சனி, 19 அக்டோபர், 2019

ஒரு பாற்கடல்


ஒரு பாற்கடல்
=========================================ருத்ரா

மேருமலை மத்து.
வாசுகிப்பாம்பு கயிறு.
தேவர்களும் அசுரர்களும்  கடைந்தார்கள்.
பாம்பின் சீறும் வாயையும்
எதிர் கொண்டு
பலமாகக்கடைந்தது
அசுரர்களே.
தேவர்கள் பாம்பின்
வாலைப்பிடித்து
வருடிக்கொண்டிருந்தார்கள்.

பாற்கடலில் உருண்டு திரண்டு
ஆத்திகம் என்ற நஞ்சும்
நாத்திகம் என்ற அமுதும்
வந்தன.
சிவன் நினைத்தான்.
"போதும் போதும்
இவர்கள் புராணம் எழுதி
என்னைப்புரட்டி போட்டது போதும்.
நான் சூடிய
சந்திரன் எனும் சந்திரிகையையும்
கங்கை ஆறு எனும் கங்காதேவியையும்
போட்டியான பெண்டாட்டிகள் ஆக்கி
என் குடும்பத்தையே
கெடுத்து விட்டார்கள்."
சிவன் ஆத்திக விஷத்தைக்
குடித்து விட்டான்.
தொண்டை கருப்பாகி
நீலகண்டன் ஆகிவிட்டான்.
மிஞ்சியது
நாத்திகம் எனும் அமுதம்.
அது அந்த கலசத்தில்
அப்படியே இருந்தது.
அதற்கு போட்டி இல்லை
சண்டைகள் இல்லை.
மோகினி அவதாரங்களும் இல்லை.
அறியாமை என்ற நஞ்சு
அமுதம் என்று
பரவி விடக்கூடாது
என்றும்
அப்படி ஏமாறும் பக்தர்கள்
தனக்கு தேவையில்லை
என்றும்
தியாகம் செய்து
கோவில்களுக்குள்
அவன் அமர்ந்து கொண்டாலும்
அவர்கள் விடுவதாயில்லை சிவனை.
பிரதோஷம் என்று
அந்த நஞ்சையே
சுற்றி சுற்றி வருகிறார்கள்.
வெளியே
அறிவு அமுதம் சிந்தி சிதறிக்கிடக்கிறது.

======================================================
(ஒரு கற்பனை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக