ஞாயிறு, 10 நவம்பர், 2019

தீர்ப்பு

தீர்ப்பு
==============================================ருத்ரா


மண்ணில் மனிதன் வந்ததும்
வரலாறு.
மண்ணுள் மனிதன் புழுவாய் மறைவதும்
வரலாறு.
வரலாறுகள் எழுதப்படலாம்.
வரலாறுகள் புனையப்படலாம்.
மனிதன் தன் பிம்பத்தை பார்க்கும்போது
அழகாய் இருக்கிறான்.
அவன்
மொத்த மனிதர்களின் பிம்பம்
எனும் சமுதாயத்தை
உற்று நோக்கும் போது
கோடி ஆண்டுகளுக்கும் முன்
கேட்டிருந்த‌
டைனோசார்களின் உறுமல் ஒலிகள்
எதிரொலிக்கின்றன.
அந்த ராட்சத எலும்புக்கூடுகளில்
மிச்ச சொச்சமாய் கிடக்கும்
காலத்தின் சுவடுகள்
மனிதனின் தோள்களில்
கிடக்கின்றன.
உலகைக் கண்டு முதன் முதல்
வியந்த மனிதன்
முதன் முதல் அச்சம் என்ற‌
உணர்வையும் அடைந்து நின்றான்.
பயத்தோடு அதை கடவுள் என்றவன்
அந்தப் புள்ளியை இன்னும்
கடந்து போக முடியவில்லை அவனால்.
மனிதர்களிலிருந்து
விசையுடன் வெளியேறிய ஆற்றலே
மனிதம்.
இப்போது அவனை இயக்கிக்கொண்டிருப்பது
உயிர் அல்ல.
கடவுள் அல்ல.
மனிதம் என்ற ஆற்றலே தான்.
மனிதம் எனும் அடி நிழல்
அந்த அடி நிழலை அச்சடித்துத் தந்த‌
ஒளியை தேடிக்கொண்டிருக்கிறது.
ஆம்
இன்னும் தேடல் தொடர்கிறது.
இந்த அடர்த்தி மிகுந்த இருட்டுக்குள்
தேடலின் காலடி ஒலிகள்
இன்னும் நமக்குக்
கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.

=============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக