சனி, 23 நவம்பர், 2019

அரசியல் ஒரு சாக்கடை.


அரசியல் ஒரு சாக்கடை.
=================================================ருத்ரா

அரசியல் ஒரு சாக்கடை.
ஊழல் புழுக்கள் நெளிகின்ற‌
அசிங்கங்களின் ஆரண்யம்.
இப்படி பேசுவதும் ஒரு அரசியல்.
அச்சமூட்டுவது
அருவருக்க வைப்பது
எனும் உத்திகளால்
ஒட்டு மொத்தமாய் உருண்டு திரண்டு
வரும் சமுதாயப்பிழம்பை
நீர்க்க வைத்து
அதில் ஒரு அதிகாரபோதைக்கு
தனியாய் வழி ஏற்படுத்திக்கொள்ளும்
ஏற்பாடே இது.

அரசியல் என்பது
சிந்தனை வெளிச்சம் நிறைந்தது.
இதில்
சாதி சமயம் மற்றும்
மனிதனை மனிதன் சுரண்டும்
பழமை வாத அமைப்புகள்
எல்லாம்
அடிபட்டுப்போகும்
இதில் பளிங்கு ஆறே எண்ண இயக்கத்தில்
ஓடுகிறது.
தனிஉடைமை எனும்
ஊசிமுனையில்
பெரும் சமுதாயம் எனும்
இமயமே நிற்லிறது.
இந்த கூர்முனையில் பெரும்பான்மை மக்கள்
கழுவேற்றப்படுகிறார்கள்.
இரண்டு மூன்று விழுக்காடு மக்கள்
நாட்டின் தொண்ணூற்று ஏழு விழுக்காடு
சொத்துக்களையும்
செல்வாதாரங்களையும்
தன் உடைமை ஆக்கிக்கொண்டு
ஆதிக்கம் செலுத்துவதை
எப்படி முறைப்படுத்துவது?
இந்த கொடுமையான நுட்பம்
மறைக்கப்பட‌
இங்கே எத்தனை எத்தனை புகைமூட்டங்கள்?

தொலைக்காட்சி மற்றும் சினிமாக்கள்..
செய்தி ஊடகங்கள்..
கோவில் திருவிழா கும்பமேளாக்கள்
பக்தி பரவசம் எனும் பொய்மை ரசங்களை
சோம பான சுரா பானமாய்
ஊற்றிக் கொடுத்துக்கொண்டே  இருக்கும்
"சுலோகங்களின் "பீப்பாய்கள் ...
கில்லர் த்ரில்லர்களை வைத்துப்பின்னப்பட்ட
கிரிமினல் கதைகள்...
வர்ண வர்ண கோட்பாடுகள் கொண்ட‌
வகை வகையான கட்சிகள்..
இந்த திசை  திருப்பல்களில்
உலகம் திசையையே இழந்து போனதால்
வறுமையின் கோர நகங்கள்
ரத்தக்கீற்றுகளைக்கொண்டு
இந்த உலகத்தை
ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

ஆப்ரிக்காவில் பல நாடுகளில்
உணவின்றி
எலும்புக்கூடுகளாகவே  பிறந்து
மக்கள்
எலும்புக்கூடுகளாகவே
கல்லறைக்குள் .விழுகின்றார்கள்.

விண்ணை இடிக்கும்
கட்டிடங்களைக்  கொண்ட நாடுகள்
பட்டினியும் பிணியுமாக செத்துவிழும்
மக்கள் பிதுங்கி வழியும் நாடுகளைக்
கண்டு கொள்வதே இல்லை.
மரத்துப்போன மனங்களைக்கொண்டு
கிருஸ்துமஸ் மரங்களை
வண்ணமாக்கி  மகிழ்ந்து கொள்கிறார்கள்.
பிதா மகனும் தேவகுமாரனும்
இன்னொரு புதிய ஏற்பாட்டை
அரங்கேற்றி
நியாயத்தின் ஜீவ அப்பத்தை
எப்போது  பங்கிட்டு கொடுப்பார்கள்?

ஒரு வியர்வைத்துளி என்பது
மனித உயிரின் கோடிக்கணக்கான‌
செல்களின் உயிர்ப்பில்
மழை பொழிவது....
இந்த
"விசும்பின் துளி வீழி ன் அல்லால் "
உலகம் தலை  நிமிர்தல் அரிது.

அந்த மழையின் பயன்களில் எல்லாம்
செழித்துக்கொள்வது
சில குடைக்காளான்களே!
ஆட்சியின் வெண்கொற்றக்குடை
அந்த நாய்க்குடைகளின்
நலம் பேண மட்டும் தானா?
இதைப்பற்றி சிந்திக்க‌
நுண்மாண் நுழைபுலம் வேண்டும் என்கிறார்
வள்ளுவர்.
அது இல்லாத மண்பொம்மைகளால்
எதுவும் விடியப்போவதில்லை.
சிந்தியுங்கள் அன்பான மக்களே!

======================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக