புதன், 16 அக்டோபர், 2019

வெண்கொற்றக்குடை









வெண்கொற்றக்குடை
================================================ருத்ரா 



என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய்?
ஓ !என் அருமை முற்றுப்புள்ளியே !
வா,,
என் அருகில் வந்து எச்சமிடு.
உன் ராட்சத ரெக்கைகளை
ஏன் படபடத்துக்கொண்டிருக்கிறாய்?

என் கனவுகள் கீழே புதைந்து கொண்டிருக்கின்றன.
கீழடியின் நான்காவது ஐந்தாவது
அடுக்குகளாய்....
தமிழ் எனும் சூரியனின் விளிம்பு
அதன் எலும்புக்கூட்டு மிச்சங்களை
என்றைக்கு காட்டும்
என்று தான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

இருளில் தடவிக்கொண்டிருக்கும்
தமிழனை
மேலும் இருளில் தள்ளும்
இந்த மந்திரங்களும் சுலோகங்களும்
ஒரு நாள் புதைக்கப்படும்போது தான்
அவன்
விழி  காட்டுவான்.
ஒளிகாட்டுவான்.

தமிழுக்கு முற்றுப்புள்ளி இல்லை.

"நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாள் அது".....

என்று உணர்ந்து தான்
தமிழ் எனும்
இந்த வெண்கொற்றக்குடையை
பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
இறப்பு எனும் முற்றுப்புள்ளி
என் மீது
மழை பொழிய வந்த போதும்
நிழல் தருவது
அந்தக் கணியன் பூங்குன்றன் தமிழ் தான்.


யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)


-----------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக