செவ்வாய், 15 அக்டோபர், 2019

கீழவெண்மணி

கீழவெண்மணி
==============================================ருத்ரா

இந்த டிசம்பருக்கு
சிலுவைக்குப்பதில்
நெருப்பு விழுதுகளைக் கொண்ட‌
விவிலியம் பிளப்போம்.
எல்லா கைகளும் உழைக்கவேண்டும்.
அதன் பிறகு தான்
வாயும் வயிறும் நினைவுக்கு
வரவேண்டும்.
இந்த வசனத்தை
கர்த்தர் வானத்திலிருந்து கீழே
வீசாமலா இருந்திருப்பார்?
அப்புறம்
ஏன் உழுது உழுது
நைந்த கைகளுக்கு
ஒரு கவளச்சோறு
அன்னியமாகிப்போனது.
பாற்கடலில் படுத்திருந்தவனும் சரி
காடுடைய சுடலைப்பொடி  பூசியவனும் சரி
அவரவர் ஸ்லோகக்கூடுகளில்
சமாதியாகிக்கிடந்தார்கள்.
மனிதம் எனும் பரிணாம மலர்
வர்ணத்தீயில்
பொசுங்கிப்போனது.
யாருக்கும்
வலியில்லை
கவலையில்லை
ஆலயமணிகளின்
அவிந்த நாக்குகளின்
ஒலிப்பிசிறுகளில் எல்லாம்
ஆண்டவர்களின்  சாம்பல்கள்
தூவிப்பறந்தன
அந்த 1968 டிசம்பரின்
ஒரு இரவில்.
விடியலில்
கிழக்கில் சூரியனின்
அழுகிய பிணம்
இருட்டைக் கசிய விட்டது.

====================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக