வியாழன், 28 மே, 2020

ஒற்றைக்கண்ணாக்கி...



   ஒற்றைக்கண்ணாக்கி...
================================================
ருத்ரா 




 உடம்பெல்லாம் காடாகி 
ஒரு மனத்தின் நினைவாகி 
ஓர்மையை 
நான் அங்கு 
கூர்மையான ஓர் 
ஒற்றைக்கண்ணாக்கி 
ஒடுங்கி இருந்தேன்.
வானம் நீலச் சமுக்காளத்தை 
விரித்துக்காத்துக்கிடந்தது .
யாருக்கும் யாருக்கும்
அங்கே
நிச்சயதார்த்தம்?
மௌனத்துக்கும் மௌனத்துக்கும் தான்
அங்கே கல்யாணம்!
சத்தமும் இரைச்சலுமே
சங்கீதமாகிப்போன இல்லறம் தானே
இனிய அறம் .
வண்டுகளின் ரீங்காரமும்
பூக்களின் இலைகளின் உரசல் ஒலிகளும்
அந்த மெல்லிய வானம்
  எனும்
சல்லாத்துணிப்படலத்தை
ஒவ்வொரு விநாடித்துளியைக் கொண்டும் 
நெய்துகொண்டிருக்கின்றனவே.
அந்த நெய்தல் கானம்
ஓ!
வானமே!
உனக்கு கேட்கவில்லையா?
கேட்டு விட்டது வானத்துக்கு.
உறுமல்  தொடங்கி விட்டது.
இடியும் மின்னலும்
இப்போது ஊசியும் மின்னலுமாய்
ஆகிவிட்டது.
வானத்தின் அழகிய சங்கீதம்
அரங்கேறத்துவங்கி விட்டது.


================================================


புதன், 27 மே, 2020

"பக்தா"


பக்தா
உன் பக்தியை மெச்சினேன்.
என் மீது உள்ள பக்தியைக்காட்டிலும்
கொரோனாவின் மீதுள்ள பக்தியால்
எனக்கு பூட்டு போட்டு விட்டாய்.
அல்லது
என் மீது உள்ள பிரியத்தால் 
அந்த கொரோனாவிடமிருந்து காப்பாற்ற‌
எனக்கு பூட்டு போட்டிருப்பாய்.
சரி.
இப்போதாவது புரிந்து கொண்டாய்
கண்ணுக்குத்தெரியாத அந்த வைரசும்
நானும் ஒன்று தான் என்று!
அப்படியென்றால் 
எதற்கு அந்த கர்மம் பிடித்த‌
நான்கு வர்ண புருசு.
தூக்கி எறி அதை.
அப்போது தான்
நான் உன்னிலும் 
நீ என்னிலும் 
இருப்பதாய் அர்த்தம்.

=====================================ருத்ரா

செவ்வாய், 26 மே, 2020

நான் யார்?


நான் யார்?
===============================================ருத்ரா



என்னை 
அப்படியே தகப்பனை
உரித்து வைத்திருக்கிறது என்றார்கள்.
தவழ ஆரம்பித்த போது
அப்படியே 
தாய் மாமன் தான் என்றார்கள்.
வயது ஏற ஏற‌
குரங்கு சேட்டையும் கூட ஆரம்பித்தது.
இப்போது
"டார்வினை"க்காட்டி
அந்த பரிணாமத்தின் படி தான்
நான் இருப்பதாய் சொல்லி
கண்டிப்புக்கார பள்ளியில் சேர்க்கப்போகிறார்களாம்
என்னை இடுப்பில் கயிறு கட்டாத குறையாய்
வைத்திருக்கிறார்கள்.
எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்து விட்டதாம்.
எல்லாம் என் கைக்கெட்டாத தூரத்தில் தான்.
ஒரு நாள் எனக்கு..
அந்த முகம் பார்க்கும் கண்ணாடி கிடைத்தது.
அதற்குள் தெரிந்த‌
முகத்தை
உலுக்கி குலுக்கி பார்த்தேன்.
சுழட்டி சுழட்டி பார்த்தேன்.
நான் யார் சாடை?
தெரியவில்லை..
இசகு பிசகாய் கண்ணாடி விழுந்து நொறுங்கியது.
அந்த குப்பையை எட்டி பார்த்ததில்
பலப்பல முகங்கள்..
அத்தனையும் கேள்விகள் தான்?
நான் யார்?
நான் யார்?
நான் யார்?
............
ரமண முனிவன் 
உரித்து உரித்துப்பார்த்து விட்டு
அந்தப்பாறைகள் இடுக்கில்
ஒரு கோமணத்தில் 
சுருண்டு கொண்டு விட்டான்.
ஆனால்
அந்த அக்கினியின் நரம்பு தெரியவில்லை.
அந்த தீயின் துடிப்பு துலங்கவில்லை.
"பெருவெடிப்பு" எனும் பிக்பேங்கின்
முதுகுப்புறத்தையும் போய்
கணிதத்தால் சுரண்டிப்பார்த்து விட்டார்கள்.
அங்கேயும்
அந்த கண்ணாடிச்சிதறல்கள்.
அவற்றிலும்
நான் யார் எனும்
கேள்விக்கொத்துக்கள்.
இப்போது கேட்பவையோ
குமிழிப்பிரபஞ்சங்கள் எனும்
கோடி கோடி பிரபஞ்சங்கள்.
இந்த கேள்விகள் 
எரிந்து கொண்டே இருக்கட்டும்.
பிறப்பும் இறப்பும் இப்படி
அந்த கண்ணாடியில்
முகம் பார்த்துக்கொண்டே 
இருக்கட்டும்!

================================================

ஞாயிறு, 24 மே, 2020

ராமானுஜன்

ராமானுஜன்
======================================ருத்ரா

விறைத்து நிற்பது
என் முதுகெலும்பு அல்ல.
விடைத்து
ஒரு விடைக்கு 
உள்ளே திமிறிக்கொண்டு
விடைக்கும்
கேள்வி அது.
சிறு புழுபோல் உள்ளுக்குள் ஊர்ந்து
அனகொண்டாவாய்
சுற்றி சுற்றி வந்து
முறுக்கித் திருக்கி
என்னைப்பிசைகிறது.
என்னைபிழிகிறது.
என்ன இது?
இந்த கேள்வி அந்தக்கேள்வி அல்ல?
கேள்வியைப்பற்றிய கேள்வியாய்
பலப்பல கேள்விகள்
கொடிசுற்றிக்கிடக்கிறது
அகன்ற ஆயிரம் இதழ்களில்
அந்த ராட்சசப்பூவின்
மகரந்தபைக்குள்
படுத்திருக்கும்
அணுகுண்டுகள்
வெடிக்கக்காத்திருக்கின்றன.
விடை தெரியும்போது தான்
வெடிக்குமா?
இல்லை
ஓவ்வொரு கேள்வியாய்
எனக்குள் ஆணிகள் 
அறையப்படும்போதெல்லாம்
அது என்னை
வெடித்து வெடித்து சிதறச்செய்து
ஒன்று கூட்டுகிறதா?
தெரியவில்லை.
இருப்பினும்
அந்த கேள்வி
என் முதுகுத்தண்டின்
ஆறு சக்கரங்களையும் தாண்டி
சஹஸ்ராரச்சாற்றையும் 
உறிஞ்சிக்குடித்து விட்டுத்தான்
உமிழ்கிறது
கேள்விகளை!
எனக்குத்தெரிந்தது
ஐந்து பூதம் தான்!
தெரியாத‌
உணர்ந்து உணராத‌
புலப்படாத‌
மில்லியன் பூதங்கள்
அல்லது பரிமாணங்கள்
லூப் எனும் பாலிநாமியல் கணக்குச்சுருள்களாய்
எனக்குள் தீர்வுக்காடுகளாய்
மண்டிக்கிடக்கிறது.
ராமானுஜன் அந்த எலிப்டிக் ஃபங்ஷன்களின்
வேருக்குள் துருவி
விடையை கண்டுவிட்டான்?
எப்படி?
நிரூபணம் என்ன?
என்று 
இன்று விஞ்ஞானக் கணித வல்லுனர்கள்
அவனது தகரப்பெட்டிக்குள்
கிடக்கும் நோட்டுப்புத்தங்களை
குடைந்து கொண்டிருக்கிறார்கள்.
______________________________________________________-
01.07.2016 ல் எழுதியது

சனி, 23 மே, 2020

இது கொரோனா காலம்!


இது கொரோனா காலம்!
_________________________________ருத்ரா



பெண் குழந்தைக்கு

பெயர் சூட்ட‌

பட்டியல் ரெடி.


"சிம்ம வாஹினி

புஷ்ப ஹாசினி

அம்ச வர்ஷனி

பத்ம வாசனி

..........

கடைசியில்

தேர்வானது..


"கிருமி நாசினி"

_____________________



"இறவொடு வந்து கோதையொடு பெயரும்"

"இறவொடு வந்து கோதையொடு பெயரும்"
==========================================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள்..30)



தைஇய தைஇய தழையப் புனைந்து 
நீராடு முளிதரும் அலையிடை வாங்கி
நீர்ப்புள் அன்ன நெடுமூச்சு கிடந்து
தொண்டை தழீஇ பசுநீர் பயில‌
தோய்ந்தாய் மன்னே.தொலையக்கடந்தவன்
என்று வரூஉம் என மாமை அவிய 
உன் மணிநலம் அழிந்தாய் அளியள் நீயே.
பொல்லா பொருளா? கனிபடு இருளா?
அலைபடுவான் போல் அலை ஆறு கடாம்
அல்லல் உழப்பவன் மல்லல் ஓயான்.
நின் சில்லைங்கூந்தல் நல்லகம் நாணி
சிலை ஒன்று தொடுத்து இரும்பிழி மழைய‌
நின் நீள்விழி நெய் கனி விராலென 
கவியும் திறக்கும் களித்திறம் காண
அடலேறு கடலது ஆற்றா மூச்சில்
எறிதரும் பூநுரை எக்கர் கரைக்க‌
விரைதரூஉம் நனிஅடர் சுரம் நீங்கி.
வருவதும் போவதுமாய் உன் விழிகொள்ளை
வியங்கு வெள் வேட்டையின் அலைகள் ஆடி
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
திரையன் இவன் நின் உண்கண் மாட்டே.

================================================

தலைவன் தலைவி மேல் உள்ள காதலை மறக்கமுடியாமல்
கடல் அலை போல் (பொருள் தேட) போவதும் வருவதுமாய்
இருக்கிறான்.காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் 
அகநானூறு பாடல் 123 ல் இவன் இப்படி கடல் அலை போல்
அல்லாடுவதை "இறவொடு வந்து கோதையொடு பெயரும்"
என்ற உவமை வரிகளில் நன்கு அழகு பட விவரித்துள்ளார்.
அலைகள் இறால் மீன்களை கொண்டுவந்து போட்டுவிட்டு
மகளிர் நீராடிக்கழித்த மலர்மாலைகளை எடுத்துக்கொண்டு
கடலுள் ஓடுமாம்.இறால் மீனை மலர்மாலையோடு ஒப்புநோக்கி
அந்த உவமை வரியை அமைத்திருப்பதை எண்ணி எண்ணி
அந்தக் கற்பனை இன்பம் கரைகாணா கடலாய் பொங்குவதை
உணர்கின்றேன்.அதில் நான் எழுதிய  சங்கந‌டைச்செய்யுட்
கவிதையே இது

==============================================

வெள்ளி, 22 மே, 2020

அழகே அழகு



அழகே அழகு
_______________________________ருத்ரா

நகம் கடிக்கும் 

உன் அழகே அழகு!

எனக்கு வலிக்கவே இல்லை.

மிகவும் சுவையாக அல்லவா இருக்கிறது.

உன் நகமும் நான் தான் 

என்று 

உனக்கு தெரியாது.

________________________________________



வியாழன், 21 மே, 2020

இது கொரோனா குஷி..


இது கொரோனாகுஷி..
________________________________ருத்ரா

கொரோனா..
கொரோனா..
கொரோனா..
கொரோனா..
கொரோனா...
.........
..........
என்னடி இது?
ராமஜெயம்
எழுதுன்னு சொன்னா
என்னவோ எழுதிண்டு இருக்கே.
....
ஆமாம் அம்மா
நான் 
ராமஜெயம்னு தான்
எழுதிண்டே இருந்தேன்..
அது எப்படி 
இப்படி ஆச்சு..?
........
அவளுக்கு தெரியாதா என்ன?
கல்லூரியை மூடிட்டாங்க.
அவ ஆள இன்னைக்குத்தான்
யதேச்சையா 
அந்த ஷாப்புலே
முக கவசத்துக்குள்ள 
பாத்துட்டு வந்திருக்கா..

இது கொரோனா குஷி..

______________________

திங்கள், 18 மே, 2020

நாலாவதும் பொண்ணு.எருக்கம்பால் ஊத்திட்டோம்.


https://tamil.oneindia.com/news/madurai/lockdown-crimes-four-days-baby-killed-and-father-and-grandmother-arrested-for-385822.html

சுட்டிக்கு நன்றி.



நாலாவதும் பொண்ணு.எருக்கம்பால் ஊத்திட்டோம்.
========================================ருத்ரா

ஊடகத்துக்கு பேட்டி அளித்த‌
பெண்ணே!
நீ என்றாவது ஒரு பெண் என்று
நினைத்திருக்கிறாயா?
பூச்சூடி பொட்டிட்டு
வாக்கப்பட்டு போறதெல்லாம்
உன் கருவறை என்னும் 
கோயிலுக்குள்
உன் பெண்மைக்கே
ஒரு கல்லறை கட்டுதற்கோ?
பெண்ணாய் பிறந்தவள்
படுகின்ற வதைகள் எல்லாம்
சாதி மதங்கள் எனும்
சைத்தான்கள் தந்தது தானே.
கஞ்சிக்கும் வழியின்றி
போகின்றோமே என்று
கண் முளைக்கும் முன்னேயே
கண்மணியின் கண்மூடி மண்மூடி
வைத்தாயே.
ஆண் என்று
கொம்பு மட்டுமே உள்ள மிருகங்களா
உன்னை சின்னாபின்னம் செய்வது?
பெண்ணையும் 
இந்த மண்ணையும் மாண்போடு
காக்கின்ற ஆண் தானே ஆண்.
மற்றவனுக்கு
அந்த முண்டாசு எதற்கு?
முறுக்கு மீசை தானெதற்கு?
நாட்டாமை செய்கின்றேன் என்று
நாட்டு ஆமை போல்
மல்லாக்க கிடப்பவனா
நாட்டைக்காப்பான்?
எளியவனைச்சுரண்டும்
வலியவர்கள் மீது அல்லவா
இவர்கள் 
புறநானூற்று வீரம் பொங்கவேண்டும்?
இவர்கள் கூரிய கொம்புகளும்
பாயவேண்டும்.
போகட்டும்
"பொட்டச்சிகள்"
என்று திமிர்வாதம் பேசும்
இந்த ஆண்குஞ்சுகளை
அடை காக்கும் 
தாய் இனமே!
ஏன் இந்த ஓரவஞ்சனை?
அந்தப்பொட்டைப்பயல்களுக்கும்
இனி  பாலூட்ட‌
அரளிவிதை அரைத்து ஒரு
அமுதப்பால் 
அந்த சிரட்டையில் எடுத்து வை!

================================================

ஞாயிறு, 17 மே, 2020

நிவாரணம்.


நிவாரணம்.
______________________________________


கட்டம் கட்டமாய் நிவாரணம்.
சந்தோஷம்.
ஆனால் 
இந்த பரமபத கட்டங்களில்
கார்பரேட்டுகளின் 
பாம்புகளே அதிகம்.
ஏழைகளின் 
ஏணிகளை விட.

_______________________________ருத்ரா

முள்ளி வாய்க்கால்

முள்ளி வாய்க்கால்
=============================================ருத்ரா



பதினொரு ஆண்டுகள் ஆனபின்னும்
குருதி வாய்க்கால்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
சூடு ஆறாத கண்ணீருடன்.
ஒரு லட்சத்துக்கும் மேல்
தமிழ்ப்பிணங்கள்...
கிடக்கட்டும் விடுங்கள் என்று
கொரோனா பிணங்களை
எண்ணிக்கொண்டிருக்கிறது
உலகம்.
அறம் பிறழ்ந்த கொடுங்கொலைகளின்
கசாப்பு வெறியை
இந்த உலகம் ஏன் கண்டுகொள்ளவில்லை?
இங்கே பெட்ரோல் பசியெடுத்த கழுகுகளே
பறக்கின்றன.
உலகம் இருக்கட்டும்.
இறையாண்மை என்ற பெயரில்
இந்தியாவும் இதயத்தை
அடகு வைத்து விட்டதே.
தமிழ்க்குடிகள் தானே
இந்தியாவின் பழங்குடிகள்
என்ற வரலாற்றையே
வாரிச்சுருட்டி
விழுங்கி விட்டாவர்களுக்குத்தானே
"செங்கோட்டையும் "
நீண்ட காலமாய்
குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது.

இந்த தமிழ் நெஞ்சங்களாவது
பதறினவா?
துடித்தனவா?
குறுக்கும் நெடுக்குமாய்
பொல்லா அரசியல் அரசியல் தான்
இங்கு நெசவு செய்துகொண்டிருந்தன.
ஒருவன்
கம்பீரமான
இமய வரம்பன் வாளின்
சொல்லேந்தி
ஆட்சி செய்தான்.
இதன் வெப்பமே இலங்கையின்
ஆணவத்தை
எரித்துவிட்டுக்கொண்டிருந்தது.
அடுத்தவனோ
அவனிடம் பழக்கப்பட்டுவிட்ட
அட்டைக்கத்தியைச்
சுழற்றிக்கொண்டிருந்தான்.
ஆட்சியின் பகடைக்காயோ
பணப்பட்டுவாடாவில்
சுருண்டு கொண்டது
அடுத்துவந்தவரோ
ஆரியாக்கோவில் கட்ட
செங்கல் எடுத்துக்கொடுத்து
ஆரியப்படை கடந்த பாண்டியனின்
முகத்தில் கரி பூசிக்களித்தார்.
பாடப்புத்தகத்து அட்டையில்
வள்ளுவன் முகத்துக்கும்
மை அப்பி மகிழ்ந்தார்.


தமிழ் மொழியே மரத்துப்போன‌
மந்தைகள்
ஊடங்களின் குத்தாட்டங்களோடு
குளிர் காய்கின்றன.
சினிமாவின் ஒளி சாராயம் காய்ச்சி
முட்ட முட்டக்
குடித்துக்கொண்டிருக்கின்றன.
பிரபாகரன் எனும் பெரும்புயலை
அலங்கார படமாக்கி
சட்டைப்பாக்கெட்டில்
வைத்துக்கொண்டு
மைக்குகளோடு சடுகுடு விளையாடி
இரைச்சல் மழையை
தூவிக்கொண்டிருக்கின்றன
சில கும்பல்கள்.
உலக அனுதாபம் எனும்
குடையின் கீழ்
பத்திரமாய் இருந்துகொண்டு
தமிழ் எழுச்சிக்கு
உலை வைக்கும் இந்த கூட்டங்கள்
வியர்க்க வியர்க்க‌
வியர்த்தமான  பேச்சுகளை
அவிழ்த்து விடுகின்றன.
வெறும் துப்பாக்கிகளை பதியம் இட்ட
போராட்டமா அது?
தமிழ் உணர்வுகள் எழுச்சியின்
எரிமலைக்கர்ப்பங்கள்
உலகிற்கே அல்லவா
அதிர்வலைகளை வீசின.
இப்போது
முள்ளிவாய்க்கால்
வெறும் மார்ச்சுவரி அல்ல..
மூண்டெழும் தமிழ்க்கனல்
அதில் உண்டு.
தமிழனுக்கு நாடில்லை என்று
நீங்களே புலம்பல் அலைபரப்பு
செய்யாதீர்கள்.
தமிழனுக்கு
வீடுண்டு நாடுண்டு
உலகமும் உண்டு.
தமிழனுக்கு தமிழே கடவுள்.
அதை மழுங்கடிக்க‌
தெய்வம் ஒன்றை
பட்டா போட்டுக்கொள்ளவா
இத்தனைக்கூட்டம்?
தமிழா!
முள்ளி வாய்க்கால் வாய்க்கால் அல்ல.
அது ஒரு செங்கடல்.
கடல் பிளந்து வழி தேடும்
வீரர் கூட்டம் தமிழ்க்கூட்டம்.
வீணர்களின் தோரணங்களுக்கு
அங்கு இடமில்லை.

தமிழ் வாழ்க.
தமிழ் வளர்க.
தமிழ் வெல்க.

==============================================


சனி, 16 மே, 2020

எல‌

நிவாரணம்
-------------------------------------------------------------------------ருத்ரா

எல‌
இருபது லட்சம் கோடிக்கு
எத்தனை முட்டை போடணும்னு
தெரியுமால.
என்னல கேக்குதெ?
கையில எவ்ளவு குடுப்ப?
காலுல எவ்ளவு குடுப்பேன்னு?
சோலியப்பாத்துகிட்டு போல.
கொரானாவுக்கால குடுக்கேன் இத?
போங்கல மொட்டப்பயலுவளா.
இன்னும் கொஞ்ச நாள்ள
ஸ்டேட் எலக்சன்கள்ளாம்  வரும்ல‌
அப்ப‌
இப்ப மாரியே
மெஷின தடவி தடவி விட்டாப்பொதும்ல.
எல எதைத்தொட்டாலும்
தாமரதாம்ல பூக்கும்.
கொஞ்சம் அசந்தீன்னா
ஓங்காதுல கூட வந்து
ரெண்டு பூத்துகிட்டு நிக்கும் பாரு...
அது சரி..
என்னவோ கொரானாவோ
என்ன எழவோ
யாரு அதுக்கு கவலப்பட்டா.
எல
அது இனி ஒங்கூடதான் இருக்கும்ல.
அதுக்கும் சேத்து தாம்ல
வாக்காளர் பட்டியல் ரெடியாய்ட்டு இருக்கு
சரியா..
சரி..போ..
இனி எதுத்து எதுத்து  கேள்வி கேக்காதல.
கேட்டா
நீ பாகிஸ்தான்காரன் சேக்காளின்னு
சொல்லிட்டு
செயில்ல கொண்டு
போட்டுருவோம்ல...
பாத்துக்க..ஜாக்கிரத..

யாரோ பூதங்கணக்கா
அவன் முன்னாடி நாக்க துறித்திக்கிட்டு
நிக்கிறாங்க..

"அண்ணாச்சி இது என்ன அண்ணாச்சி.."
அவன்
பொடதில மண்ணு தெரிக்க‌
ஓடிட்டான்.

========================================================

நாண்முறை தபுத்தீர் வம்மின்"

நாண்முறை தபுத்தீர் வம்மின்"
=========================================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் ...29)



செருக்களம் உறுமும் குமரிப்படைய‌
கொடுவேல் கூற்றம் அறையும் குரல் இது.
பூவிலைப்பெண்டு கூவித்தீர்த்த 
காஞ்சியும் தீர பூவலை இங்கு தீயலையாக‌
அமர்க்களம் யாவும் அலைஎறி கடலாய்
வேல்படை மிடைய குருதிகுளிக்கும்
உடலம் மிதக்க உறுபகை நீர்க்க‌
சென்றவன் பீலி பிலிற்றுக்கண்ணிய‌
வெருவகை தந்த வாகை சூடி 
வரும் என்று விழியினை அப்பிக் கிடந்த‌
முன்றில் நீளும் வரிஅணில் கீறொலி.
கூற்று தழீஇய வரினும் அவன்
பகைத்தடம் நூறி வென்றிபல குவிக்கும்.
ஆயிரம் முறுவல் ஒப்பக்கிளர்ந்து
புல்லென ஒருசிற்றசைவில் அவன்
தலை சாய்த்தும் சாயாது என் ஞாலமே!

================================================
புறநானூற்றுப்பாடல்கள் 293ம் 294ம் இங்கு
எனது இந்த சங்கநடைக்கவிதையில் கருக்கொண்டு
உருக்கொண்டது.
=========================================ருத்ரா

பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை

பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை
======================================ருத்ரா
(ஒலைத்துடிப்புகள் ...28)



பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை மூசி
அறைதவழ் ஓங்கு வெள்ளிய அருவி
படர்தந்தாங்கு சடைமறைத்த ஊழில்
எதிர்த் தடம் ஊன்றிய‌ நினைப்பில் ஊறித்
திளைத்த காலை மறவேன் மறையேன்
என்றவன் திரங்கிய தோளும் துடித்திட‌
உள் எரியாற்றில் கரிந்தும் ஒளிர்ந்தான்.
அவனுக்கும் விரிந்து திறந்தது வானம்
வெள்ளைக்கனவிலும் மின்னல் தைத்தது.
அவள் வாணுதல் இன்னும் பாசடைக் கரைய
தண்பொழில் தருவென வீமழை தூவும்.
அவள் மின்னிய முறுவல் நரை கண்டது இல்.
வேங்கை வரிய வெண்சுரத்தன்ன வெள்ளெனத்
தோன்றும் வெளியிடையும் நீளும் அவள்
விழிப் பூந்தாதின் நீறாடு களத்தில்.

================================================

நரையுண்ட போதும் காதலின் இரையுண்ட‌
தலைவனின் நினவு மழை பற்றிய ஒரு
சங்கநடைக்கவிதை இது.

==================================ருத்ரா

கலித்தது தமிழ்

கலித்தது தமிழ்
=========================================================ருத்ரா

பீடுகெழு நெடுந்திரையன் களிறு படர்ந்தன்ன‌
அலைகடல் ஆர்த்தெழவே அஞ்சுதல் அவன்கண்
அஞ்சுதல் செய்தொழிய கலன்கள் ஆயிரம் கூட்டி
கடுவளி சூர்கொண்டு விரிநீர் சுருட்டல் க‌ண்டும்
நிமிர் அகலம் நேர்கொண்ட அவன் பாங்கு உற்று
கனைகுரல் எல்லனும் திங்களாய் எதிர் தந்தனனே.
திரையம் அகல்நாட்டின் நுரைப்பூக்கள் கரை மடுப்ப
கல் என்று திறவோன் விறல் காட்சி கொளீஇய‌
மண்ணிய மலர்தலை உலகெலாம் கொண்டான்.
எற்றுக்கு ஒரு சொல் ஈண்டு நீ ஈன்றாய்
சென்றவன் மீட்டு துப்பின் மிகு தருவானோ
அன்றி கடல் உண்ணக்கொடுத் தாங்கே
மறைவானோ.மருளும் மருளும் மாயும் என் நெஞ்சு என.
கடல் சாரும் நாடெல்லாம் அவன் கொடியே
நுடங்கி நிற்கும்.மண்ணெல்லாம் அவன் பண்டம்
விலை நாட்டி அவன் வெற்றி நீடு பகரும்.
அலை கடந்து அவன் கொண்ட மொழியாவுமே
தமிழ் ஆகும் ஈண்டு தமிழே ஆகும்.
ஒலிக்கலம்பகம் முறைசெய்து மறையாகும்மே
மறைமொழியும் நிகழ்மொழியும் நிரல் ஆகும்மே
இவண் இங்கு கோலோச்சி மொழி மலர்த்தி
நிறைமொழியாய் மாந்தரிடை நம் தமிழே
எங்கும் அது நிழல் தோய இறை கொள்ளுமே.
திரை நாடு நம் நாடு என்பரே போன்ம்
இத்திரையிடமே திராவிடமாய் உலகாளுமே.
நம்மிடையே இஃது எதிர்கொள்ளா தமிழர்களே
"ஆர்"த்தெழு "ஆரி"யராய் இனம் வகுத்து கிளைத்தனரே.
ஆர்கலி அருந்தமிழே ஆரியருள் உள்ளோலிக்கும்.
தமிழின் ஒலிஆறு ஐது ஆங்கு பல்கிளவி இமிழ்க்கும்
வகை அறிவார் மாட்டே தமிழ் வாழும் தமிழ் ஆளும்
என வாங்கு
நீர்வேலி இட்ட தொரு நெடு மண்டிலம்
இமையாதே விழித்துயரும் மலை மண்டிலம்
எல்லாம் அமைந்தொரு பால் உயர்நாடாய்
உய்விக்க கடல் கடந்தான் உணர்மதி திருந்திழாய்.
மொழிந்தவாறு கேட்டவாறு முறுவல் செய்தாள்
உடன் நின்று சொல் அவிழ்த்து அணைந்த தோழி!
கலித்தது தமிழ் என்று களித்தொகை ஆற்றுப்படை
யாத்ததுபோல் அவர் இறும்பூது உற்றனரே காண்.

===============================================================

வெள்ளி, 15 மே, 2020

"வடுஆழ் எக்கர் மணலினும்.."


"வடுஆழ் எக்கர் மணலினும்.."
______________________________________________ருத்ரா
(ஓலைத்துடிப்புகள்..27)

புள்வரூஉம் புள்திரும்பும் நெடியவான்
பல்லூழி படுத்திருக்கும் அம்ம வாழி.
வான் பிறக்கும் வான் இறக்கும் எல்லே
கதிர்பாய்ந்து கொள்ளைப் படூஉம் நாட்கங்குல்
நூறி சிதர்பட்டு நோல் அமிழும் யான் என்னே.
வாள் நுதலி வாளையன்ன எனை இழுத்து
நின் விழிக்கூர் தைய்இ சிறுதுடி துடிசெத்து
மீளாநின்றேன் என உரையிட்டு கடாஅத்த தென்னே.
வெள்ளாம்பல் திரைதடவும் கடல் முழவு
அலமரல் ஒலிப்பீலி ஓவாது கண் துடைத்ததென்னே.
கோட்டுச்சுறா கொப்பளித்த வியன்பரவை
புண்பட்டு புண்மூடி என்நிலை தடம் காட்டி
வடுஆழ் எக்கர் மணலினும் பலவாய்
என்னை வடு உய்த்து வீழ்த்திய வகை என்னே.
வருவாய் ஒரு நாள் வெடி வேய் வெற்ப
வீ சிதற புள் சிதற புல் அருவி நுரை சிதற‌
என் இறைநெகிழ் வளையும் ஆண்டு நனி சிதறவே.

____________________________________________________________

இது மதுரை மருதன் இளநாகனார்  பாடிய புறநானூற்றுப்பாடலில் (55)
வரும் இறுதி அடியின் "வடுஆழ் எக்கர் மணலினும்.."என்ற வரியின்
அந்த கடற்கரை அழகின் கவின் மிக்க காட்சியில் மனம் பறிகொடுத்து
நான் எழுதிய சங்கநடைக்கவிதை.தலைவியின் துன்பம் இங்கு பாடப்பட்டிருக்கிறது.
பிரிவித்துயரத்தின் நடுவிலும் தலைவன்  மடக்கப்பட்ட மூங்கில் மரம்
திடீரென்று விடுபட்டு ("வெடி வேய்")அருகே உள்ள பூ புள் அருவியின் நுரை
இவற்றைஎல்லாம் சிதறடித்துக்கொண்டு வருவது போல் என் முன் கையில் அணிந்த வளையைக்கூட சிதறடித்துக்கொண்டு வருவான் என நம்பிக்கை கொள்கிறாள்.
"வெடி வேய்" எனும் அந்த ஒப்பற்ற கிளர்வு மிக்க சொல் "வெறி பாடிய‌
காமக்கண்ணியார்"எனும் புலவர் புறநானூற்றுப்பாடல் 302 ல் முதல் அடியெடுத்துப் பாடிய‌  சொல் ஆகும்.
_________________________________________________________________ருத்ரா







வியாழன், 14 மே, 2020

சங்கப்பாடல்கள்

நற்றிணை - 86. பாலை