புதன், 6 பிப்ரவரி, 2019

பெப்ர‌வரி பதினாலு (1)

பெப்ர‌வரி பதினாலு (1)
=============================================ருத்ரா


அவளுக்கு அவன்.
அவனுக்கு அவள்.
இடையில் கைபேசிகள்
கசங்கிப்போகின்றன.
அர்த்தம் இழந்த சொற்கள்.
சொற்கள் இல்லாத ஒலிகள்.
ஒலிகள் இல்லாத மௌனங்கள்.
வீடியோக்களின் பிருந்தாவனங்களில்
ஒளியும் ஒலியும் தான்.
ஒலியில் ஒளியும் ஒளியும்
ஒளியில் ஒளியும் ஒலியும்
சரியான விகிதத்தில்
காதலின் "காக் டெயிலை"
கலந்து தருகின்றன.
காதலிப்பதற்காக மட்டுமே காதலா?
காதலின் மறுபக்கம்
ஒரு கனத்த வாழ்க்கை காத்திருக்கிறது
காக்காய் முட்களுடன்.
வரும்போது வரட்டும்!
இந்தப் பக்கத்து
மயில் பீலிகளுடன்
வருடிக்கொண்டே இருப்போம்
வாருங்கள்.
வெறும் "டைம் பாஸ்" என்று
மெரீனாவின் மணலை அளையும்போது
எதிர்பாராமல்
அங்கே டைம் பாம் கள்
சிதறு தேங்காய் உடைத்துவிடலாம்
உங்கள் வாழ்க்கையை!
உங்கள் ஹேண்ட் பேக்கில்
வட்டமாய் சிறிய தொரு
முகம் பார்க்கும் கண்ணாடி
வைத்திருப்பீர்களே!
அதை அடிக்கடி எடுத்துப்பாருங்கள்.
அங்கே தெரிவது முகம் அல்ல.
அடுத்து அடுத்து வரப்போகும்
வாழ்க்கையின் விநாடிகள்.
அதை மட்டும்
உறுதியாகப் பிடித்துக்கொண்டு
உங்கள் காதலின்
பலூன் சவாரிகளை தொடருங்கள்.
மேலே
மூளி வானத்தின் ஸ்பரிசத்தில்
உங்கள் இதயங்களின் ஸ்பரிசங்கள்
மின்னல் பூக்களின்
ஒரு பூச்செண்டை நீட்டி
வாழ்த்தட்டும்.
வாழ்க! வாழ்க!!
காதல் நீடூழி வாழ்க!


  1. =================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக