செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

சிரிப்போ சிரிப்பு

சிரிப்போ சிரிப்பு
====================================================ருத்ரா

என்ன எகத்தாளமான சிரிப்பு?
அப்படி என்ன செய்து விட்டேன்?
ஒரு எட்டு கோணலாய்
வளைத்து ஒடித்துப்பார்த்தால்
என் முகம் எப்படியிருக்கும்
என்று தானே பார்த்தேன்.
கண்ணாடி பிம்பம்
குலுங்கி குலுங்கி சிரித்தது.
அந்த பிம்பமே வளைந்து நெளிந்து
சுருண்டு மடங்கி
சிரி சிரி என்று சிரித்தது.
அதன் சிரிப்பொலி
யாருக்கும் கேட்க வில்லை.
அப்புறம் அது
தன் நிலைக்கு திரும்பிவிட்டது.
அதன் முணு முணுப்பு ஒலி
எனக்கு கேட்டது.
"நீ அப்படிக்கஷ்டப்பட்டிருக்கவேண்டாம்
இயல்பாக நீ பார்த்தாலே
உன் எட்டு கோணல்கள்
அந்த பிம்பத்தில் தெரியுமே"
என்றது.
எனக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது.
என் கையால் அந்த கண்ணாடியை
ஓங்கி ஒரு குத்து விட்டேன்.
கண்ணாடி தூள் தூள்.
என் பிம்பமும் தான்.
அப்புறம் அந்த சில்லுகள்
சிரித்து சிரித்துக் குதித்தன.
"உன் அகத்தின் கோணல்
உனக்கு இன்னுமா தெரியவில்லை.
இப்போதாவது தெரிந்திருக்குமே"
விலா நோக சிரித்தன.
அதற்கு விலா இருக்கிறதா?
இல்லையா?
என் கைமுட்டியில்
ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.

===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக