ஞாயிறு, 20 அக்டோபர், 2019

"மனத்துக்கண் மாசிலன்..."


"மனத்துக்கண் மாசிலன்..."
======================================ருத்ரா




மனம் என்கிற
குப்பைத்தொட்டியைப்பற்றி
வள்ளுவன்
எவ்வளவு கூர்மையாய்
ஒளி பாய்ச்சியிருக்கிறான்?
நம் வாழ்க்கையின் தெருவோர
கள்ளிகளும் ரோஜாக்களும்
நம் மனக்குகைக்குள் போய்
பொந்து வைத்துக்கொண்டு
சிறகடிப்பது தானே
நம் "சிஸ்டாலிக் டயஸ்டாலிக் மர்மர்கள்"
அதாவது
நம் இதய படபடப்புகள்.
மனத்தை
மூளியாக்கிக்கொள்வதே
நமக்கு வேண்டிய முதல்
இறைவம்.
மூளியில் எந்த உருவம் வரும்?
எந்த உருவமும் வரவேண்டாம்.
எந்த வர்ணம் தெரியும்?
ஒரு வர்ணமும்
சாயத்தை நம் மீது
கொட்டவேண்டாம்.
அப்படியென்றால்
மொத்த சமுதாயமும்
மொக்கையாகி விடவேண்டுமா?
அதற்குள் கிளைகள் பிரிய விட்டால்
கிளை விட்டு கிளை தாவும்
குரங்குகளும் அங்கு வந்து விடும்.
அதற்காக‌
மனத்தை குருடு ஆக்கிக்கொள்
என்று பொருள் அல்லவே!
"மனத்தைக் கண் " ஆக்கிக்கொண்டு
இந்த உலகை
பார் அல்லது நினை.
மனதில் விழியை பதியம் இடு.
விழியை மனதில் படர விடு
இப்போது பிற மனிதர்களில்
உன்னைத்தான் பார்ப்பாய்!
பிறனை நீ பிறாண்டும்போது
அதன் கொடு ந‌கக்கீறல்கள்
உனக்குத்தான் வலியின் கோடுகளை
கீறிக்காட்டும்.
"மனத்துக்கண்" என்பதில்
இலக்கணம்
இடம் எனும் ஏழாம்வேற்றுமையை
சுட்டிய போதிலும்
"வேற்றுமை" எனும் அழுக்கை
மனிதர்களிடையே விதைக்க வேண்டாம்
என்பதற்கு
வள்ளுவன்
மனத்தையே சமநீதியின்
கண் ஆக்கியிருக்கிறான்.
உரைக்குள் உறையும் உள் உரை பார்
என்று
"அனைத்து அறன்" என‌
அறுதியிட்டு எழுதினான்.
உரையாசிரியன் கோடு தான் காட்டுவான்.
மனிதநீதியின் மணி மண்டபத்தை
நாம் தான் அதில்
கட்டிக்கொள்ளவேண்டும்.
கால ஓட்டமே
வள்ளுவனின் உரையாசிரியன்

====================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக