புதன், 30 அக்டோபர், 2019

கோபி(த்த)நயினாரும் சினிமாவும்


கோபி(த்த)நயினாரும் சினிமாவும்
==================================================ருத்ரா

கோபி நயினார் அவர்களே
ஒரு காணொளியில் சினிமா மீது
உங்கள் சீற்றம் கேட்டேன்.
தீக்கு தெரிந்த நியாயம்
சாம்பல் மட்டுமே.
ஆம்.
இந்த அட்டை உலகங்கள்
அசல் உலகத்தின் மீது
நசுக்கிக்கொண்டு
உட்கார்ந்து இருக்கிறது.
சமுதாயம் தீப்பிடித்து எரியும்போது
அதில் சிகரெட் பற்றவைப்பவர்களே
இங்கு ஸ்டார்கள் மற்றும் சூப்பர்ஸ்டார்கள்.
போலித்தனத்தை உரிக்கிறேன்
என்று
சாதி மதங்களை
அறுவாள்கள் கொண்டு சீவினாலும்
ஏதோ நொங்கு சீவுவது போல்
நுரைக்கோட்டை கட்டுகிறார்கள்.
சாதியும் மதமும்
திமிங்கில முதுகாய் முட்டுக்கொடுக்க‌
அதை "லட்சியத்தீவு" போல்
செட்டிங்க் போடுவதே
சினிமாக்களின் சில்லுண்டித்தனம்.
சில நடிகர்கள்.
சில இயக்குனர்கள்.
சில பாடல் ஆசிரியர்கள்.
செவி நரம்புகள் அறுக்கும்
சில இசை அமைப்புகள்
இவற்றின் கூட்டணியே
நவீன சினிமா.
முதல் சில நாட்களில்
கோடிகளை குவிப்பது மட்டுமே
அந்த லட்சியம்.
வீரம் கொப்பளிக்கும்.
ஆயுதம் குண்டுகள் உமிழும்.
வில்லன்கள் நார் நாராய் கிழிபடுவர்.
தியேட்டர் விட்டு வெளியேறும்
ரசிகர்கள்
அந்த பாப்கார்ன் கொறிப்புகளோடு
அமைதி பெறுவர்.
அப்புறம் வழக்கம்போல்
சாதி மதச்சேற்றில் புரண்டு
கோவில் திருவிழாக்களை
வெறியோடு கொண்டாடி
டாஸ்மாக்கின் ஆகாசத்தில் மிதந்து
கிடப்பார்கள்.
தமிழா!
உன் வரலாறு எங்கே என்று கேட்டால்
அதோ அதற்கு பூஜை போடுகிறேன்.
அர்ச்சனை முடியட்டும்
பிரசாதம் வந்து விடும்
என்பான்.
இந்த தமிழர்கள்
இன்னும் இந்த சாக்கடையின்
கீழடியில் தான் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.
"அந்தக்கீழடியின்" தொன்மம் பற்றி
அவர்கள் அக்கறைப்படவில்லை.
அது பாரத நாகரிகத்தின் பாதாளத்துக்குள்
விழுந்துகொண்டிருப்பது பற்றி
எந்தக்கவலையும் இல்லை.
சினிமாக்களின்
குத்துப்பாட்டுகளின் குத்தாட்டங்களின்
கத்தியில்
இவர்கள் கொலையுண்டு கிடக்கிறார்கள்.
விடிவு எங்கே? எப்போது? எவரால்?
இந்தக்கேள்விப்பிரசவத்தில்
கன்னிக்குடம் உடைந்தும்
குவா குவா சத்தங்கள் கேட்கவே இல்லை.
சினிமா இருட்டின் சில்லறை வெளிச்சங்களே
இவர்களுக்கு விடியல்.
இவர்களோடு
இவர்கள் அணிந்த செகுவாரா டீ ஷர்ட்டுகளும்
அல்லவா
சினிமாவினால்
எச்சில் உமிழப்படுகின்றன.
இந்த முரண்கள் அழிக்கும்
முரசுகள் ஒலித்திடல் வேண்டும்!
கோபி நயினாரின் அக்கினி ஆற்றில்
அந்த‌
சனாதன முதலைகள் பொசுங்கிப்போகட்டும்.

======================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக