ஞாயிறு, 17 மே, 2020

முள்ளி வாய்க்கால்

முள்ளி வாய்க்கால்
=============================================ருத்ரா



பதினொரு ஆண்டுகள் ஆனபின்னும்
குருதி வாய்க்கால்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
சூடு ஆறாத கண்ணீருடன்.
ஒரு லட்சத்துக்கும் மேல்
தமிழ்ப்பிணங்கள்...
கிடக்கட்டும் விடுங்கள் என்று
கொரோனா பிணங்களை
எண்ணிக்கொண்டிருக்கிறது
உலகம்.
அறம் பிறழ்ந்த கொடுங்கொலைகளின்
கசாப்பு வெறியை
இந்த உலகம் ஏன் கண்டுகொள்ளவில்லை?
இங்கே பெட்ரோல் பசியெடுத்த கழுகுகளே
பறக்கின்றன.
உலகம் இருக்கட்டும்.
இறையாண்மை என்ற பெயரில்
இந்தியாவும் இதயத்தை
அடகு வைத்து விட்டதே.
தமிழ்க்குடிகள் தானே
இந்தியாவின் பழங்குடிகள்
என்ற வரலாற்றையே
வாரிச்சுருட்டி
விழுங்கி விட்டாவர்களுக்குத்தானே
"செங்கோட்டையும் "
நீண்ட காலமாய்
குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது.

இந்த தமிழ் நெஞ்சங்களாவது
பதறினவா?
துடித்தனவா?
குறுக்கும் நெடுக்குமாய்
பொல்லா அரசியல் அரசியல் தான்
இங்கு நெசவு செய்துகொண்டிருந்தன.
ஒருவன்
கம்பீரமான
இமய வரம்பன் வாளின்
சொல்லேந்தி
ஆட்சி செய்தான்.
இதன் வெப்பமே இலங்கையின்
ஆணவத்தை
எரித்துவிட்டுக்கொண்டிருந்தது.
அடுத்தவனோ
அவனிடம் பழக்கப்பட்டுவிட்ட
அட்டைக்கத்தியைச்
சுழற்றிக்கொண்டிருந்தான்.
ஆட்சியின் பகடைக்காயோ
பணப்பட்டுவாடாவில்
சுருண்டு கொண்டது
அடுத்துவந்தவரோ
ஆரியாக்கோவில் கட்ட
செங்கல் எடுத்துக்கொடுத்து
ஆரியப்படை கடந்த பாண்டியனின்
முகத்தில் கரி பூசிக்களித்தார்.
பாடப்புத்தகத்து அட்டையில்
வள்ளுவன் முகத்துக்கும்
மை அப்பி மகிழ்ந்தார்.


தமிழ் மொழியே மரத்துப்போன‌
மந்தைகள்
ஊடங்களின் குத்தாட்டங்களோடு
குளிர் காய்கின்றன.
சினிமாவின் ஒளி சாராயம் காய்ச்சி
முட்ட முட்டக்
குடித்துக்கொண்டிருக்கின்றன.
பிரபாகரன் எனும் பெரும்புயலை
அலங்கார படமாக்கி
சட்டைப்பாக்கெட்டில்
வைத்துக்கொண்டு
மைக்குகளோடு சடுகுடு விளையாடி
இரைச்சல் மழையை
தூவிக்கொண்டிருக்கின்றன
சில கும்பல்கள்.
உலக அனுதாபம் எனும்
குடையின் கீழ்
பத்திரமாய் இருந்துகொண்டு
தமிழ் எழுச்சிக்கு
உலை வைக்கும் இந்த கூட்டங்கள்
வியர்க்க வியர்க்க‌
வியர்த்தமான  பேச்சுகளை
அவிழ்த்து விடுகின்றன.
வெறும் துப்பாக்கிகளை பதியம் இட்ட
போராட்டமா அது?
தமிழ் உணர்வுகள் எழுச்சியின்
எரிமலைக்கர்ப்பங்கள்
உலகிற்கே அல்லவா
அதிர்வலைகளை வீசின.
இப்போது
முள்ளிவாய்க்கால்
வெறும் மார்ச்சுவரி அல்ல..
மூண்டெழும் தமிழ்க்கனல்
அதில் உண்டு.
தமிழனுக்கு நாடில்லை என்று
நீங்களே புலம்பல் அலைபரப்பு
செய்யாதீர்கள்.
தமிழனுக்கு
வீடுண்டு நாடுண்டு
உலகமும் உண்டு.
தமிழனுக்கு தமிழே கடவுள்.
அதை மழுங்கடிக்க‌
தெய்வம் ஒன்றை
பட்டா போட்டுக்கொள்ளவா
இத்தனைக்கூட்டம்?
தமிழா!
முள்ளி வாய்க்கால் வாய்க்கால் அல்ல.
அது ஒரு செங்கடல்.
கடல் பிளந்து வழி தேடும்
வீரர் கூட்டம் தமிழ்க்கூட்டம்.
வீணர்களின் தோரணங்களுக்கு
அங்கு இடமில்லை.

தமிழ் வாழ்க.
தமிழ் வளர்க.
தமிழ் வெல்க.

==============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக