சனி, 9 பிப்ரவரி, 2019

விளிம்பு

விளிம்பு
====================================ருத்ரா இ பரமசிவன்.

வாழ்க்கையின் விளிம்பில்
நின்று கொண்டு
வாழ்க்கை என்ற சொல்லை
எழுத்துக்கூட்டி வாசித்து
பொருள் தேடி நுழைகின்றேன்.
பொருள் தேடி ஓடி
பொருள் குவித்த பின்னும்
இதன்
பொருள் இன்னும் விளங்கவில்லை.
ஆணில் ஆடு இலை ஈட்டி
என்று
முதலில் இருந்து அந்த‌
ஒலியின் "ஈட்டியை"
ஒரு அரிச்சுவடி ஆட்டத்தில்
எறிந்து தேடுகிறேன்
வாழ்க்கை எனும் சொல்லுக்கு
பொருளை.
எத்தனை கவலைகளை
அடை காத்திருப்பேன்?
எத்தனை கண்ணீர்த்
துளும்பல்களைக் கொண்டு
என் குடும்பத்தின்
அணையை கட்டியிருப்பேன்?
என் குழந்தைகள்
இன்பப்பூங்காவாய் இருந்தார்கள்.
ஒரு நாள்
பருவம் எனும்
மத்தாப்புக்காடுகளின்
வெளிச்சத்துக்குள் அடைந்து கொண்டார்கள்.
எங்களின்
வெளிச்ச வாசல்களை
இழுத்துப்பூட்டு போட்டு விட்டு
போய்விட்டார்கள்.
அவர்கள் வானம் வேறு.
அவர்கள் சமைத்துச்சாப்பிடும்
நட்சத்திரங்கள்
எங்கள் பசியாற்ற வில்லை.
என் அன்பிற்குரிய துணையோ
தீரா நோயின்
ஓர் நதிக்கரையில்.
ஆனாலும்
என் தினசரி விடியலின்
கத கதப்பும் வெப்பமும் ஒளியும்
அவள் அன்பின் அடி ஆழத்திலிருந்து
என் எலும்பு மஜ்ஜைக்குள்ளும்
என் எண்ணச்சதை நரம்புக்குள்ளும்
இன்னும்
அமுதம் பாய்ச்சிக்கொண்டிருக்கிறது.
அவளுக்குள் நான்.
எனக்குள் அவள்.
ஆனால் எங்கள் குஞ்சுகள்
சில பிஞ்சு இறக்கைகளை
இந்த கூட்டில் மிச்சமாய் உதிர்த்துவிட்டு
சிறகு முளைத்து
சீர் சிறப்பு எனும் சிகரங்கள்
ஏறிவிட்டன.
அவை
பிரிவு எனும்
ஒரு காட்டாற்றின்
ராட்சச இரைச்சல்களை
காது மடல்களில் தூவி விட்டு
ஓடிக்கொண்டே இருக்கின்றன.
பன்னிரெண்டாயிரம் மைல்கள்
தூரம் என்று
ஒரு தந்தக்கோபுரம் ஏறி
அமர்ந்து கொண்டார்கள்.
ஃபோன்கள் வழியே
அந்த குஞ்சுகளின்
அந்த குஞ்சுகளின் குஞ்சுகளின்
தேன்குரல்கள் சிதறும்.
அப்புறமும்
ஏதோ ஒரு வெறுமையின்
புகை கமழ்ந்துகொண்டே இருக்கும்.
அந்த கட்டங்களை
கடந்து கடந்து நாங்கள்
விளையாடிக்கொண்டிருக்கிறோம்
தாயக்கட்டைகளை
தரையில் உருட்டிய வண்ணம்.

============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக