செவ்வாய், 1 அக்டோபர், 2019

எல்லாம் இங்கு தமிழ்


எல்லாம் இங்கு தமிழ்
============================================ருத்ரா

வெண்ணெய் திரளும்போது
தாழி உடையும் கதையாய்
தமிழ் ஒற்றுமை
ஓங்கும் போது
திராவிடம் ஏதோ
அயல் சொல் என்று
புரளி கிளப்பும்
சூழ்ச்சியின் ஒரு சூறாவளி
கருமையம் கொள்ளுமாறு
சில அரசியல் பேச்சுகள்
உலா வருவது
தமிழனின் புறநானூற்று வாளை
தமிழனின் தலையிலேயே
கூர் தீட்டிப்பார்க்கும்
செயல் அன்றி வேறல்ல.
நீர் என்று பொருள்படும்
திரவம் என்ற சமக்கிருதப்பெயர்
திரை எனும் பொருள் தரும்
தூய தமிழ்ச்சொல் தான்.
திரைவியத்தமிழன் திரைகடல் ஓடி
திரைவியம் கொண்டு வந்தான்.
அவனே "திரைவிடன்"எனும்
திராவிடன் ஆனான்.

உலகம் எல்லாம் சென்று
தமிழின் புகழ் வளர்த்தான்.
"தரவத் பாணி" என்று ஒரு சொற்றொடர்
ரிக் வேதத்தில் வருகிறது.
"த்ரவத் பாணி" அதாவது
கடல் அலைகளைப் போல‌
விரைவாக பாய்ந்தோடுபவன்.
அவர்களை எப்படியாவது
அழித்துவிடு இந்திரா
என்று ரிக் வேதம் ஒப்பாரி
இடுகிறது அதன் பாடல்களில்.
அந்த திரைவிடன் தான்
சிந்துவெளித்தமிழனாய்
உண்மையிலேயே
தமிழன் உலகின் எல்லா ஒலிப்புகளையும்
உருட்டி திரட்டி
ஒரு மொழிவடிவம் தந்து
வரி வடிவம் தந்தான்.
அதுவே "சமக்கிருதம்"
தமிழுக்கு ஒத்து (சமம்) செய்யப்பட்டு
சமைக்கப்பட்டது.
கரம் எனும் சொல் கூட தமிழ் தான்.
கரத்தால் எழுத்தாணி கொண்டு
ஓலையில் எழுதப்படுவது காரிகை எனப்படும்
நாம் காரியம் என்று சொல்லுவதும்
கரத்திலிருந்து வந்தது தான்.
கரம் கிருதமாய் இங்கு மாறி
சமக்கிருதம் ஆனது.
சம +கிருதம் என்பதில்
இடைச்சொல் (சந்தி) அங்கு
"ஸ்"ஆகும்.
சரி.அந்தக்கதைகள் இருக்கட்டும்.
உலக ஒலிப்புகளை திரட்டி
மொழியாக்கிய‌
தமிழனின் அந்த சமக்கிருக்கிருதமும்
அவன் பங்காளி மொழிதான்.
இந்தியாவின் எல்லாமொழிகளும்
தமிழனின் பங்காளி மொழிகள் தான்.
உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பது தான்
திராவிட மொழிகளான‌
தெலுங்கு கன்னடம் மலையாளம்
மற்றும் அதனோடு சேர்ந்த மொழிகளிடம்
பகைமை கொள்வது.
அந்த மொழிகளில் சமக்கிருதம்
மிக மிக அதிகமாக இருப்பதால் தான்
அவை தமிழை வெறுக்கின்றன.
தமிழன் மீது
எப்போதும் அவன்
"வளர்த்த கடாக்கள் தான்"
மார்பில் பாய்கின்றன.
இந்த வரலாற்றுக்காயங்களையும்
விழுப்புண்களாக ஏந்தி
வலம் வருபவனே தமிழன்.
எப்படி தன் காயங்களை
தானே நக்கிக்கொண்டு
சிங்கம் சிலிர்த்துக்கொண்டு எழுகிறதோ
அப்படியே
தமிழ்ச்சிங்கங்கள்
திராவிட உறுமலுடன்
வீறிட்டு எழவேண்டும்.
சூழ்ச்சி வலைகள் யாவும்
அழித்தொழிக்கப்பட்டு
நம் வரலாற்றுச்சிறப்பும் தொன்மையும்
ஓங்கி உலகளந்து
சுடர்ந்து ஒளி வீசவேண்டும்.

================================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக