வெள்ளி, 25 அக்டோபர், 2019

எல்லோரும் கொண்டாடுவோம்.

எல்லோரும் கொண்டாடுவோம்.
==========================================================ருத்ரா

எல்லோரும் கொண்டாடுவோம்.
கடவுள் அசுரன்
இரண்டுமே இரண்டறக்கலந்ததால்
எல்லோரும் கொண்டாடுவோம்.
மனிதன்
கடவுள் மகன் என்பார்கள்
மத வாதிகள்.
அந்த நரன் கடவுளுக்கு
சமம் ஆகும் நாளும்
வரத்தானே செய்யும்.
மகன் என்பவனும்
தந்தை ஆகும் காலத்தின் புள்ளி
ஒன்று வரத்தானே செய்யும்.
தந்தை எனும் கடவுள் நிலை
அந்த "நரனுக்கு" வரலாமா?
அதாவது
கடவுளை நரன் மீறி நின்று
கேள்விகள் எறியலாமோ?
அவன் கடவுளுக்கு மகன் உருவில்
வந்தாலும்
அதை அனுமதிக்கலாமோ?
சனாதனம்
அதற்கேற்றவாறு
புராணம் சொல்லியது.

பூமியை உழுது பயிரிட்டு
உயிர்களைகாப்பாற்றிய
ஆதி உழவனை "வராகம்"ஆக்கினார்கள்.
அந்த உழவனும் பூமியும்
உறவு கொண்டாடி
உலகம் மலர்ச்சி அடைந்து
அறிவு ஓங்கி
அறியாமை தேயும் போது
கடவுள்கள் மங்கிப்போனார்கள்.
எனவே மனிதர்கள் கடவுளுக்கு
எதிராய் நரகாசுரன்கள் ஆனார்கள்.
கடவுளைக் கேள்வி கேட்ட மனிதன் எனும்
நரன் அசுரன் ஆனான்.
நரகாசுர வதமே
இனி தேசிய புராணம்.
கடவுளைக் கேள்வி கேட்பவன்
அரசனையும் கேள்வி கேட்பவன் ஆகிறான்.
அதனால் இந்த‌
நரகாசுர வதமே
நம் திருவிழா.
நம் தெரு விழா .

கற்றலின் கேட்டல் நன்று என்று
கேள்வியை வேள்வி ஆக்கினான்
வள்ளுவன்.
அறிவையே தீயிட்டுக்கொளுத்தி
பட்டாசு வெடிக்கிறான் பாமரன்.
நாமும்
அதைக்கொண்டாடும் வரை
கொண்டாடுவோம்.
இந்தக் குப்பைகள் எல்லாம் அகலும் வரை
ஒரு பொம்மை விளையாட்டுக்கு
எல்லோரும் கொண்டாடுவோம்.
ஆம்.
எல்லோரும் கொண்டாடுவோம்.

=====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக