செவ்வாய், 29 அக்டோபர், 2019

மலர்மிசை ஏகினான்....

மலர்மிசை ஏகினான்....
=========================================ருத்ரா

மலர்மிசை..என்றால்
தாமரையில் அமர்ந்திருக்கும் பிரமனா?
அல்லது
அருகனா?
அல்லது
புத்தனா?
நம் இதயங்களில் நுழைந்தவன்
என்று தான்
வள்ளுவன் உட்பொருள்
பொதிந்து இருக்கிறான்.
மனிதர்களின் சமூகஉறவு
வெறும் வியாபாரமாய் இருந்தால்
பொற்காசுகளோடு
அது முடிந்து நின்றிருக்கும்.
ஒரு மனிதன்
அயல் மனிதனிடம்
அன்பு செலுத்தும் இடத்திலிருந்து தான்
உலகம்
ஒரு அர்த்தத்தோடு சுழல ஆரம்பித்திருக்கிறது.
அந்த மானுட அன்பு தான்
அந்த மனிதனை அல்லது
மனிதர்களை
காலம் கடந்த பின்பும்
ஒரு நாகரிக மலர்ச்சியோடு
தொடர்ந்து நகரச்செய்கிறது.
உரிமை கொண்டாடும் செல்வங்கள்
அவனிடம்
மேலும் மேலும்
அந்த உடைமைப்பற்றை
வளர்த்துக்கொண்டே போகிறது.
அது
அவனாய் தனக்கு வைத்துக்கொண்ட‌
கற்பனையான‌
கடவுளையும் சேர்த்து தான்.
கடவுள் தனக்கு மட்டுமே
"கனக தாரா" பொழியவெண்டும்
என்ற அந்த சிறிய குறுகிய புள்ளி
இறுக்கமாகி விடுகிறது.
அந்த எண்ணம் விதையாகி
ஒரு நச்சு விருட்சமாய்
பரந்து நிற்கிறது.
அந்த குறுகிய எண்ணத்துள்
பரந்த பிரபஞ்சம் எனும் கடவுளை
அவனால் அடைத்துக்கொள்ள முடியவில்லை.
அதனால்
கடவுள் ஒரு சின்னவட்டத்துள்
சிறை பிடிக்கப்பட்டு
மனிதர்களிடையே பகையும் பொறாமையுமாய் ஒரு
தீ
பற்றி எரிகிறது.
பொது மானுடத்தின் அன்புக்காலடியில்
அந்த தனிமனிதவெறி தங்கிக்கொள்ள
அடம்பிடித்து அரிவாள் தூக்குகிறது.
இதில் வரையப்பட்ட எல்லைகள்
போர் என்ற பெயரில்
ரத்தக்கோடுகள் போடுகின்றன.
கணினிகள் எனும்
அறிவின் சிகரம் எட்டியபின்னும்
கொத்து கொத்தாய்
மனிதர்களை கொன்று அழிக்கும்
அணுகுண்டுகளின்
ரகசிய அல்காரிதங்களையும்
ஒளித்து வைத்துக்கொண்டு
"கேம்ஸ்"ஆடுகின்றன.
"மாணடி சேர்ந்தார்"என்பதில் உள்ள‌
அடிகள் என்பது
மனிதனின் காலடிச்சுவடுகள் தான்.
இந்த காலடிகள் தடம் பதித்துக்கொண்டிருந்தாலும்
உலகம் எனும் அகன்ற இடம்
உறுபசி எனும்
ஊழித்தீயில் பொசுங்கிக்கொண்டு தானே
இருக்கிறது.
பெரும்பான்மையான இடங்களில் வறுமையின்
கொடிய கார்ட்டூன் சித்திரங்களாய்
"கபாலங்கள்" குவிந்து கிடக்கின்றன.
சிறுபான்மை வெளிச்சம் மட்டும்
கொழுத்த வண்ணங்களின் நிழலாட்டங்களில்
குத்தாட்டம் போடுகிறது.
மாணடி எனும் அந்த
சமதர்மம் சென்று சேராத வரை
மனிதர்கள்
நிலமிசை நீடு வாழ்வரோ?
வள்ளுவர் வரிகளிலும் கூட‌
"அகழ்வாராய்ச்சி" செய்தால் தான்
மொழியின்
ஒளி முழுமையாய் வீசும்.

=========================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக