ஞாயிறு, 24 மே, 2020

ராமானுஜன்

ராமானுஜன்
======================================ருத்ரா

விறைத்து நிற்பது
என் முதுகெலும்பு அல்ல.
விடைத்து
ஒரு விடைக்கு 
உள்ளே திமிறிக்கொண்டு
விடைக்கும்
கேள்வி அது.
சிறு புழுபோல் உள்ளுக்குள் ஊர்ந்து
அனகொண்டாவாய்
சுற்றி சுற்றி வந்து
முறுக்கித் திருக்கி
என்னைப்பிசைகிறது.
என்னைபிழிகிறது.
என்ன இது?
இந்த கேள்வி அந்தக்கேள்வி அல்ல?
கேள்வியைப்பற்றிய கேள்வியாய்
பலப்பல கேள்விகள்
கொடிசுற்றிக்கிடக்கிறது
அகன்ற ஆயிரம் இதழ்களில்
அந்த ராட்சசப்பூவின்
மகரந்தபைக்குள்
படுத்திருக்கும்
அணுகுண்டுகள்
வெடிக்கக்காத்திருக்கின்றன.
விடை தெரியும்போது தான்
வெடிக்குமா?
இல்லை
ஓவ்வொரு கேள்வியாய்
எனக்குள் ஆணிகள் 
அறையப்படும்போதெல்லாம்
அது என்னை
வெடித்து வெடித்து சிதறச்செய்து
ஒன்று கூட்டுகிறதா?
தெரியவில்லை.
இருப்பினும்
அந்த கேள்வி
என் முதுகுத்தண்டின்
ஆறு சக்கரங்களையும் தாண்டி
சஹஸ்ராரச்சாற்றையும் 
உறிஞ்சிக்குடித்து விட்டுத்தான்
உமிழ்கிறது
கேள்விகளை!
எனக்குத்தெரிந்தது
ஐந்து பூதம் தான்!
தெரியாத‌
உணர்ந்து உணராத‌
புலப்படாத‌
மில்லியன் பூதங்கள்
அல்லது பரிமாணங்கள்
லூப் எனும் பாலிநாமியல் கணக்குச்சுருள்களாய்
எனக்குள் தீர்வுக்காடுகளாய்
மண்டிக்கிடக்கிறது.
ராமானுஜன் அந்த எலிப்டிக் ஃபங்ஷன்களின்
வேருக்குள் துருவி
விடையை கண்டுவிட்டான்?
எப்படி?
நிரூபணம் என்ன?
என்று 
இன்று விஞ்ஞானக் கணித வல்லுனர்கள்
அவனது தகரப்பெட்டிக்குள்
கிடக்கும் நோட்டுப்புத்தங்களை
குடைந்து கொண்டிருக்கிறார்கள்.
______________________________________________________-
01.07.2016 ல் எழுதியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக