செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

சம்பவாமி யுகே யுகே

சம்பவாமி யுகே யுகே
====================================ருத்ரா

"அதர்மம் தோன்றும் போதெல்லாம்
அதை அழிக்கும்
தர்மமாக நான் அவதரிப்பேன்."

இப்போது மொடிஜியின் கையில்
சங்கும் சக்கரமும் தான்.
கீதை நாயகனாய் தன்னை
இந்த மக்களிடையே
அரிதாரம் பூசாத குறையாய்
அவதாரம் காட்டி நிற்கிறார்.

கிருஷ்ணன் நினைத்தால்
முதலில் அதர்மத்தை வர விடாமல்
தடுத்திருக்கலாம்.
அப்புறம் அதை அழிப்பது தான்
தர்மம் என்று
இப்படி
"சம்பவித்துக்கொண்டே இருக்கவேண்டுமா?"
குருட்சேத்திரத்தில்
ரத்த ஆறு ஓடவைத்து தான்
கீதையை எழுதவேண்டியிருக்கிறது.

அது என்ன லாஜிக் என்று புரியவில்லை.
அதர்மமாய் வருவது மட்டும் மனிதர்களாம்
தர்மமாய் அவதரிப்பது மட்டும் பகவானாம்.
மேலும்
அந்த தர்ம பகவான் (கிருஷ்ணன்)
சில அதர்ம வியூகங்களை வைக்கும் போது
அதர்மமும் அதர்மமும் தானே
அந்த குருட்சேத்திரத்தை
ரத்தச்சேறு ஆக்குகிறது.
அப்படியெல்லாம் கேட்கக்கூடாது
அது அப்படித்தான்.
அந்த பாஞ்ச ஜன்யத்தில்
எல்லாம் அமுக்கப்பட்டு விடுகிறது.


கடவுளும் சைத்தானும்
ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
என்பது
தத்துவங்களின் தத்துவமாய் இருக்கும்
"பிரம்மச்சாரம்."
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
இப்படித்தான்
ஒன்றின் கண்களை மற்றொன்று
பொத்திக்கொண்டு
கண்ணாமூச்சி ஆடுகின்றன.
அவர்கள் கிருஷ்ணன் கீதை என்று
நூல் விட்டதால் தான்
அதே வழியில் நாமும் நூல் விடுகிறோம்.

ஆனால் போர் போல புகையெழுப்பப்படும்
இந்த மூட்டத்தில்
இவர்களின் யாகப்புகை தான்
அதிகம் தெரிகிறது.

அந்த புல்வாமா நிகழ்வு
எப்படி கோட்டை விடப்பட்டது?
என்பது நமது ரூபாயில்
பில்லியன் ரூபாய் கேள்வி.


புல்வாமா குருட்சேத்திரத்தில்
அந்த ஆர்டிஎக்ஸ் ரதத்தை ஓடவிடாமல்
தடுத்திருந்தால்
விலைமதிக்கமுடியாத‌
ராணுவ வீரர்களை காப்பாற்றியிருக்கலாமே.
எல்லைக்கோட்டை ஒட்டிய‌
அந்த தீவிர வாத முகாம்களையும்
முன்னூறு தீவிரவாதிகளையும்
அழித்து
நாம் "தர்மத்தை" நிலை நாட்டியது
நம்மை தலை நிமிர வைத்துவிட்டது.
நம் விமானிகள் மானிகள் தான்.
நம் மானத்தை காப்பாற்றி விட்டார்களே.

அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள்.

ஆனால்
கிருஷ்ணன் "சம்பவாமி யுகே யுகே"
என்று சொல்கிறானே.
அதென்ன யுகே யுகே?
அதாவது ஒவ்வொரு தேர்தலுக்கும்
என்று அர்த்தமா?
இதை எழுதிய அமித்ஷா எனும்
வியாசரிடம் தான் கேட்கவேண்டும்.

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக