கல்பொரு சிறுநுரை
_____________________________________________--
அந்த நெட்டைப்பனை மரம்
காற்றில் சளசளக்கிறது.
ஓலைக்கீற்றுகள் உள்ளே
கண்ணுக்குத் தெரியாத உதடுகள்
ஒலிக்கின்றன.
தலைவன் தலைவி என்று
அந்த உள்ளச்சிலிர்ப்புகள் எல்லாம்
காதலின் நுண்மையை
ஓலைகளில் பதிவு செய்து விட்டு
போயிருக்கின்றன.
அவை கடற்கரையில் அலைகளாய்
வந்து தளும்பி தளும்பி
ஒரு சிறு கல்லோடு மோதி
ஏதோ சொல்லாடிக்கொண்டே
இருக்கின்றன.
கல்பொரு சிறுநுரை
என்று ஓலையில் அந்த புலவன்
கிறுக்கி விட்டுப் போய்விட்டான்.
குறுந்தொகை என்றார்கள்.
புலவனோ
தன் பெயர் எனும் முகவரியை
அங்கு ஒலிக்க வில்லை.
"கல் பொரு சிறு நுரையார்"
என்று
சொல்லிக்கொண்டார்கள்
அவனுக்கு உலகமே முகவரியாய்.
உலகத்தின் எல்லாக்கடல்களும்
அலைத்திவலைகளாய்
உள்ளத்து இழைகளை ஒலித்துக்கொண்டே
இருக்கின்றன.
அன்பு சிரிக்கின்றதா?
அழுகின்றதா?
தெரிய வில்லை.
அந்த சொல்லும் மொழியும் கூட
புரியவில்லை.
அந்த கடல் துளி சொன்னது.
இந்த உலகின் மனிதர்கள் யாவரும்
தங்கள் மனங்களை
ஒரு சேர அங்கே ஒலித்திருக்கின்றனர்.
உங்களுக்கு
தமிழ் எனும் அமிழ்தாயிருக்கலாம்.
ஆனாலும் உற்றுக்கேளுங்கள்
அது
உலகினர் அசைத்துத்தந்த அந்த
உதடுகள் எல்லாமும் ஒரு மொழியாய்
ஒலித்திருப்பதை
நீங்கள் கேட்கலாம்
அது உங்கள் தமிழ் மட்டுமல்ல.
அது இந்த உலகின் உயிர் ஒலி.
__________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக