மொட்டை மாடியில்
பகலும் இல்லாமல் இரவும் இல்லாமல்
ஒரு மசங்கல் நிலையின்
அந்தியில்
ஈசிச்செரில் சரிந்து புதைந்து
அமர்ந்து கொண்டு
மொட்டை வெளியை உற்றுப்பாருங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக
அந்த சூடான பாப்கார்ன் எந்திரத்தில்
பொரிகள் வெடித்து வெடித்து
முளைத்து விழுவது போல்
விண்மீன்கள் நமக்கு தூண்டில் வீசும்.
என்ன வென்று?
ஏன் இந்த வெறுமை?
எதையாவது உன் வானத்தில் வீசி எறி.
சலிப்பு வெறுப்பு அலுப்பு
இன்னும் எதை வேண்டுமானாலும்
உன் மீது பூசிக்கொள்.
ஆம்..
இந்த மொத்த பிரபஞ்சத்தையும்
ஒரு கைப்பிள்ளை வெளிக்கு இருந்ததை
துடைத்து எறியும் காகிதமாகப் பார்.
வியப்பும் ஆச்சரியமும் அடைந்து
நீ
எதில் நுழைந்து உருமாறி வெளியே
துப்பப்படபோகிறாய்?
ஆகா! அது இறை அல்லவா?
அதையா
எட்டி உதைக்கத்துடிக்கிறாய்?
ஆம். மனிதா எட்டி உதை.
உச்சியை உற்று உற்றுப்பார்த்து
மொட்டை வெளிக்குள்
நீ மறைந்து போவதற்கு முன்
எட்டி உதைத்து எகிறி விடு.
அது
அச்சமாய்
ஆயாசமாய்
உன்னை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு முன்
அதை நீ
ஒன்றுமில்லாமல் செய்ய
எகிறி விடு.
சிந்தனையில் விலங்குகளையும்
சங்கிலிகளையுமா
மணிகளாய் உருட்டிக்கொண்டிருப்பாய்.
நீ
வெறும் எலும்புக்கூடுகள் அல்ல.
பூச்சி புழுக்களின் மண் அடுக்குகளும் அல்ல.
நீ
எதைச்சிந்திக்க வேண்டும்
எதை எண்ணம் தெறிக்கும் பொறிகளாய்
சிதறடிக்க வேண்டும்
எதை நீ உன் வெளிச்சமாய்
உடுத்திக்கொள்ள வேண்டும்
என்று
சிந்திப்பதை மட்டுமே
நீ சிந்திக்க வேண்டும்...
.... ..... ...... .....
அந்த ஈசிச்சேர் சடாரென்று
முறிந்து விழுந்தது..
________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக