சனி, 19 அக்டோபர், 2019

வரலாற்றின் வடு.

சீமான் அவர்களே
==========================================================ருத்ரா

கர்ணனை
நான் கொன்றேன்
நான் கொன்றேன்
என்று
அர்ஜுனன்
பிதற்றிக்கொண்டேயிருந்தான்
"செத்த பாம்பை"
அடித்து விட்டா
இப்படி பீற்றிக்கொண்டு இருக்கிறாய்
என்று
கிருஷ்ணன் கேட்டான்.
ராஜிவ் காந்தி அவர்கள்
உள் வெளி நாட்டுச்சதிகளின்
ஓராயிரம் அம்புகள் துளைத்த‌
ஒரு நாட்டின் தலவனாக‌
வீழ்ந்து பட்டது
வரலாற்றின் வடு.
அந்த வடுவைக் கிண்டி கிளறி
மாமிசம் தின்னும்
கழுகாக இருந்து
கர்ஜனை செய்வதால்
யாருடைய‌
சிம்மாசனத்தையோ
அலங்கரிக்கவே
இப்படி ஆரவாரிக்கிறார்
சீமான் அவர்கள்.
லட்சம் தமிழர்கள் இறந்ததற்கு
பழி வாங்குவதாக இப்படி
"பஜனை" செய்வது
இன்னும் பலப்பல‌
லட்சம் தமிழர்களை
எதிரிகளின் காளிகளுக்கு
பலி கொடுப்பதற்காக‌
செய்யும்
சாணக்கியத்தனங்களின்
விஷம் தடவிய
ஈட்டி முனையாக‌
மைக் முன்னால்
நச்சு ஒலிகளை அவர்
பரப்பி வருகிறாரோ
என்று
இந்த தமிழ் மண்
சிந்திக்கத் துவங்கிவிட்டது.
சமூக விழிப்புணர்ச்சியோடு
இயக்கம் கண்ட‌
தமிழ் நாட்டின் வரலாற்றுத்தலைவர்களை
எல்லாம்
அவர் காலில் போட்டு மிதிக்கிறார்.
சூத்திரர்களையெல்லாம்
அடித்து நொறுக்க‌
அந்த குள்ளநரிகள்
ஒரு "சூத்திர க்ஷத்திரியனை"
கையில்
போலி  "உள் இனப்பற்று" எனும்
கோடாலியை கொடுத்து
அனுப்பியிருக்கிறது.
நாலு வர்ணத்தில்
மூன்று வர்ணம் வரை
பூணுல் மாட்டிக்கொண்டிருக்கும்
இந்த சனாதனத்தின்
மர்ம நூல் இழுத்த இழுப்புகளே
இவரின் பொம்மலாட்டம்.
இடைத்தேர்தல் எனும்
தேரின்
வடம்பிடிக்க‌
முரசு கொட்டிக்கொள்ளட்டும்
ஆனால்
அவர் பிடித்துக்கொண்டிருப்பது
வடம் அல்ல.
கண்ணுக்குத்தெரியாமல்
பகைக்கணை எய்யும்
வரலாற்று எதிரிகளின்..
அந்த எதிரிகளுக்கு
அடிமைச்சேவகம் செய்யும் அனுமான்
ஆகிப்போன...
அவர் சொந்த வால் தான் அது.
இந்த புழுதியும் தூசியும்
தமிழ்ச்சூரியன் மீதா
திரை போடும்?
தமிழா!
சூழ்ச்சிகள் உன்னை
விழுங்க முடியாது.
பார்..
லட்சம் ஆண்டுகள் ஆனாலும்
ஆய்ந்த பொழுதெல்லாம்
அகழ்ந்த பொழுதெல்லாம்
உன் தமிழின்
மின்னல் எலும்பு மிச்சங்களே
இந்த வரலாற்று வானத்தை
சிலிர்க்கவைக்கும்.
கல் தோண்டிப்பார்
மண் தோண்டிப்பார்
எல்லாவற்றையும் தாண்டி
நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
அங்கு
வேர் பிடித்து நிற்கும்.
சீமான் அவர்களே
தமிழ் வரலாற்றின் சக்கரமாக‌
சுழல வந்திருக்கிறேன்
என்று
அந்த சிவகாசிப்பட்டாசின்
"விஷ்ணு சக்கர"மாக
வந்து விஷமத்தனம் செய்யும்
விளையாட்டு உங்களுக்கு
பொருத்தமானது அல்ல.
சிலம்புப்பரல்களின் உள்ளே
ஒலித்த தமிழை ஒலித்த‌
அந்த சிலம்புச்செல்வனின்
தோள்மீது ஏறிநின்று கொண்டு
தமிழ்ப்பகைக்கு
"போஸ்டர் ஒட்டும்" இந்த
அவலம் தான்
அவலங்களுக்கெல்லாம் அவலமாய்
நம்மை துன்புறச்செய்கிறது.

உங்கள் ஒலி பெருக்கி தமிழனின்
"வலி பெருக்கியாக"
உரு மாறி வருவதை
நீங்கள் உற்றுக்கவனிக்க வேண்டும் என்று
அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்க தமிழ்!
வெல்க தமிழ்!

========================================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக