சனி, 9 பிப்ரவரி, 2019

மராமரங்கள்


SDC12305.JPG


மராமரங்கள்


===================================ருத்ரா இ.பரமசிவன்


மறைந்து கொள்ளத்தானே வேண்டும்

உனக்கு.

இதையே மராமரங்களாக்கிக்கொள்.


தெய்வம்

காதல்

சத்தியம்

தர்மம்

அதர்மம்

ஜனநாயம்

ஆத்மீகம்

நாத்திகம்

சாதி மதங்கள்.


எப்படி வேண்டுமானாலும்

பெயர் சூட்டிக்கொள் மனிதனே!

இவற்றிலிருந்து

கள்ளிப்பால் சொட்டுவது போல்

ரத்தம் கொட்டுகிறது

தினமும் உன் சொற்களில்.

மன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய்

கண்ணாடி பார்த்துக்கொள்கிறாய்.

உன் பிம்பங்களுக்கு

நீயே மத்தாப்பு கொளுத்திக்கொள்கிறாய்.

மனிதனுக்கு மனிதன்

உறவாடுவதாய் நடத்தும்

உன் நாடகத்தில்

அன்பு எனும்

இதயங்கள் உரசிக்கொள்வதில்

உனக்கு பொறி தட்டுவதல்லையே

ஏன்?


உன் வீட்டுக்குப்பையை

இரவோடு இரவாக‌

அடுத்த வீட்டு வாசலில் கொட்டுகிறாய்.

மறுநாள் காலையில்

உன் வீட்டுவாசலில்

சூப்பி விட்டு எறிந்த மாங்கொட்டைகளும்

மீன் எலும்பு மிச்சங்களும்

மற்றும் மற்றும்

உன் கால் இடறுகிறது.

மாம்பழம் நீ சாப்பிடவில்லை.

மீன் சாப்பிடவில்லை.

எப்படி இது?

உன்னைப்போல்

அடுத்த வீட்டுக்காரன்

விட்ட அம்புகள் இவை.

உன் நிழலில் உனக்கே அச்சம் கவிகிறது.

அதனால்

உன் வீட்டுத்திண்ணைக்கு

இந்த கனமான இரும்புக்கிராதிகள்.

என் நிழலைக்கூட இன்னோருவன்

எச்சில் படுத்தல் ஆகுமா?

என்று

தனிமை வட்டம் ஒன்றை

உன் கழுத்தை இறுக்கும்

கயிற்றுச்சுருக்காய் வைத்துக்கொண்டிருக்கிறாய்.


பார்

இந்த மரங்களை.

பட்டாம்பூச்சிகள் கூட

இங்கே வந்து

படுக்கை விரிப்பதுண்டு.

சிறு குருவிகளும்

தங்கள் சுகமான குகைகளை

குடைந்து கொள்வதுண்டு.

அவைகளின்

அஜந்தா எல்லோரா ஓவியங்கள் எல்லாம்

அவற்றின் பூக்குஞ்சுகளே.

பொக்கை வாய் பிளந்து தீனி கேட்கும்

அவற்றின் பசியாற்ற‌

இந்த நீலவானம் முழுதும்

உழுது விட்டு

இப்போது தான் வந்திருக்கின்றன.


நல்ல உள்ளமும் தீய உள்ளமும்

அம்பு போட்டு

விளயாடும் இடங்களே

மனங்கள் எனும் மராமரங்கள்.

மரத்தில் மறைந்த மரமும்

மரத்தை மறைத்த மரமும்

இந்த கள்ளிகளுக்கும் தெரியும்.

அவற்றின்

முட்களுக்கும் மலர்களுக்கும் கூட தெரியும்.

இயற்கையின் உள்ளுயிர்

கூடு விட்டு கூடு பாயும்

வித்தையில் தான்

எல்லா விஞ்ஞான‌ங்களும் இங்கே

கழைக்கூத்தாடித்தனம் செய்கிறது.

இங்கே

வரிசையாய் நின்று கொண்டிருப்பது

திருவள்ளுவரா? திரு மூலரா?

ஐன்ஸ்டீனா? நீல்ஸ் போரா?

ஹெய்ஸன்பர்க்கா?பெட்ரண்ட் ரஸ்ஸலா?

நம் ராமானுஜனா?இல்லை ராமானுஜரா?


=================================================================
11.05.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக