ஞாயிறு, 3 மே, 2020

கடி மரம் தடிதல் ஓம்பு...


கடி  மரம் தடிதல் ஓம்பு...
========================================ருத்ரா
( ஓலைத்துடிப்புகள் ..23 )



நனந்தலை எரிகள் பெய்து
ஊர‌ழிக்கும் மற்று செறுத்திடு அறம் 
அஃதே அனைத்து மறம் எனப்படுப.
காக்கைக் கருஞ்சிறைக் ஒக்கும் 
கலி இமை என் பூமயிர் மூசும்
கள்ள விழியுளும் கடுங்கணை பாய்ச்சி
கொல்லும் அறத்தினை யாது கற்றனை.
திங்கள் மீது திங்கள் மோதும்
தண்பனிக்காதல் தழைத்திடு மன்னே.
கடும் சினத்தூவல் அடுபோர்
அகற்றவே மென்சொல் ஒற்றி
பாடினான் காவிரிப்பூம்பட்டினத்து
காரிக்கண்ணன் என்றோர் நாவலன்.
மண்ணும் கழனியும் அழித்திடு முற்றி 
அரவிலை எஃகத்துக்  காய் சின வழுதீ!
கடி மரம் தடிதல் ஓம்பு என்றனன் ஆங்கே.
இளைய மரம் கொல்லும் மறம் மறமன்று
என மறைவாய் ஓதி போர் தடுத்தனன்.
அது செத்து என் ஒலிமென் கூந்தல்
விரியச் சாற்றும் நுண்மொழி அறிதி.
பிரிதல் பெருந்தீ உண்ணவோ விடுத்தனை
என் மின்னல் கதுப்பிடை அரியல் சுரிகுழல்
அறிவை.ஆற்று இத்தெரிவையின்  சுடுநோய்.

‍===============================================

குறிப்பு 
=======
புறநாநூற்றுப்பாடல் 57ல் "கடி மரம் தடிதல் ஓம்பு "என்ற இந்த அறம் சார்ந்த வரி இடம் பெறுகிறது. புலவர் காவிரிபூம்பட்டினத்து காரிக்கண்ணனார் இதைப் பாடியிருக்கிறார்.அவர் உள்  நோக்கம் 
போர் மறுக்கும் அமைதி நாட்டல் தான்.ஆனால் அந்த அற ச்சீற்றம் வெளிப்படும் முறை அந்த மன்னனின் (பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன்) மனத்தை மாற்றியிருக்கும் என நினைக்கிறேன்.
போரிடு.ஊரை எரி.வயலை அழி .அதாவது போரிட்டு எக்கேடாவது கெட்டுப்போ என்ற உட்குறிபோடு "இந்த ஊரின் காவல் மரமான இந்த இளைய மரத்தை வெட்டி உனக்கு என்ன ஆகப்போகிறது? அதை  விட்டு விடு" என்கிறார். இப்படி மெல்லிய மன சாட்சியின் குரலைக்காட்டி அவனை போர் மறுக்கும் மாண்பு உடையவனாக ஆக்க முயற்சிக்கிறார்.அதனால் அவனும் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறனாக மாறியிருக்கலாம்.துஞ்சிய என்ற அடைமொழி "இறந்த" என்ற பொருளையே தவறாக சுட்டுகிறது.இலவந்திகைப்பள்ளி என்ற அந்த சமணப்பள்ளியில் உண்டு உறைந்து வாழ்பவனாக மாறிபோய் இருக்கலாம்.

இந்த "கடி மரம் தடிதல் ஓம்பு" என்ற வரியை தலைவி சுட்டிக்காட்டி தலைவன் அவளிடம் மிகக்கொடிய பிரிதல்  நோயைத்தராமல் மெல்லிய 
காதல் உணர்வினைக்காட்டி அவளை இன்புறசெய்யுமாறு வேண்டுவதாக 
எனது இந்த சங்க நடைசெய்யுட்கவிதையை எழுதியுள்ளேன்

=======================================ருத்ரா 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக