ஞாயிறு, 27 அக்டோபர், 2019

யாதும் நன்றே யாதும் தீதே


யாதும் நன்றே யாதும் தீதே
=======================================ருத்ரா


யாதும் நன்றே யாதும் தீதே
பிரித்தறி உணர்வே பேரொளியாகும்.
கருத்து அறியா குப்பைகள் யாவும்
கடுந்தீ நாவுள் இரையெனப்படுமே.
அன்றொரு நாளில் அடர்ந்த சிந்தனையில்
கற்பரல் கொண்டு தீப்பொறி கண்டான்.
பச்சை ஊன் தின்றவன் அதனால்
சுட்டுத்தின்றான் சுவை பலக் கண்டான்.
கல் தந்தது கல்வியின் கண்கள்.
மிரண்டு கிடந்தவன்  இருண்டகாலம்
மிளிர்ந்து ஒளிர்ந்தது பலவாறாய்.
மிருகங்களாய் தம்முள் அடித்துத் தின்றவன்
மின்னல் சிந்தனைக் கீற்றின் வெளிச்சம்
பட்டவன் அதனை பற்றிக்கொண்டான்.
குகைகள் திறந்தன.பகைகள் மறந்தன.
அச்சம் அங்கு அகன்றிடும் வரைக்கும்
ஆயிரம் ஆயிரம் கடவுள்கள்.
மண்ணும் கடவுள் விண்ணும் கடவுள்
புல்லும் கடவுள் புலியும் கடவுள்.
புழுவும் கூட நெளிவது கண்டு
அலறிப் புடைத்து ஓடி ஒளிந்தான்.
"கல்"எனும் சாவி கொண்டு
கற்றான் பெற்றான் ஆயிரம் அறிவு.
மீண்டு வந்து எல்லாம் தெளிந்தான்.
அண்டம் அளந்தான் பண்டம் பிளந்தான்.
நுண்பொருள் துடிப்பின் விசையைக் கண்டான்.
நுழைபுலம் கொண்டு விந்தைகள் செய்தான்.
மனிதர்கள் யாவரும் தொப்பூள் கொடி
ஒன்றிலிருந்தே உறவு வளர்த்தார் என‌
உண்மை தெரிந்தான்.நன்மை தெரிந்தான்.
ஆயினும் மிச்சமாய் இருந்த அச்சமே இன்றும்
மதமாய் வெறியாய் படர்வது கண்டோம்.
மனிதனே!மனிதனே!எழுவாய்!எழுவாய்!
குறுகிய வேலிகள் அழிப்பாய் அழிப்பாய்.
வெளியே இருந்து மிருகங்கள் இல்லை.
உள்ளே இன்னும் அறியாமை
அழுக்குகள் ஆகி அடைந்ததனால்
ஆயிரம் கடவுளின் காடுகளாய்
இருட்டி உன்னை மிரட்டினவே.
கணினி அறிவு கையில் உண்டு.
கனவுகள் மாற்று காலத்தை வெல்லு.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 
பிறள்ந்திடச் செய்யும் மதங்கள் வேண்டாம்.
மீண்டும் பிறப்பாய்.புதிதாய் பிறப்பாய்.
பொதுவாய் சமைக்கும் அமைப்பு ஒன்றின்
புதிய உலகம் நீயே படைப்பாய்!


================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக