வியாழன், 28 பிப்ரவரி, 2019

சிவப்புத்தோகை



சிவப்புத்தோகை 
=========================================
ருத்ரா 


எங்கே உன் கையைக்காட்டு.
மெகந்தி  போட்டிருக்கிறேன் என்றாயே 
பார்க்கிறேன் என்றேன்.
ஆனால் 
அவள் உள்ளங்கை விரிந்ததும் 
திடீரென்று 
ஒரு மயில் அதிசயமாய் 
சிவப்புத்தோகையை விரித்து நின்றது!
ஏன் இந்த சிவப்பு ?
அப்பாவியாய் கேட்டேன் .
அவள் 
"க்ளுக்"கென்று சிரித்து விட்டு 
படக்கென்று பதுக்கிக்கொண்டாள் 
முகத்தை 
அந்தக்கையில்.
அவள் இதயத்தை அல்லவா 
விரித்துக்காட்டியிருக்கிறாள் !
பாருங்கள் 
அந்த "கல்வாழை" மங்கைக்கும் 
நாணத்தின் சிவப்பே 
உயிர்ப்பு.


====================================================================
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில்  ஓக் பார்க்கில் ஒரு பள்ளியின் வாசல் அருகே நான் நடைபயின்றபோது.....



தாஜ்மஹால்





தாஜ்மஹால்
====================================ருத்ரா

பூமிக்கு அடியில்
புழுக்கள் தின்றுவிட்ட பிறகும்
அக்கினியின்
எங்கள் பளிங்குக்கனவு
உங்களுக்கு உள்ளேயும்
ஒரு இளஞ்சூடு அல்லவா
ஏற்றிக்கொண்டு இருக்கிறது.
அந்தப்புரத்தில்
கணக்கற்ற மனைவிகள் இருந்தும்
இந்த ஒற்றை அமுத நீரூற்றுக்கு மட்டும்
இத்தனை ஆர்ப்பாட்டமா? கட்டிடமா?
வரலாற்று நியாய அநியாயங்களுக்கு
நாம்
எத்தனை எத்தனை சமாதிகள்
கட்டவேண்டியிருக்கிறது?
அதுவும்
அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன்!
அந்தக் கலைஞர்களின்
கைவிரல்கள் கூட இப்படி
இன்னொரு சலவைக்கட்டிடத்தை
கட்டி விடக்கூடாது
வெட்டப்பட்டனவாமே!
ஒரு பேனாவை உருட்டி கவிதை
எழுதும் கைகள் எல்லாம்
காதலுக்கு "பிள்ளையார் சுழி"
போட வென்றாலும் கூட‌
இந்த மாளிகைக்குள் உலவும்
அந்த காதல் ஆவிகளைத்தான்
எழுதித்தீர்க்கின்றன.
இந்த யமுனையின் சத்தம்
அழுகையா? மகிழ்ச்சியா?
எங்கள் காதலை
நினைத்து மகிழ்ச்சியும்
அதனால் ஓடிய ரத்த ஆற்றுக்கு
அழுகையுமாய்த் தான்
எங்களுக்கு கேட்கிறது.
என்றாவது முளைக்கும்
ஒரு சிவன் கோயில்
இதை விழுங்கிவிடலாம்.
வரலாற்று ஆசிரியர்களே!
எல்லாமே இறந்த காலம் ஆனபோது
பழியும் வெறியும் மட்டும்
ஏன்
புதிதாய் பிரசவித்துக்கொண்டேயிருக்கிறது?
மனித ஜனனம்
"மனித"த்தின் மரணம் ஆகிவிடலாமா?
எப்படியோ!
காதலுக்கு மட்டும்
ஜனனமும் மரணமும்
ஒரே சமன்பாட்டைத்தான் எழுதுகிறது.

=================================================



நுண்சிறைத்தும்பி



நுண்சிறைத்தும்பி
=====================================ருத்ரா இ பரமசிவன்.

நுண்சிறைத்தும்பி நுரைவிரித்தாற்போல்
நுவலும் அதிர்வின் நரல் மொழி உய்த்து
கொண்டல் நாடன் கொழு நிழல் தழீஇ
தொண்டை சுற்றிய குவளையன்ன‌
தொடிநெகிழ் பசலை நோன்ற காலை
நோக்கும் நெடும் தேர் மணி இமிழோசை.


---------------------------------------------------------------------

தட்டாம்பூச்சியின் நுண்சிறகுகள் நுரை படர்ந்தாற்போல் அதிர‌
அதனுள் ஒலிக்கும் காதலனின் இன் சொல் உற்றுக்கேட்டு
மகிழ்கிறாள் காதலி.காதலன் நாட்டின் மழை மேகம் மறைக்கும்
அடர்ந்த நிழலில் அவன் நினைப்பில் தழுவிக்கிடக்கும் உணர்வை
அடைகிறாள்.தொண்டைக்கொடி சுற்றிய குவளை மலர் போல‌
அவன் தழுவலுக்கு ஏங்கி அவள் "தொடி" நெகிழும் வண்ணம்
பசலையுற்றாள்.அப்போது ஏக்கத்தோடு காதலனின் தேர் மணி ஒலிக்கும் ஓசையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.இங்கே "காலை" என்பது சூரியனின் கதிரோவியத்தையும் குறிக்கும். இதுவே அந்த "நுண்சிறைத்தும்பி"யாய்  ஒளியும் நிழலும் கலந்த அந்த காட்சியில் தலைவிக்கு தோன்றுகிறது!

மேலே நான் எழுதிய சங்க நடைக்கவிதையில் இது ஒரு காதலின் எழில் பொங்கும் காட்சி.

==========================================================




புதன், 27 பிப்ரவரி, 2019

ஒரு குழந்தை பிறக்கிறது..

ஒரு குழந்தை பிறக்கிறது..
======================================ருத்ரா இ.பரமசிவன்.


தாய் வயிறு கிழிந்து
இப்போது தான் வந்தேன்.
அவள் மூச்சுகள் எனும்
வைரக்கம்பிகள்
வைத்து நெய்த சன்னல் பார்த்து
கனவுகள் கோர்த்தபின்
அவள் அடிவயிற்றுப்
பொன்னின் நீழிதழ்
அவிழ்ந்த கிழிசலில்
வந்து விட்டேன் வெளியே!

நீல வானம் கண்டு வியப்புகள் இல்லை.
சூரியசெப்புகளும் கொண்டு
விளையாட மனம் வரவில்லை.
வண்ணத்துப்பூச்சிகள்
சிமிட்டும் சிறகில்
வண்ணங்கள் ஏதும் உதிர்ந்திட வில்லை.
பூக்கள் எனக்கு
புன்னகை சொல்ல
வந்தன என்றார்.
புன்னகைக்குள் ஒரு
இருண்ட நீள் குகை
எப்படி வந்தது?
மான் குட்டிகள் மந்தை மந்தையாய்
மனதை அள்ளும் என்றார்.
மண்பொம்மைகளாய் அவை
யாவும் கரைந்து மறைந்தே போயின.
அடி வான விளிம்போரம்
தொடு வான இதழோரம்
சன்னமாய் ஒரு கேவல் ஒலியின்
கீற்று என்னை அறுப்பது
உணர்ந்தேன்.
என் தாயின் இதயச்சுவர்களில்
பாயும் குருதியில்
வலியின் குதிரைகள்
விறைத்து எகிறும்
காட்சிகள் கண்டேன்.
அழகாய் பூத்த அவள்
தாமரைச்சிரிப்பிலும்
மறைந்த ஓர் மெல்லிழை
கோடி கோடி உலகங்களின்
கனங்கொண்ட சோகமாய்
அழுகையின் லாவா
அடங்கித்தேய்ந்து
அவள் கருப்பைக்குள்ளேயே
கருங்கடலாய் உறைவது உணர்ந்தேன்.
பிரம்ம வாசலில்
பெண் ஒரு கேவலம்!
அவள் கதவு திறந்து
வெளிச்சம் காட்டும் உயிரொளி கூட‌
கேவலம் கேவலம்.
முக்தியும் நாசம் அதன்
பக்தியும் நாசம்
என்றொரு
மூளிக்குரல் மூள எரியும்
பிணத்தீ மூட்டிய‌
வேள்விகள் கொண்டா..ஞானக்
கேள்விகள் வளர்த்தீர்!
வெற்றுச்சுவடிகள் எரியட்டும்!
என் விடியல் அங்கு பூக்கட்டும்!
அப்போதே நான் ஒரு பூம்புயல்.
புறப்பட்டு வருவேன்
புதிய தோர் காலம் படைத்திடுவேன்.

======================================================
14.09.2016

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

மூன்றாவது கூட்டணியும் கமலும்.

மூன்றாவது கூட்டணியும் கமலும்.
=========================================ருத்ரா

மூன்றாவது கூட்டணி என்று
புதிதாய்
ஒரு மூன்றாம் பிறையை
படம் காட்டப்பொகிறாரா
கமல்?
இந்த முறை பைத்தியம் பிடிக்கப்போவது
வாக்காளர்களுக்கே.

திராவிடம்
தமிழ்
சிந்துவெளி
என்றெல்லாம் கூறியவர்
ஒரு சந்து வெளியில்
சரித்திரம் படைக்க கிளம்பியிருக்கிறார்.

தமிழனின் இதயத்துடிப்புகளை
அறிந்து கொள்ளாதவர்
"மையத்"த்தை "மய்யம்" என்று
எழுதினால் மட்டும்
தமிழ்ப்புரட்சிக்காரன் ஆகிவிடமுடியுமா?

ஊழல் ஒரு அரக்கன் என்றும்
இதன் வதத்திற்கு
திருமாலும் அவதாரம்
எடுக்க முடியாது
என்றும்
அவர் நன்கு அறிவார்.

பழைய ம.ந.கூ
ஓட்டுகளை
அல்வாத்துண்டுகளாய்
அம்மாவுக்கே
விழுங்க கொடுத்தது போல்
இவரது
ம.நீ.ம வும்
பாஜக அதிமுக  கூட்டணிக்கு
ஓட்டுகளை லட்டுகளாய்
விழுங்க கொடுக்க
தயாராகி வருகிறதா?

பிரித்தாளும் சூழ்ச்சியில்
நாம் இன்னும்
நான்கு வர்ணம் பூசிக்கொண்டு
நிற்கிறோமே!
ஓட்டுகள் பிரிவது
ஆதிக்க சக்திகளுக்கு
ஆதாயம் என்று
கூரைப்பள்ளிக்கூடத்து
ஒண்ணாம் கிளாஸ் பிள்ளைக்கும்
எளிதில் புரிந்த
ஒரு அரசியல் அல்லவா?


எனக்குள் ஓடுவது
காங்கிரஸ் ரத்தம்
என்றார்.
காங்கிரஸ்காரர்களே
திமுகவை கழற்றிக்கொண்டு
வாருங்கள் என்று சொன்னார்.
காங்கிரஸின் முந்த்ரா ஊழல் தானே
முதல் ஊழல்.
அப்புறம் எதற்கு இந்த‌
ஊழல் எதிர்ப்பு "ஊதுகுழல்?"

கிராமசபைக்கூட்டத்திற்கு
நான் தான்
"காப்பி ரைட்" வைத்திருக்கிறேன்
என்று
சலசலப்புகள் காட்டினார்.

இந்தியா பூராவும்
மூன்றாவது கூட்டணிக்கு
முகாம் நடத்துகிறார்.
பிஜேபியின் வெற்றிக்கு
"கேக் வாக்" எனும்
வெண்ணைப்பாதை போடுகிறார்.

அறிவு ஜீவித்தனமாய்
பேசி வந்த‌வர்
அசட்டுத்தனத்தின்
சிகரத்தில் அல்லவா நிற்கிறார்.

தேர்தலுக்குப்பிறகு நடக்கும்
"இசை நாற்காலி"போட்டியில்
நடக்கும் குதிரைப்பேரங்கள்
நம் ஜனநாயகத்தை
மேலும் மேலும் "மலடு"
ஆக்கும்
அசிங்க சித்திரங்களைத்தான்
நாம் கண்டு கொண்டு வருகிறோம்.
இது தான் இவரது
"இந்தியன் 3" யா?

=============================================




சம்பவாமி யுகே யுகே

சம்பவாமி யுகே யுகே
====================================ருத்ரா

"அதர்மம் தோன்றும் போதெல்லாம்
அதை அழிக்கும்
தர்மமாக நான் அவதரிப்பேன்."

இப்போது மொடிஜியின் கையில்
சங்கும் சக்கரமும் தான்.
கீதை நாயகனாய் தன்னை
இந்த மக்களிடையே
அரிதாரம் பூசாத குறையாய்
அவதாரம் காட்டி நிற்கிறார்.

கிருஷ்ணன் நினைத்தால்
முதலில் அதர்மத்தை வர விடாமல்
தடுத்திருக்கலாம்.
அப்புறம் அதை அழிப்பது தான்
தர்மம் என்று
இப்படி
"சம்பவித்துக்கொண்டே இருக்கவேண்டுமா?"
குருட்சேத்திரத்தில்
ரத்த ஆறு ஓடவைத்து தான்
கீதையை எழுதவேண்டியிருக்கிறது.

அது என்ன லாஜிக் என்று புரியவில்லை.
அதர்மமாய் வருவது மட்டும் மனிதர்களாம்
தர்மமாய் அவதரிப்பது மட்டும் பகவானாம்.
மேலும்
அந்த தர்ம பகவான் (கிருஷ்ணன்)
சில அதர்ம வியூகங்களை வைக்கும் போது
அதர்மமும் அதர்மமும் தானே
அந்த குருட்சேத்திரத்தை
ரத்தச்சேறு ஆக்குகிறது.
அப்படியெல்லாம் கேட்கக்கூடாது
அது அப்படித்தான்.
அந்த பாஞ்ச ஜன்யத்தில்
எல்லாம் அமுக்கப்பட்டு விடுகிறது.


கடவுளும் சைத்தானும்
ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
என்பது
தத்துவங்களின் தத்துவமாய் இருக்கும்
"பிரம்மச்சாரம்."
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
இப்படித்தான்
ஒன்றின் கண்களை மற்றொன்று
பொத்திக்கொண்டு
கண்ணாமூச்சி ஆடுகின்றன.
அவர்கள் கிருஷ்ணன் கீதை என்று
நூல் விட்டதால் தான்
அதே வழியில் நாமும் நூல் விடுகிறோம்.

ஆனால் போர் போல புகையெழுப்பப்படும்
இந்த மூட்டத்தில்
இவர்களின் யாகப்புகை தான்
அதிகம் தெரிகிறது.

அந்த புல்வாமா நிகழ்வு
எப்படி கோட்டை விடப்பட்டது?
என்பது நமது ரூபாயில்
பில்லியன் ரூபாய் கேள்வி.


புல்வாமா குருட்சேத்திரத்தில்
அந்த ஆர்டிஎக்ஸ் ரதத்தை ஓடவிடாமல்
தடுத்திருந்தால்
விலைமதிக்கமுடியாத‌
ராணுவ வீரர்களை காப்பாற்றியிருக்கலாமே.
எல்லைக்கோட்டை ஒட்டிய‌
அந்த தீவிர வாத முகாம்களையும்
முன்னூறு தீவிரவாதிகளையும்
அழித்து
நாம் "தர்மத்தை" நிலை நாட்டியது
நம்மை தலை நிமிர வைத்துவிட்டது.
நம் விமானிகள் மானிகள் தான்.
நம் மானத்தை காப்பாற்றி விட்டார்களே.

அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள்.

ஆனால்
கிருஷ்ணன் "சம்பவாமி யுகே யுகே"
என்று சொல்கிறானே.
அதென்ன யுகே யுகே?
அதாவது ஒவ்வொரு தேர்தலுக்கும்
என்று அர்த்தமா?
இதை எழுதிய அமித்ஷா எனும்
வியாசரிடம் தான் கேட்கவேண்டும்.

==============================================

அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
========================================ருத்ரா
(சிரிப்பதற்கு மட்டும்)



"ஒரு ஏழு அப்புறம் ஒண்ணு அப்புறம் பெட்டி.."

"டேய்..டேய்..என்னடா பெனாத்திக்கிட்டே வர்ரே."

அதாஞ்சொல்றேன்ல ...ஒரு ஏழு...

அட சட். நிறுத்துடாங்கொய்யா..

பின்னே என்னண்ணே..இப்பதான் கூட்டணிப்பேச்சுல கலந்துட்டு வர்ரேன். கூட்டணின்னா கொள்கை முரண்பாடுகள்
இருக்குமில்ல..."ஒரு ஏழு..அப்புறம் ஒண்ணு..அப்புறம் பெட்டி"

ஒதச்சுப்புடுவென் படுவா..வெளக்கமா சொல்றா..

அதாண்ணே. கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் இதுதாண்ணே எங்களோட "குறைந்த பட்ச கொள்கைத்திட்டம்.."..."ஒரு ஏழு..."

(சொல்லிக்கொண்டே போகிறார் அவர்.)

அடேய்..அடேய்..அடேய்...

(இவர் அடிக்க கை ஓங்கிக்கொண்டே பின் தொடர்கிறார்.)

===================================================================

இன்றும் சொல்கிறோம்...

இன்றும் சொல்கிறோம்...ஜிந்தாபாத் !
=============================================ருத்ரா

பாகிஸ்தானே!
புல்வாமாவுக்கு
போதுமா
பதிலடி?
நீ வளர்த்த‌
தற்கொலைப்படைகளே
உன் பொருளாதாரத் தற்கொலை.
தீவிரவாதமா உன்
தேசியத்தொழில்?
உன் மக்களுக்கு நீ
துப்பாக்கிக்களை
உணவாக
கொடுக்கத்துவங்கி விட்டாய்.
இந்தத் துப்பாக்கிகளுக்கு
ஓ பாகிஸ்தானே
இனி நீயே தான் தீனி.
கொஞ்சமும்
பாக்கியில்லாமல்
ஓ பாகிஸ்தானே நீ
அழிந்து போய்விடாதே!
உனக்குத்தெரியுமா?
உனக்கு எதிராக நாங்கள்
நீட்டிய இந்த துப்பாக்கியின்
குண்டுகள்
குண்டுகள் இல்லை.
நம் இருவரிடையேயும்
பூக்க வேண்டிய
நட்பின் ரோஜாகள்!
அந்த நட்பின்
ரோஜா இதழ்களை பிய்த்து விட்டு
தீவிரவாத முட்களை
பதியம் போடுவதை
இத்துடன் நிறுத்திக்கொள்.
அன்று நம்மை கைகுலுக்க வைத்து
நம்மைப் பிரித்த வெள்ளையன்
இந்த போர்க்குண்டுகளையும்
அந்த பூச்செண்டுகளுடன்
மறைவாக புதைத்துத்தந்த‌
சூழ்ச்சியை
எப்போது நீ புரிந்து  கொள்ளப்பொகிறாய்
அன்பான‌ பாகிஸ்தான் நண்பனே!
இன்றும் சொல்கிறோம்.
பாரதம் ஜிந்தாபாத்!
பாகிஸ்தானும்  ஜிந்தாபாத்!

=============================================================





திங்கள், 25 பிப்ரவரி, 2019

கோப்பை

சனி, 23 பிப்ரவரி, 2019

முகத்திரை



முகத்திரை
========================================ருத்ரா

முகத்திரையில்
மறைத்துக்கொண்டு
வழிய விட்ட
உன் புன்னகை
என் நெஞ்சுக்குள்
ஒரு ரோஜாக்காடு.

வருடுகின்ற கிளைகளில்
இலை நுனிகளில்
நகப்பூச்சு இல்லாத
உன் விரல்கள்
இசைக்க
என் நரம்புகளுக்குள்
வா!
இனி என் பாழ்வனம்
ஒரு யாழ் வனம்

நெசவு செய்யப்பொறுக்காத
அவசரத்தில்
இந்த பஞ்சுச் சிதறல்களை
உடுத்துக்கொண்டாயே
பார்!
இந்த வானம் வெட்கப்படுகிறது.

இது ஒரு
ஆரண்யப்பிஞ்சு.
உன் உள்ளத்தின்
முழுக்காட்டில்
ஆயிரம் நிலாக்களை
அல்லவா
புதைத்து வைத்திருக்கிறாய்!

===========================================================




யானை

யானை
==========================================ருத்ரா இ.பரமசிவன்

இங்கே கொலை.
அங்கே கொலை.
கொலைக்குள் ஒரு தற்கொலை.
தற்கொலைக்குள் ஒரு கொலை.
சாதிக்காரணம்.
அரசியல் காரணம்.
காவிரித்தண்ணீர்.
ஈழம்.
தமிழ் என்னும்
ஆயிரம் ஆயிரமாய் பிணங்கள்.
இந்திய சாணக்கியம்
இறுக்க தாழ் போட்டு விட்டது.
ஐ.நா கூட கண்களை மூடிக்கொண்டு
குப்புறக்கிடக்கிறது.
யாருக்கென்ன?
பிள்ளையார்களையெல்லாம்
கடலில் கரைத்தாயிற்று.
அந்த "சசி வர்ண சதுர் புஜ"
ரசாயனம் எல்லாம்
திமிங்கிலங்களின் வயிற்றில்.
நூற்றுக்கணக்காய் அவை
நாளை மிதக்கும் கரையில்.
அதையும் விழாக்கோலம் கொண்டு
பார்க்க மக்கள் கூட்டம் தான்.
எங்கும் எதிலும்
ஈக்கள் கொசுக்கள் மொய்க்கின்றன‌
ஊடகங்களாய்.
சினிமாக்களிலும்
சமுதாய உடல்களின்
மார்ச்சுவரி இருட்டுகள்.
நீதி மன்றங்களும்
அப்போதைக்கப்போது
மரச்சுத்தியல் தட்டுகின்றன.
வாய்தா.
ஜாமீன்.
மறுபடியும்
மறுபடியும்
சக்கரம் சுழல்கிறது.
மண் புழுக்கள் நசுங்குகின்றன.
மணற்கொள்ளை.
வீடு புகுந்து
கொள்ளை கொலை.
கிரானைட்டை வெட்டி எடுக்கிறேன்
என்று சொல்லி
மலைகளை எல்லாம்
மாமிசம் போல் அறுத்து விற்பனை.
பணம் குவிகிறது.
அதன் நிழலே
நம்மை எல்லாம் அசையாமல்
தின்கிறது.
அந்த ராட்சசப்பறவை
சிறகடிக்கிறது.
சட்டம் ஒழுங்குக்குப்பின்னால்...
ஒழுங்கு சட்டத்துக்குப் பின்னால்...
சட்டம் ஒழுங்கே
நம் வேதம்.
நம் வேதாளம் எல்லாம்...
இதனூடே
தேர்தல் "ஆனையம்" எனும்
மந்திரக்கோல்
ஒரு யானையிடம்
மாலையைக்கொடுத்து
போடச்சொல்கிறது.
அது
மாலையா?
மலர்வளையமா?
இந்த ஜனநாயகம் விறைத்துக்கிடக்கிறது.

===================================================
20.09.2016

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நீ



நீ 
===========================================
ருத்ரா இ பரமசிவன் 


நீ  யார்?
நாங்கள் உன்னைத்தேடுகிறோம்.
நீ 
கருங்கற் சுவரா?
உச்சியில் தக  தகக்கும் பொற்கோபுரமா?
லட்சக்கணக்கில் சுலோகங்களா ?
புரியாத ஒலிகளா?
புரிந்த ஒலிகளிலும் 
தெளியாத படிமங்களா?
நாலுவர்ணத்தில் முதல்வர்ணத்தார் 
எச்சில் தெறிக்கும்  சொற்களிலா நீ?
ரிக் வேதம் 
வானத்திலேயே 
இன்னும் விரிக்காமல் உறைந்து கிடக்கும் 
ஒலிகள் என்று தானே
ரிஷிகள் சப்திக்கிறார்கள்.
மனிதர்களின்  நாவில் வருடப்பட்டு 
வார்த்தைகள் ஆகும்போதே
நீ 
தீட்டு அடைந்ததாக அல்லவா சொல்கிறார்கள்.
 அந்த முதல்வர்ணத்தார் நாவுகளில் 
எச்சில் பட்ட 
உன்னை 
சம்புரோக்ஷணம் செய்ய 
நீ தானே 
கீழே இறங்கி வரவேண்டும்?
உனக்கு பதிலாய் 
இந்த வயற்சேறுகளில் 
சுடுகாட்டு சாம்பற்பூக்களில் 
உழன்று வாழ்ந்து 
புனிதமாகிப்போன 
இந்த நாலு அஞ்சு வர்ணத்தாரை 
நீ 
அனுப்பியிருப்பது 
அந்த வர்ணத்தாருக்கு 
ஏன் இன்னும் புரிபடவில்லை?
இந்த முப்புரியிலும் 
புரிதல் ஆகாமல் 
நீ 
எந்த புரியில் இருக்கிறாய் கூறு?

==================================================================



புதன், 20 பிப்ரவரி, 2019

தனிமை இடம்.


அகத்தியன் அருவி . பாபநாசம்.



தனிமை இடம்.
==============================================ருத்ரா

என்ன தேடுகிறது இங்கே
இந்த மௌனம்?
தூரத்து அருவிக்குள்ளும்
புகுந்து
ஒரு இதயம் தேடுகிறதா?
நீரின்
பளிங்கு பிம்பம்
ஒரு சிறு இலை விழுந்து
வட்ட வட்டமாய்
ஒலி பரப்புமுன்
அந்த மௌனம் சுக்கல் சுக்கலாய்
போய்விடும் முன்
மூளிவானமே
உன் கனவு என்னவென்று
சொல்லிவிடு.
வானமே இல்லாத ஒரு வானத்தை
தேடிக்கொடு
அதன் உட்கூட்டில்
ஒரு விடியல் கசியும்.
அதுவே அவளுக்கு நான்
சொன்ன வார்த்தை என்கிறாயா?
அவள் சிரித்தது
இந்த அண்டம் முழுவதும்
இண்டு இடுக்கு இல்லாமல்
நிரம்பிக்கொண்டது.
இதில் தனிமை இடம் ஏது?
இப்போதைக்கு அந்த அருவியின்
நீர்த்துளியில் ஒளிந்து கொள்.
அது
கீழே விழுந்து சூரியனில் கலந்து
ஏழு வர்ண ரத்தம் சிதறுமுன்
உன் வானவில்லிலிருந்து
ஒரு பொய்வண்ணத்தின்
கணைதொடு அவள்
இதயம் நோக்கி.

========================================================





பொம்மலாட்டம்

பொம்மலாட்டம்
=============================================ருத்ரா

ஒன்று
ஒரே மதம் என்று சொல்லி
மற்ற மதங்களை ஒழித்து
"மாற்றுக்கருத்து" என‌
எது வந்தாலும்
அக்கருத்துகள்
சிரச்தேதம் செய்யப்பட வேண்டும்
என்றும்
சாதிகள் அதற்கு ஏற்றாற்போல்
வர்ணம் பூசப்பட்டதை
போற்றிக்காக்க வேண்டும்
என்றும்
இதுவே சனாதனம் என்று
பாஞ்சஜன்ய சங்கை ஊதுகிற கட்சி.

மற்றொன்று
ஆணவக்கொலைகளை
சட்டமாக்கி
சாதியின் உள் புனிதத்தை
அதன் வெறியை
மதமாக்கி
கட்சியாக்கிய கட்சி.

ஒன்றுக்குள் ஒன்று
இருப்பது
இப்போது புரிகிறதா?

ஐந்தும் ஏழும் பன்னிரெண்டு
ஆனால் என்ன?
ஏழும் ஐந்தும்
பன்னிரெண்டு ஆனால் என்ன?

சினிமாப்படங்கள் வழியாக‌
திராவிடம் சொன்ன‌
அந்த பெரிய நடிகர்
நான் ஆனையிட்டால் என்றெல்லாம்
சவுக்கை சுழற்றி விட்டு
ஆட்சிக்கு வந்ததும்
மூகாம்பிகைக்கு
வெள்ளிவாள் பிடித்தார்.

அவரது நிழலான‌
பெண் தலைவரோ
காரியக்கூத்து ஆட வந்தாலும்
ஆரியக்கூத்து தான்
என் அடிப்படை ஆட்டம்
என்று
அன்று ராமனுக்கு பாலம்
கட்ட கல் எடுத்து சுமந்த‌
அதே தமிழ் அனுமார்களை
ராமன் கோவில் கட்ட
செங்கல் சுமக்கவைத்தார்.

அரசியல் பித்தலாட்டங்களில்
மிகவும் மோசமாக
நசுங்கி நொறுங்கி
தெருவோரம்
ஏதோ உருக்குலைந்த டப்பாவாக
கிடப்பது வேறு ஒன்றும் அல்ல
நம் தமிழ் இனமே.

இப்போது
நாற்பது எல்லாவற்றையும்
கூட்டிப்பாருங்கள்.
மோடி அமித்ஷாவின்
சூத்திரக்கயிறுகளே
பொம்மலாட்டம்
நடத்திக்கொண்டிருப்பது புரியும்.

கூட்டணிக்கணக்கில்
கணக்கு இருந்தாலும்
ஜனநாயம் எனும்
கருத்து "கருச்சிதைவு"
அடைந்து கொண்டிருப்பதை
இப்போது  தடுக்காவிட்டால்
நாம் கும்பிடும் சாமிகளாய்
இனி ஹிட்லர்கள் தான் இருப்பார்கள்.

அரசியல் பித்தலாட்டங்களில்
மிகவும் மோசமாக
நசுங்கி நொறுங்கி
தெருவோரம்
ஏதோ உருக்குலைந்த டப்பாவாக
கிடப்பது வேறு ஒன்றும் அல்ல
நம் தமிழ் இனமே.


எல்லாம் இருந்தும்
உலகுக்குக்கே ஒளிகாட்டும்
ஒரு விளக்கை வைத்திருந்த போதும்
ஒன்றுமற்ற ஒன்றாய் ...

மின்மினிகளின்
சினிமா ஜிகினாவை
சமைத்து சாப்பிட்டு
வாழ்ந்திடலாம் என்று
நுரைக்கோபுரங்கள்
கட்டுகின்ற
கானல் சித்திரங்களாய்....

தனக்கு உரிமையாய்
கிடைக்க வேண்டிய
பணங்களை
"பிச்சை போடுபவர்களை"
சாமிகளாய் ஆக்கிக்கொள்ளும்
ஒரு அடிமை சாசனத்தை
தன்னோடு சேர்த்து தைத்துக்கொண்ட
வெறும் கந்தல் கூளங்களாய்....

இற்றுப்போன தமிழ் இனமே
கற்றுக்கொள்ள வேண்டியது  நீ
தமிழ் அல்ல
தமிழுக்குள் கனலும்
அந்த வீரமும் வெற்றியும் தான்.



===================================================


செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

பீலி

பீலி
====================================ருத்ரா

மயிற்பீலியை வைத்து
கவிதை எழுதினேன்
அவளுக்கு.
பெண் மயில் பிரியவிட்டு
எவன் அந்த ஆண் மயிலை
கொன்றானோ?
அது பீலியாய் என் கையில்.
அதன் பிரிவு தாகம்
கண்ணீராகி
காகிதம் நனைத்தது.
இதுவே போதும்.
என்ன நான் அவளுக்கு
எழுதுவது?

=======================================
30.05.2017

மனிதம் சுடர்க!




மனிதம் சுடர்க!

=======================================ருத்ரா



நடந்து செல்.

நிமிர்ந்து செல்.



வானம் மட்டுமே உன்னை இடிக்கும்.

அப்போதும் அந்த‌

வானத்தோடு கொஞ்சம் கிசு கிசுத்துப்பார்.

அன்பும் அறிவுமே

இங்கு கடல்கள்

இங்கு வானங்கள்

இங்கு விண்வெளி மண்டலங்கள்

என்று சொல்லிப்பார்

இப்போது

வானம் உன் காலடியில்.



உன் காலடிகள் தோறும்

அத்வைதம் தான்.

மானிடத்துள் கடவுளர்கள்.

கடவுள் எனும் பாஷ்யம்

பல்லுயிர் நேசமே.

இதில் வெட்டரிவாள்களுக்கும்

வேல் கம்புகளுக்கும்

இடமில்லை.

துப்பாக்கிகள் கூட‌

முறிந்து போகும்

சோளத்தட்டைகளே.



உலக மானிடம் என்ற‌

பேரொளியில்

சில்லறை மதங்கள்

வெறும் மூளித்தனமான‌

இரைச்சல்களே.

உன் கடவுள் என் கடவுள்

என்று ஜீவ அப்பத்தை

கூறு போட்டு 

தின்னும் குரங்குகள் அல்ல‌

நாம்.

அது என்ன தான்

என்று

அறிவின் நுண்ணோக்கியிலும்

ஆய்வின் விண்ணோக்கியிலும்

உற்றுப்பார்த்துக்கொண்டே

இருக்க வேண்டும்.

இது தான்

என்று சமாதி கட்டும்போது

அதில் நசுங்கும்

சிற்றெரும்பின் குரல்

உன் காதுகளில் விழவில்லையா?

ஆம்..

அறிவு ஊர்ந்து செல்லும் இடங்கள்

எத்தனை எத்தனையோ?

அதன் தடம் தெரிந்தால் போதும்.

மாய சொப்பனங்களுக்கு

வர்ணங்கள் பூசாதே!

கலக்கங்களையும் அச்சங்களையும்

கல்வெட்டுகள் ஆக்காதே..



நகர்ந்து கொண்டே இரு.

சூரியன் ஆனாலும்

பூமி ஆனாலும்

புளூட்டோ ஆனாலும்

நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

நகர்ந்து கொண்டே இருக்கும்போது தான்

நிற்கவும் செய்கிறீர்கள்.

அந்த இனர்ஷியா எனும்

அக ஈர்ப்பும் புற விடுப்பும்

சமம் ஆகும் ஒரு புள்ளியை

கணிதப்படுத்துவதில் தான்

விஞ்ஞானிகள்

தங்கள் ஆயுள்காலங்களையெல்லாம்

தொலைத்து இருக்கிறார்கள்.

விருப்பு வெறுப்பு எனும்

உணர்ச்சிகள்

தீயாக உன்னைச்சூழ விடாதே!

சிவ உருவெளி எனும்

சச்சிதானந்தங்கள்

எல்லா மக்களும்

எல்லா மக்களுக்குமாக‌

வாழ்ந்து இன்புறுவதே.

வேறு நமைச்சல்களுக்கு இடமில்லை.

எல்லா உயிர்களின் ஊற்றுக்கண்ணும்

மனிதம் வழியாக திறக்கட்டும்.

அது திக்கெட்டும் பாயட்டும்.

மனிதம் வாழ்க!

மனிதம் சுடர்க!



==================================================

19.08.2017












வாக்காளிகளே

வாக்காளிகளே
=====================================ருத்ரா

வாக்காளர்கள் என்று
பட்டியலில் பெயர் இருக்கிறதா?
நம் வீட்டில் எத்தனை ஓட்டுகள்
என்று கணக்கு பார்ப்பதும்
கணக்கின் மேல் இன்னும் ஒரு
கணக்கு பார்ப்பதுமாகத்தான்
இன்னும்
நீங்கள் இருக்கப்போகிறீர்கள்?
ஜனநாயகம் என்பதும் கூட‌
நம் சிந்தனைப்போர் தான்.
இனி நீங்கள் "வாக்காளிகள்" எனும்
எனும் பரிணாமத்துள்
நுழைந்து தான் ஆகவேண்டும்.
போராளிகள் போல் உங்கள்
ஒற்றைவிரல் களத்தில் இனி
குருட்சேத்திரங்கள் நிழல் காட்டலாம்.
உங்கள்
கணினியில் விளையாட்டு போல்
பட்டன் தட்டுவதில்
என்ன வேண்டுமானலும் நிகழலாம்!
நம் அடையாளம் மாறிப்போய்விடுவதற்கு
அடையாளமாக என்னென்னவோ
நிகழ்கின்றன.
ஆள்பவர்கள் இன்னும் நாம் தான்
ஆள வரப்போகிறோம்
என்பதற்கு
பணங்களை வைத்து படிக்கட்டுகள்
போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ரசர்வ் வங்கி  குழந்தை போல்
அவர்கள் மடியில் போய் உட்கார்ந்து கொண்டது .
அவர்கள் கேட்ட கோடிகளை
அள்ளி அள்ளி வழங்கத்தயார் ஆகிவிட்டது.
வழக்கமான நடைமுறை தான்
என்கிறார்கள்.
ஆட்சியின் நுனிக்கொம்பர் ஏறியபின்
அதில் இந்த‌
கவர்ச்சிகரமான கற்பக தருக்களை
நட்டு வைப்பது
ஒரு ஏமாற்று வேலை ஆகாதா?
குதிரை பேரம் என்ற சொல் தான்
நம் ஜனநாயக அகராதியில்
தேடும் எல்லா சொற்களுக்கும்
அர்த்தம் என்று ஆகிவிட்டது.
வாக்காளர்களே!
ஓட்டுப்புயல்கள் உங்கள் கையில் தான்.
வாக்காளர்கள்
என்ற பெயர்களை விட்டு விட்டு
வாக்காளிகள் என்ற பெயரில்
ஜனநாயகப்போராளிகளாய்
வலம்  வாருங்கள்.

=============================================================








ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

திக்கு தெரியாத காட்டில் கமல்


திக்கு தெரியாத காட்டில் கமல்
============================================ருத்ரா


இப்படித்தான்
விஜயகாந்த் ஒரு புலிவேட்டைக்குப் போகிறேன்
என்று
குறுமுயல்களைப் பிடித்தார்.
தன்னந்தனியே பிடித்த‌
அந்த குறுமுயல்கள் கூட‌
அவர் வீரத்துக்கு சான்று தான்.
அப்புறம்
கூட்டணி ஆட்டத்துக்கு
துருப்பு சீட்டு வைத்துக்கொண்டு
என்னென்னவோ சினிமாக்கள் எல்லாம்
காட்டினார்.
எல்லோருக்கும் வரும்
முதலமைச்சர் ஆசைக் காய்ச்சல் வந்தபின்
அரசியலில்  வெறும்
நோயாளி ஆகி விட்டார்.

ஆனால் கமல் இப்போதே
ஒரு அரசியல் நோயாளி ஆகிவிட்டார்
\இல்லாவிட்டால்
திமுகவை இப்படி திட்டவேண்டியதில்லையே.
அறிவு பூர்வமாக பேசுவாரே.
சிக்மண்ட் ஃ பிராய்டு  கோட்பாட்டின் படி
இந்த "ஆழ்வார்ப்பேட்டை  ஆண்டவருக்குள்"
இன்னொரு "ஆளவந்தார்" குமுறுகின்றாரோ?

மக்களே
என்று இவர் கூப்பிட்டது போல்
மற்றவர்கள் கூப்பிட்டால்
"அய்யய்யோ..என்னைக்காப்பி அடித்து விட்டார்களே"
என்று கதறுவார் போலிருக்கிறதே!
சோழன் காலத்து பஞ்சாயத்து முறையை
காப்பி அடித்து
கிராம சபை என்று இவர் கூறிவிட்டாரே
அப்போ
அந்த சோழன்
அந்த நூற்றாண்டு தூரத்திலிருந்து
"அடே பரமக்குடி பொடிப்பயலே
காப்பி அடிக்கலாமா?"
என்று குரல் கொடுக்க மாட்டானா?
இவ்வளவு ஏன்?
மக்கள் நீதி மய்யம் என்று
இவர் தராசு பிடித்த நாளில்
"நாளை நமதே" என்று
எம் ஜி ஆரை காப்பி அடிக்கவில்லையா?
சரி தான்.
கமலுக்கு கமலே
அபூர்வ சகோதரர் ஆகி
அவர் காப்பி இவர்
இவர் காப்பி அவர்
என்று நடிக்க ஆரம்பித்து விட்டாரோ?
..........
...............
வடிவேலு சொன்னால்
இப்படித்தான் சொல்வார்.


அரசியலா இது!
சின்னப்புள்ளத் தனமாவுல்ல
இருக்கு...


=========================================================

















சனி, 16 பிப்ரவரி, 2019

தண்ணீரில் தண்ணி காட்டும் ரஜனி

தண்ணீரில் தண்ணி காட்டும் ரஜனி
=================================================ருத்ரா

கனவு கண்டு கொண்டிருக்கும்
கட்சிகளுக்கு
தண்ணி காட்டவே
சூபர்ஸ்டார் "தண்ணீர் பிரச்னையை"
கையில் எடுத்திருக்கிறார்.
காவிரி கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும்
எப்போதும் சூடாகவே
ஓடுகின்றது.
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.
இங்கே உள்ள எடப்பாடி
அங்கே உள்ள சிம்மாசனத்திற்கும்
அங்கே உள்ள குமாரசாமி
இங்கே உள்ள சிம்மாசனத்துக்கும்
மாறி வந்து
உட்கார்ந்து கொள்கிறார்கள் என்று
வைத்துக்கொண்டால்
எடப்பாடி மேகதாட்டு அணையை கட்ட‌
வேகம் காட்டுவார்.
குமாரசாமி மேகதாட்டு அணையை
கட்டாமல் முடக்கவேண்டும் என்பார்.
இந்த
நாற்காலி சைக்காலஜியைத்தான்
தண்ணீர் பிரச்னையில் வைத்து
தண்ணி காட்டுகிறார் ரஜனி.

ரஜனி மக்கள் மன்றம்
நாடாளு மன்றத்தேர்தலில்
கையைக் கட்டிக்கொண்டு நிற்கப்போகிறதா?
அப்படித்தான்
தங்கள் கொடி பேனர் போன்றவற்றையெல்லாம்
சுருட்டி வைத்துவிட்டு
தங்கள் தங்கள் குடும்பங்களைப்போய்
கவனியுங்கள் என்கிறாரா சூபர்ஸ்டார்?
அமித்ஷாக்களும் தமிழருவி மணியன்களும்
நகம் கடித்துக்கொண்டிருக்கட்டும்.
அவர் "வாய்ஸ்"
எங்காவது எப்படியாவது
கசியுமா
என்று காத்துக்கிடக்கின்றனர்
கட்சிக்காரர்கள்.
அவருக்கோ
தன் சின்னமகள் வயிற்றுப்பேரன்
"வேத்"பற்றிய அக்கறையும் அன்பும் தான்
இப்போதைக்கு முக்கியம்.
ட்விட்டர் என்றால் சிட்டுக்குருவி சிறகடிப்பு
என்று தானே அர்த்தம்.
ட்விட்டர்களே!
உங்கள் முரட்டு செவிகளுக்கு
இசை அமைத்து இன்பம் காண‌
"காக்காய் இரைச்சல்களாய்"
அந்த மெல்லிய பிஞ்சு "வேத்" பற்றி
ஆலவட்டம் போடுவதை
நிறுத்திக்கொள்ளுங்கள்.
வேண்டுமானால் அவர் கை காட்டிய‌
தண்ணீர் பிரச்னைக்கு
வெளிச்சம் காட்டுங்கள்.
வாழ்க!
ரஜனியின் மக்கள் மன்றம்!

===================================================






"தாய் மண்ணே வணக்கம்."

"தாய் மண்ணே வணக்கம்."
=========================================ருத்ரா

நம் "இனியவை நாற்பது"க்கெல்லாம்
அடித்தளமாக‌
படுத்துக்கிடப்பது
ஒரு தேசிய சோகத்தின்
இந்த "இன்னா நாற்பது" தான்.
கம்பீரமாய் இந்த அசோகசக்கரம்
இப்படி மீசை முறுக்கி நிற்பதன்
மாறாத வீரத்தையும் துணிவையும்
மண்ணுக்குள் கிடந்தாலும்
செதுக்கிக்கொண்டிருப்பவர்கள்
இந்த நம் தவப்புதல்வர்களே.
அழுது புலம்பும் தன் மனைவி
எனும் தாயின்
அந்த கர்ப்பத்துக்குள்ளும்
ஒரு எரிமலைப்பிஞ்சை
பதியம் செய்து இருக்கிறோம்
என்ற நினைப்பில் அல்லவா
அவன் அந்த சவப்பெட்டியில் கிடக்கிறான்.
ஏதோ
தீபாவளிக்கு அப்பா தைத்துத்தந்த‌
புதுச்சட்டையை அணிந்து கொண்டது
போல் அல்லவா
அந்த பெட்டிக்கு ஒரு மூவர்ண சட்டையை
போட்டுக்கோண்ட திருப்தியில்
படுத்துவிட்டான்.
வாளோடு வாள்மோதும்
யுத்தம் எல்லாம் செய்யத் திராணியற்ற‌
மலட்டு மிருகங்களின்
இந்த சதிகள் எல்லாம்
தவிடு பொடியாக நொறுக்கப்படவேண்டும்.
பாரதத்தின்
எல்லாமொழியும் உருண்டு திரண்டு
இப்போது
தீப்பிழம்பாக வெளிச்சம் ஏற்றுகிறது.
நம் மண்ணின் நாடி நரம்புகளின்
பின்னல் எல்லாம்
நம் எல்லா மாநிலங்களிலும்
மூவர்ணத்தின் ஒரே அக்கினி வர்ணத்தை
உயர்த்திக்காட்டுகிறது.
நம் தேசியக்கனலின் அதன்
ஒரே மொழி
இதோ ஒலிக்கிறது

"வந்தேமாதரம்"

"தாய் மண்ணே வணக்கம்."

============================================



இன்னொரு அம்மாவாக!

இன்னொரு அம்மாவாக!
=================================ருத்ரா இ.பரமசிவன்

"என்னடா...
பொல்லாத‌ வாழ்க்கை?"

இது ஏதோ
ஒரு சினிமாப் பாட்டு இல்லை.
இருட்டின் புழுக்கூட்டிலிருந்து
மின்னல் ஒழுக‌
பிய்த்து வந்தோம்.
இந்த உலகமே
சுகமான துணிவிரிப்பு தான்.
அன்னையின் கன்னிக்குடம் உடைத்து
அந்த அன்புப்பிழம்பில்
அவளுக்கு ஒரு
மறக்க முடியாத வலியை அல்லவா
கொடுத்துவிட்டு வந்தோம்?
அந்த வலியைப்பற்றி
அம்மாவிடம் கேட்டேன்.
"போடா! கிறுக்கா!
வலியா?
அமுத சாளரம்!
அதன் வழியே
என்னென்ன விஸ்வரூபம் எல்லாம்
பார்க்கிறேன் தெரியுமா?
உன் பச்சை நரம்புகளில்
நான் உயிர் பாய்ச்சிக்கொண்டிருப்பேனே
முலைப்பாலாய்
அப்போதும்
அந்த "ஆகாயகங்கையின்"
பால் வெளியில் தான் மிதக்கிறேன்.
"காஸ்மோனாட்டுகள்" கூட‌
கண்ணாடிக்குமிழிகளில் இருந்து
புன்சிரிப்பை வீசுவதை
உணர்கின்றேனே!
செல்லமே!
உன் உதடுகள் கவ்விய உயிர்ப்பின்
பூவாசத்தில்
எந்த பிருந்தாவனங்களும்
வெறும் தூசிமேடுகளே!
ஓ!அம்மா எப்படி இப்படி
சாஹித்ய அகாடெமிக்காரர்காரர்களுக்கே
தண்ணி காட்டும்
இலக்கியம் அல்லவா
உன் தாய்மை!
அம்மா
இப்போது
எந்த சன்னல் வழியாய் என்னை
எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாய்?

"போதும் சோஃபாவிலேயே தூக்கமா?"
மணி பன்னிரெண்டு!"
மனைவி எழுப்பி தூங்கவைத்தாள்
இன்னொரு அம்மாவாக!

================================================
08.02.2016







அலை

அலை
===============================================ருத்ரா

அலையா? கடலா?
எது நீ சொல்?
முட்டாளே!
ஒன்று தானே இன்னொன்று.
ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை.
ஹா!ஹா!ஹா!
யாரை ஏமாற்றுகிறாய்?
நீ
காதலா? பெண்ணா? சொல்!
இரண்டும் தான்.
அடிப்பாவி!
என்ன ஏமாற்று வேலை.
பெண்களையெல்லாம் தேடினேன்..பார்த்தேன்.
அங்கே காதல் இல்லை.
காதலையெல்லாம் தேடினேன்...தேடினேன்
அங்கே ஒரு மூளிவானம் தான் தெரிந்தது..
அடி முட்டாளே!
எங்காவது ஒரு இதயம் துடிக்க‌
கேட்டிருக்கிறாயா?
அந்த இதயமாய் நீ ஆகியிருக்கிறாயா?
அந்த இதயத்துக்குள்ளும்..இதயத்துக்குள்ளும்
ஆயிரம் ஆயிரம்
ரோஜா இதழ் அடுக்குகளாய்
உணர்ந்து களித்து
இலேசாய் ஆகியிருக்கிறாயா?
அது வரை
நீ கல் தான்.
அதுவும் கல்லறையை மூடிக்கிடக்கும்
கல் தான்.
உன் அருகே
ஒரு பச்சைப்புல்
உன்னைப்பார்த்து கேலியாய்
சிரிப்பதை புரிந்து கொள்ளும்
ஒரு மெல்லிய மின்னல்
என்று உன்னைத்தாக்குகிறதோ
அன்று
நீயே..காதலின்
கடல்.
நீயே..காதலின்
அலை.

========================================================
16.05.2015

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

மாமனிதன் அப்துல் கலாம் எனும் ஒப்பற்ற ஒளியே!

மாமனிதன் அப்துல் கலாம் எனும் ஒப்பற்ற ஒளியே!
=============================================================ருத்ரா
(ஒரு மீள்பதிவு)

அதோ அந்த  படத்தை
உற்று நோக்கும் போது
இப்படித்தான் எங்களுக்கு
சொல்லத்தோன்றுகிறது.

மீண்டும்
உயிர்த்தெழுந்து வந்து
நிற்கிற
இந்த மண்ணின் உருவகமே!
இறந்த நாள் என்று
அன்று நாங்கள் கொட்டிய
கண்ணீரின் கனமழையில்
மரிக்கவே மறந்து
மறுபடியும் முகம் காட்டும்
எங்கள் கனல் ரோஜாவே!
குடியரசு தலவர் என்ற உயர்நிலை
நாங்கள் அளித்த போதும்
அந்த நீண்ட கோட்டின்
ஒவ்வொரு பித்தானிலும்
மக்கள் இதயங்களை
கொத்து கொத்துகளாக‌
கோடி உள்ளங்களாக அல்லவா
அணிந்திருந்தாய்!
உன் விஞ்ஞானம்
இந்த தேசத்துக்குள்
விதையூன்றி விருட்சம் ஆனது.
விண்வெளியில்
இந்திய மண்ணின் மகத்தான‌
வெற்றிக்"கையெழுத்தும்"
வலம் வந்து கொண்டிருக்கிறது.
எங்கள் கோடிக்கைகளையும்
அறிவின் கூர்மை தீட்டி
ஒரே கையாக்கி உயர்த்திக்காட்டினாய்.
நியூடிரினோ
இன்னும் எங்கோ ஒளிந்து கொண்டு
இன்னும் கண்ணாமூச்சி ஆடுகிறது..
ஆம் அது உன் "கனவின்"
கதிர்வீச்சைப்போல!
நீ கொடுத்த உறுதியும் நெஞ்சுரமும்
விஞ்ஞானத் தீக்கொளுந்தும்
எங்களிடம் இன்னும்
சுடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மண்ணில் புதைத்தாலும்
விண்ணில் முகம் காட்டுபவன் நீ!
விண்வெளிக்கு ஏதோ
கடவுளைத் தேடி போயிருக்கிறாய்
என்று இவர்கள் நினைக்கலாம்.
ஆனால்
சூரியனே மங்கிப்போகும்
அதோ அந்த கண்களைப்பாருங்கள்!
அந்த மாமனிதன்
நம்மை நோக்கி அல்லவா
உற்றுப்பார்த்துகொண்டிருக்கிறான்.
அப்துல் கலாம் எனும்
அறிவார்ந்த‌
மனித நேயம் கலந்த‌
ஒப்பற்ற ஒளியே!
நீ ஒளிந்து ஒளிந்து விளையாடினாலும்
எங்கள் இதயங்களின்
ஆரிக்கிள் வெண்டிரிக்கிள்
அறைகளுக்குள் தான்
ஓடி ஓடி ஒளிந்து வெளிப்படுகிறாய்.
ஆம்
உன் கனவே
இந்த இளைய பாரத்தின் கனவு!

================================================================
15.10.2015



உற்றுக்கேள்

உற்றுக்கேள்
==============================================ருத்ரா

என் நிழலை உமிழ்ந்தது
யார் அல்லது எது?
சன்னல் கதவுகளை
விரீர் என்று திறந்தேன்.
சூரியன் கன்னத்தில் அடித்தான்.
வெகு கோடி மடங்கு
வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே!
உன் கருவுக்குள்
விதை தூவியது யார்?
நாங்கள்
ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி
உன்னில்
ஜனித்ததாய்
கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான்
இருக்கிறோம்.
உன் அப்பன் யார் அற்பனே?
பிக் பேங்க் என்று
ஆயிரம் அயிரம் கோடி
ஆற்றல் பிசாசு
ஆவி கொடுத்து
உருட்டித்திரட்டி
உரு பிசைந்த அண்டத்தில்
உன் பிண்டம் பிடித்த‌
கை எது?
கேள்வியின் திரி
நீண்டு கொண்டே இருக்கிறது.
மனித மூளையின்
முடிச்சு மண்டலங்களில் கூட‌
விடை வெடிக்கலாம்.
பிக் பேங் திரைக்கும் பின்னே
ஒரு தூரிகை அசைகிறது.
அந்த சவ்வு ஓவியங்களில்
"டி ப்ரேன்" பிரபஞ்சங்கள்
தெருக்கூத்து நடத்துகிறது.
அந்த விஞ்ஞான அரிதாரங்களை பூசிக்கொள்
அறிவுப்பிழம்பே!
அவதாரங்களின் மூட்டைகளை
அவிழ்த்துப்பார்த்து
அஞ்ஞானித்தது போதும்.
போ!
இறைவன் தேடும் இரைச்சல்களை நிறுத்து!
இந்த நிழலின்
ஒளியைத்தேடி ஒளிக்குள் ஒளிந்து போ!
ஒளி உன்னை உறிஞ்சக்கொடு.
இந்த நிழல்களின்
இதயத்துடிப்புகள் அதோ
கேட்கிறது பார்.
ஆயிரமாயிரம் பிரபஞ்சங்களையும்
அள்ளிப்பூசிக்கொண்டு
செரிபரம் செரிபல்லம் எனும்
மண்டைக்கருவூலத்து
உன் நியூரான்களுக்குள்
கேட்கிறது பார்
உற்றுக்கேள்.

================================================
17.07.2016

வியாழன், 14 பிப்ரவரி, 2019

(கை பேசிக் கவிதைகள்)

(கை பேசிக் கவிதைகள்)
=============================================ருத்ரா

சில "பல்ஸ்களே" பாக்கி.
=================================

மயிலிறகில்
மனம் தொட்டு
ஒரு கவிதை
உனக்கு இதோ.
கடல் நுரையில்
சொல்லெடுத்து
ஒரு கவிதை இதோ.
பட்டாம்பூச்சி சிறகில்
பட்டா போட்ட கனவுகளோடு
இதோ கவிதை.
தமிழுக்கும் அமுது என்று பேர்
என்று இனித்த உதடுகள்
வருடிய சொற்களில்
கவிதை இனிப்பாய் இதோ..

"போதும் டா மொக்கை.
ஐ லவ் யூ சொல்லுடா
சீக்கிரம்.
டாப் அப் போட
சில பல்ஸ்களே பாக்கி..."

=======================================ருத்ரா

வேலன்டைன் என்றொரு "இளமை உலகம்"

வேலன்டைன் என்றொரு "இளமை உலகம்"
====================================================ருத்ரா

இன்று
மின்னல்களின் தொப்பூள்கொடி
இதயப்பூக்களில்
காதலாய்
காதலை காதலால் காதலித்து
கொடியேற்றும் தினம்.
தேசம் இல்லாத தேசத்தின்
எல்லைக்கோடுகள் இங்கே
அன்பும் நேசமும் கொண்டு தான்
வரையப்பட்டுள்ளன.
முரட்டு முள்கம்பியை இங்கே
சுற்றி வைத்தாலும்
அவை
இளம் இதயங்களின் யாழ் ஆகும்.
காதல் நரம்பு முருக்கேற்றிய‌
பாடல்களில் தான்
தினம் தினம் அந்த‌
சூரியன்களும் கூட
வெது வெதுப்பாய் இமைவிரிக்கும்.
பூக்கத் தான்  தெரியும்
தாக்கத்தெரியாத இந்த தாமரைகளுக்கு.
சாதி சமயங்கள் மற்றும்
நிறவெறிச் சாயங்களின்
சாக்கடை நதிகள் இங்கே
ஓடுவதும் இல்லை.
இவற்றின் மகா சாக்கடைகளின்
கும்பமேளாக்கள் இங்கே
கூடாரங்கள் அடிப்பதும் இல்லை.
சொர்க்கங்கள் எனும்
புராண சொக்கப்பனைகள்
இங்கே எரிவதில்லை.
ஆதமும் ஏவாளும்
இன்னும்
பழமும் பாம்பும் சைத்தானும்
சேர்ந்து
கூட்டணி ஆட்சிசெய்யும்
பம்மாத்துப்படங்களும்
இங்கு இல்லை.
இச் என்று
இரண்டு மனங்கள் இடும்
முத்தங்களில்
எச்சில் தெறிப்பதில்லை.
கலவிக்கு ஏங்கும் கனவுகள்
இங்கு இல்லை.
ஒரு பார்வை போதும்!
இந்த இளஞ்சிட்டுகளுக்கு
வானம் முழுதுமே அது
சாக்லேட் பிழம்புதான்.
பேசாத மௌனம் கூட‌
பேச்சுகளின் அடை மழை தான்.
பேச்சொலிகள் கேட்கும்
ஆனால்
அவற்றில்
செவிகளுக்கும் வாய்களுக்கும்
வேலை இல்லை.
இதயங்கள் யாவும்
தூய அன்பில் நனைந்து கிடக்கும்.
கொச்சை நிகழ்வுகளை
குப்பையாக கூட்டிப்பெருக்க‌
அவர்கள்
வாழ்க்கையே அங்கு
காத்து நிற்கும்.
பத்தாம் பசலிகளின்
கோரைப்பற்கள்
ரத்தம் குடிக்க அங்கே வரலாம்.
இந்த இளம்பூக்களை
காத்து நிற்கும் சமுதாயக்கேடயங்களே!
சமுதாய சம நீதி காக்கும்
ஊடக அரண்களே!
கவனம் கொள்க!
காதல் தேசத்தின்
எல்லைகளில்
பாட்டுச்சத்தங்களே நீங்கள் கேட்கும்
வேட்டுச்சத்தங்கள்!
வேறொன்றுமில்லை.
பரிணாமக்கோட்பாட்டின்
அடிக்கோடாய்
மின்னும் தங்கக்கோடு இது.
சரித்திரங்கள் வைரத்தின்
ஜரிகைகளாய் சுடர்வதெல்லாம்
இந்த மெல்லிய மனங்களின்
பூக்காட்டில் தான்.
பீரங்கிகள் கோட்டைகளைத்தான்
தகர்த்திருக்கின்றன.
காதல்  சிலிரிக்கும்
இந்த மகரந்தங்களை அல்ல.

காதல் வாழ்க!
காதல் இதயங்கள் வாழ்க!!

=================================================================







புதன், 13 பிப்ரவரி, 2019

துடியன்ன இமைகள் காட்டுதி

துடியன்ன இமைகள் காட்டுதி
=====================================ருத்ரா இ பரமசிவன்

ஈயல் மூசு அடர்கான் அறையிடை
ஆறு உய்த்தன்ன ஏகுவன் ஆகி
ஆளித் தடம் ஒற்றி ஆர்சிலை சிலம்ப‌
பொருள்வயின் பிரிந்தான் கண்ணுள் அடைந்து
தும்பி இனங்கள் அலமரல் வெளியிலும்
துடியன்ன இமைகள் காட்டுதி நீயோ?
மென்மயிர் இறையின் நெகிழ்வளை காட்டி
இறைஞ்சும் அவிர் ஒலி பரப்புதி என்னை?
ஓங்கல் இடையும் நெறித்தே நோக்கி
விடியல் காட்டி விரையும் மன் அறிதி.
பசலை நோன்றனை பூவின் மஞ்சம்
அல்ல இஃது கடுவாய் முள்ளின் குடுமியென‌
கணந்தொறும் கணந்தொறும் கரைதல் ஆற்றாய்.
தீர்க நின் படரே. கொம்பொலி கேட்கும்
அவன் கால் சுவட்டின் இன்னொலி இழைத்து.

======================================================
பொழிப்புரை தொடரும்.





முள்ளில் ரோஜா


வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

முள்ளில் ரோஜா



முள்ளில் ரோஜா 
========================================================
ருத்ரா இ.பரமசிவன் 

யாராவது ஓடிவாருங்களேன் 
மாட்டிக்கொண்ட 
என் கை கால் களை அவிழ்த்து விடுங்கள் 
பதஞ்சலி முனிவர் சொன்னார்  என்று 
 செய்து பார்த்தேன்.
வஜ்ர சூசிகா ஆசனமாம் 
கொண்டை ஊசியை சொருகுவது போல 
குண்டிலினியில் 
ஊடுருவி 
அப்படியே சஹஸ்ராரமாய் 
மேலே போய் 
அந்த ஆகாயப்பிரம்மத்தை 
நக்கிப்பார்த்துவிட ஆசை !
இந்த முள்ளுடம்பு பூராவும் ரோஜாக்காளாய் 
மாறிவிடுமாமே!
பாருங்கள்!
என் மனது எங்கே?
என் உடம்பு எங்கே?
என் "முள்"எலும்புகள் எங்கே ?
ஒன்றுமே தெரியவில்லை.
வாருங்கள் 
வந்து காப்பாற்றுங்கள்.
அந்த பாலைவனத்தில் 
அதன் குரலைக் கேட்பார் 
யாருமில்லை!
காற்றின் ஊளையொலி மட்டுமே கேட்டது!
அந்த ஒலிக்குள் 
பிளந்து கிடப்பது 
கேள்வியா ?
பதிலா ?

====================================================================
ஒரு மீள்பதிவு.