வியாழன், 17 அக்டோபர், 2019

ஒரு நிழற்சோலை




ஒரு நிழற்சோலை
========================================ருத்ரா


இது  கலிஃபோர்னியாவில்

நான் நடை பயிற்சி செய்யும் நிழற்சோலை.

ஓக் மற்றும் மேப்பிள் மரங்களின்

நிழல்கள் தரையில்

மழைத்தண்ணீர் போல் ஒழுகிக்கிடக்கும்

காட்சிகள் அருமை.

பசும்புல்லோடு அந்த நிழல்கள் தரும் முத்தங்கள்

கலையா வண்ணம்

நடப்பதில் ஒரு ஒரு கவனத்தை

பாறாங்கல் போல் தலையில் சுமந்து

நடப்பது போல் இருக்கும்

அந்த மெல்லிய உணர்வு மிகவும் களிப்பு தருவது.

சில சமயங்களில்

அந்த  பருத்த அணில்கள்

திரண்ட அநிச்சப்பூங்கொத்துக்களை

தன் வாலில் ஒரு மென்சாமரமாய் ஆக்கி

அந்த புல்லின் இதழ்களிடையே போய்

கிச்சு கிச்சு மூட் டுவதைப்பார்த்தால்

நான் புல்லரித்துப்போய்விடுவேன்.

இந்த தேசத்தின்

அணிலாடு முன்றில்களில்

கணினிகளின் "பூலியன் அல்ஜீப்ரா"

சருகுகள் தான் இதயத்துடிப்புகளாய்

சிதறிக்கிடக்கின்றன.

இங்கும் அங்கும் அணில் ஓடுவதை

நம் சங்கத்தமிழ்ப்புலவன்

பனை ஓலையில்

அந்த உயிரற்ற எழுத்தாணியைக்கொண்டா

கீறியிருப்பான்?

அவன் இதயத்தோடு

அந்தக் காதலர்களின் பிரிவு த்துன்பத்தையும்

தனிமையின் குதறல்களையும்

அல்லவா

இழைத்து வரிகளை உழுதிருப்பான்.

அந்த பனை ஓலையில் ஒரு மௌன ரத்தம்

கசியாமல் கசிகிறது.

......................

............................

"பீம்..பீம் "...

என் பின்னால் கார் அலறியது.

எப்படி நடு ரோட்டில்  இறங்கினேன்?

எனக்கு வியர்த்தது.

"ஏண்டா..சாவுக்கிராக்கி  வூட்ல சொல்லிக்கிணு வந்திட்டியா?"

அந்த  திடுக்  தருணங்களை

செல்லமாய் நம் மொழி

மொழி பெயர்த்துச்சொன்னது.


=======================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக