செவ்வாய், 26 மே, 2020

நான் யார்?


நான் யார்?
===============================================ருத்ரா



என்னை 
அப்படியே தகப்பனை
உரித்து வைத்திருக்கிறது என்றார்கள்.
தவழ ஆரம்பித்த போது
அப்படியே 
தாய் மாமன் தான் என்றார்கள்.
வயது ஏற ஏற‌
குரங்கு சேட்டையும் கூட ஆரம்பித்தது.
இப்போது
"டார்வினை"க்காட்டி
அந்த பரிணாமத்தின் படி தான்
நான் இருப்பதாய் சொல்லி
கண்டிப்புக்கார பள்ளியில் சேர்க்கப்போகிறார்களாம்
என்னை இடுப்பில் கயிறு கட்டாத குறையாய்
வைத்திருக்கிறார்கள்.
எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்து விட்டதாம்.
எல்லாம் என் கைக்கெட்டாத தூரத்தில் தான்.
ஒரு நாள் எனக்கு..
அந்த முகம் பார்க்கும் கண்ணாடி கிடைத்தது.
அதற்குள் தெரிந்த‌
முகத்தை
உலுக்கி குலுக்கி பார்த்தேன்.
சுழட்டி சுழட்டி பார்த்தேன்.
நான் யார் சாடை?
தெரியவில்லை..
இசகு பிசகாய் கண்ணாடி விழுந்து நொறுங்கியது.
அந்த குப்பையை எட்டி பார்த்ததில்
பலப்பல முகங்கள்..
அத்தனையும் கேள்விகள் தான்?
நான் யார்?
நான் யார்?
நான் யார்?
............
ரமண முனிவன் 
உரித்து உரித்துப்பார்த்து விட்டு
அந்தப்பாறைகள் இடுக்கில்
ஒரு கோமணத்தில் 
சுருண்டு கொண்டு விட்டான்.
ஆனால்
அந்த அக்கினியின் நரம்பு தெரியவில்லை.
அந்த தீயின் துடிப்பு துலங்கவில்லை.
"பெருவெடிப்பு" எனும் பிக்பேங்கின்
முதுகுப்புறத்தையும் போய்
கணிதத்தால் சுரண்டிப்பார்த்து விட்டார்கள்.
அங்கேயும்
அந்த கண்ணாடிச்சிதறல்கள்.
அவற்றிலும்
நான் யார் எனும்
கேள்விக்கொத்துக்கள்.
இப்போது கேட்பவையோ
குமிழிப்பிரபஞ்சங்கள் எனும்
கோடி கோடி பிரபஞ்சங்கள்.
இந்த கேள்விகள் 
எரிந்து கொண்டே இருக்கட்டும்.
பிறப்பும் இறப்பும் இப்படி
அந்த கண்ணாடியில்
முகம் பார்த்துக்கொண்டே 
இருக்கட்டும்!

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக