திங்கள், 4 மே, 2020

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
======================================ருத்ரா
( ஓலைத்துடிப்புகள்..24)



பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும்
பக்கம் இருந்து மதிமலி புரிசை
வான் தோய் இமையம் இமையாது
விழிக்கும் விழுப்பம் புகழ்சேர் வெற்பன்
அற்பம் செப்பும் முரல் பரல் முகடன்
ஆயினன் கொல்லோ.அணி இழாய்
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
வாலிழைக் கிளர்வால் அறுபடும்
வன்முறை ஊழின் ஆற்றுப்படுமோ?
செம்பின் அம்பொன் குறுமாந்தளிரின்
மின்னல் பெய்தரு ஒளிபூசி யானும்
பசலை நோற்று பாழ்படு கூவல்
கிடந்தேன் மன்னே.யாண்டுகள் நீளுமோ
மலர்தலை உலகம் கவிழுமோ
அவன் தோற்று குணகம் ஓர்நாள்
எல்லே பரப்பும் என் உயிர் தளிர்தரூஉம்.


===============================================

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

ஆய் அண்டிரனை புறநானூற்றுப்பாடல் 132ல்

வட புல மன்னர்களுக்கும் ஒப்பாக பாடியிருக்கிறார்.

அப்பாடலில்  "நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி"

என்னும் வரி மிகவும் எழில் நுட்பம் செறிந்த தாகும்.



வடதிசை இமயம் மிகவும் உயர்ந்து தென் திசை தாழ்ந்து

நெடிய இந்நிலம் பிறழ்வது எனும் பேரிடர் நிகழாது

தடுத்தவன் ஆய் அண்டிரன் என்னும் தமிழ் மன்னனே

என்கிறார் புலவர்.அப்படியெனில் இவன் கொடையில்

படையில் எல்லாம் சிறந்தவனாக வடபுலத்தையே

நம் மண்ணுக்கு சமப்படுத்தியவன் அல்லவா என்று வியக்கிறார்.

நில இயல் அடிப்படையில் தென் மண்டலம் கடலில் மூழ்கி

வடபுலம் உயர்ந்திருக்க வேண்டும்.ஆம் அப்படி ஒரு பிரழ்மம்

(பிரளயம்) ஏற்படாதவாறு தடுத்தது ஆய் அண்டிரன் என்று

உயர்வு நாவிற்சியாகப்பாடுகிறார் .

"முன்னுள்ளுவோனைப்  பின்னுள்ளினேனே " என்று

இவன் புகழை இது வரை யான் அறியாது பாழ்பட்டேன்

எனும் நெஞ்சம் நைகிறார்.கடல் கோள் ஏற்படுத்தும்

ஊழிப்பேரலைகள் தலை காட்டி தலை காட்டி

சென்றிருக்கும் பின்னணியில் அதை உட்குறிப்பாக்கி

அப்பாடலை எழுதியிருப்பார் என எண்ணுகிறேன்.



தலைவி தலைவனைப்பிரிந்து ஒரு கணம் கூட

வாழ இயலாத நிலையை விவரிக்கும் இச்சங்க

நடைப்பாடலை எழுதியுள்ளேன்.



=======================================ருத்ரா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக