொள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________





தகடூரார் அவர்களுக்கு ஒரு நினைவேந்தல்


http://tamil.thehindu.com/tamilnadu/article22600991.ece 
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/jan/30/காலமானார்-தகடூர்-கோபி-2853793.html 


தகடூரார் அவர்களுக்கு ஒரு நினைவேந்தல்
======================================================ருத்ரா

உன் தகடூர் எழுதியில் தான்

தினம் தினம் இலை போட்டுக்கொண்டு
தமிழ் விருந்து அருந்துகிறேன்
உன் எழுத்துக்களை விசைப்பலகையில்
நினைத்து நினைத்துப்
படைக்கும் போது
உன் கணினி சுவாசம் 
என் கவிதைகளின் நுரையீரல்களுக்குள்
எல்லாம்
கற்பனை வெளிச்சத்தின் பிழம்பு
சொட்டு சொட்டாய்
உயிர் பாய்ச்சுவதன் ஸ்பரிசத்தில்
மின்னல் ஊற்றிக்க்கொண்டிருந்தேன்.
இன்றும் 
நீ வாழ்கிறாய்.
எங்கள் இதயத்திலிருந்து வழிந்து
விசைப்பலகை தட்டும்
அந்த விரல்கள் வரை.
உன் தமிழின் மின்சாரத்திற்கு
என்றும் மரணம் இல்லை.


============================================