சனி, 16 பிப்ரவரி, 2019

இன்னொரு அம்மாவாக!

இன்னொரு அம்மாவாக!
=================================ருத்ரா இ.பரமசிவன்

"என்னடா...
பொல்லாத‌ வாழ்க்கை?"

இது ஏதோ
ஒரு சினிமாப் பாட்டு இல்லை.
இருட்டின் புழுக்கூட்டிலிருந்து
மின்னல் ஒழுக‌
பிய்த்து வந்தோம்.
இந்த உலகமே
சுகமான துணிவிரிப்பு தான்.
அன்னையின் கன்னிக்குடம் உடைத்து
அந்த அன்புப்பிழம்பில்
அவளுக்கு ஒரு
மறக்க முடியாத வலியை அல்லவா
கொடுத்துவிட்டு வந்தோம்?
அந்த வலியைப்பற்றி
அம்மாவிடம் கேட்டேன்.
"போடா! கிறுக்கா!
வலியா?
அமுத சாளரம்!
அதன் வழியே
என்னென்ன விஸ்வரூபம் எல்லாம்
பார்க்கிறேன் தெரியுமா?
உன் பச்சை நரம்புகளில்
நான் உயிர் பாய்ச்சிக்கொண்டிருப்பேனே
முலைப்பாலாய்
அப்போதும்
அந்த "ஆகாயகங்கையின்"
பால் வெளியில் தான் மிதக்கிறேன்.
"காஸ்மோனாட்டுகள்" கூட‌
கண்ணாடிக்குமிழிகளில் இருந்து
புன்சிரிப்பை வீசுவதை
உணர்கின்றேனே!
செல்லமே!
உன் உதடுகள் கவ்விய உயிர்ப்பின்
பூவாசத்தில்
எந்த பிருந்தாவனங்களும்
வெறும் தூசிமேடுகளே!
ஓ!அம்மா எப்படி இப்படி
சாஹித்ய அகாடெமிக்காரர்காரர்களுக்கே
தண்ணி காட்டும்
இலக்கியம் அல்லவா
உன் தாய்மை!
அம்மா
இப்போது
எந்த சன்னல் வழியாய் என்னை
எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாய்?

"போதும் சோஃபாவிலேயே தூக்கமா?"
மணி பன்னிரெண்டு!"
மனைவி எழுப்பி தூங்கவைத்தாள்
இன்னொரு அம்மாவாக!

================================================
08.02.2016







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக