வியாழன், 14 நவம்பர், 2019

அந்த விழியுள் நான்..




அந்த விழியுள் நான்..
==========================================ருத்ரா 


எத்தனை எத்தனை நினைவுகள் 
வேதாளங்களாய் 
என் தோளில்.
வெட்டி வீழ்த்த முடியவில்லை.
அன்று 
நான் தாமிரபரணியில் 
பூ மயிர் மீசை அரும்பிய 
உதடுகளுடன் 
அந்த பளிங்கு நீர் 
சுவைத்து சுவைத்து 
குளித்துக்கொண்டிருந்த போது 
அந்த படித்துறையில் 
அவள் வீசிய விழித்தூண்டில் 
என் நெஞ்சில் செருகியது.
அதன் பின் மின்னலென 
மறைந்தாள்.
முகம் பதியவில்லை.
உருவம் பிடிபடவில்லை.
இன்னும் 
அவளை மீண்டும் 
பார்க்க இயலவில்லை.
அந்த விழி 
என்னை முழுவதுமாய் 
விழுங்கிக்கொண்டது.
எங்கும் எதிலும் 
அது பூதம் காட்டியது.
வயதுகள் 
ரோடு ரோலராய் 
என் நினைவின் ஓரம் 
மொய்த்துக்கிடந்த 
பட்டாம்பூச்சிகளை 
நசுக்கிக்கொண்டு 
ஊர்ந்தது.
வாழ்க்கையின் உப்பு மூட்டை 
சுமந்து சுமந்து 
விளையாடிக்களைத்தேன்.
அந்த விழி மட்டும் 
விடவில்லை என்னை.
அந்த 
விடலையிலிருந்து 
சுடலை வரை 
என்னைப்பற்றிக்கொண்டு 
வானவில்லாய் 
ஏழு வர்ணத் தீயில்
என்னை மூழ்கடித்தது.
அந்த தாமிரபரணி 
பளிங்கு நீர் விழிப்படலத்தில் 
சிதைகள் அடுக்கியது.
என் முற்றுப்புள்ளி 
சாம்பல் கூடு கட்டி 
எங்கோ தொங்கிக்கொண்டிருந்த போதும் 
அதோ 
அந்த விழி 
ராட்சத ரெக்கை கொண்டு 
சட  சடக்கிறது.
இந்த வானப்பிழம்புள் 
அந்த விழியுள்  நான் ....
நட்சத்திரங்களாய் பூத்திருக்கிறேன்.

================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக