ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

"பேரன்பு"

"பேரன்பு"
========================================ருத்ரா

மம்முட்டி ஒரு
மாபெரும் நடிகர்.
அந்த மாபெரும் நடிகர்
எனும் நிழலே விழாமல்
ஒரு பாத்திரம் தாங்கி இருக்கிறார்
அந்த மாபெரும் நடிகர்!

அது
மனதளவில்
தூள் தூளாக நொறுங்கிக்
கிடந்த போதும்
ஒரு தந்தையாய்
மூளை வளர்ச்சியற்ற‌
ஆனால் பருவப்பூரிப்பு கொஞ்சமும்
குறையாமல்
முடங்கிய கை கால் உறுப்புகளைக்கொண்டு
பொம்மலாட்டம் போல்
வாழ்க்கையின் சிதைந்த சித்திரத்தை
தன் முன் காட்டும்
தன் மகளின்
உயிருக்குள்
உணர்வுக்குள்
கண்ணீரின் அர்த்தம் தெரியாமல்
அரும்பும்
கண்ணீரின் நெருப்பு விழுதுகளையும்
பற்றிக்கொள்ள இயலாமல்
பற்றிக்கொண்டு
தொற்றிக்கொண்டு இருக்கும்
பாத்திரம் அது.

அதை நடிப்பு என்று சொல்வது
கடைந்தெடுத்த பொய்.
ஒரு கடல் முழுவதும்
ஒரு கண்ணீர்த்துளிக்குள்
துளிர்த்து நிற்பதாய்
அவர் முகத்தில் இருந்து நேராய்
நம் இதயங்களில் ஈரம் பாய்ச்சிய
உண்மை அது.

அந்த மகளின்  பூப்பு
அவர்
உடம்பெங்கும்
தீ மழையைத்தூவும் துயரத்தின்
ஒரு எரிமலைமலைப்பூ!

அது சிதறும் துன்ப மகரந்தங்கள்
துளி துளியாய்
அந்த தந்தையை
செதில் செதிலாய் ஆக்கியது கண்டு
நம் நெஞ்சு பதறுகிறது.
தந்தை
தாயுமானவன் ஆகிய
ஒரு அற்புத பரிணாமம்
அவர் அடைந்த அந்த பதற்றம்.

அந்த "மூன்று நாட்கள்"
என்று  உலக்கை கோடு போட்டு
பெண்ணை
ஒரு அசோகவனத்துள்
அமிழ்த்தி அப்புறம்
தீக்குளிக்கசெய்வது தானே
நம் சம்பிரதாயங்கள்.
அந்த பிஞ்சு மகளிடம்
அந்த தீட்டை கூட
தாய்மை எனும் தூரிகையை
வைத்து துடைக்கும்
ஒரு அவலம் மிக்க தந்தையாய்
மம்முட்டி உயர்ந்து நிற்பது
மாபெரும் ஒரு  சிகரம் அல்லவா!

மகள் கண்ணிறைந்த
ஒரு மணப்பெண்ணாய்
காட்சி தரும் கனவு
அந்த தந்தைக்கு
ஒரு முள்ளின் காடாய்
கந்தலாக்கும் அந்த வலிகள்
நம் உள்ளங்களை பிசைந்து
ஒரு துன்பியல் சாற்றை
பிழிந்து  பொழிந்து விட்டது.

அந்த மகள்  "பாப்பா" சாதனா வின்
அசைவுகளும்  எலும்பு மூட்டுகளும்
அபிநயம் செய்தது
மூளைச் சிதைவு எனும் நோயை
மட்டும் அல்ல
வலி இன்னது தான் என்று கூட
வலிக்கத்தெரியாத
ஒரு அபூர்வ ராகத்தை
மீட்டும் ஒரு யாழ் உடம்பின்
நரம்புக்கூட்டமும் தான்!
ஒரு சிறந்த நடிப்பின்
இலக்கியமும் இலக்கணமும்
அந்த பாப்பாவிடம்
ஒரு பல்கலைக்கழகம் போல்
அப்பிக்கிடந்தது.
இது
படமும் அல்ல.
காவியமும் அல்ல.
அந்த சலனப்படம்
சமுதாய ஊனங்களை
உருவகமாய்க்காட்டும்
காக்காய் முள் குத்திய
வலிகளின்
பிக்காஸோ ஓவியம்.

====================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக