கரிசல் இலக்கியச்செம்மல்
பூமணி அவர்கள் மறைவிற்கு
என் மனம் கசிந்த அஞ்சலி
_________________________________
அரிய அற்புத எழுத்துக்கள்
எனும் கருப்பு வைரங்களை
கரிசல் எழுத்துக்களில்
சுடரத்தந்த கந்தல் சூரியனே.
மண்ணில் பூக்கள் தோன்றுவது
அழகு தான்.
ஆனால் அதன் தூசிகளும் துரும்புகளும்
கூட
மலர்ந்து செழித்து
மகரந்தங்கள் சிந்தி
மனிதம் மலர்த்திக்காட்டியிருக்கிறதே
உன் எழுத்துக்களால்!
கலப்பை பிடித்து
காய்த்த விரல்களில்
தோட்டங்கள்
பூத்துக்குலுங்கி
புன்முறுவல்கள் செய்கின்றனவே.
எழுத்துக்களை
சீராட்டி குளிப்பாட்டி
பள்ளிக்கு அனுப்பியிருக்கிறாய்.
அவை உயிர்த்து பயிர்த்து
பண்பு கற்பித்தன எங்களுக்கு.
மண்ணின் வேர் வேர்வையில் சொட்டி
உன் வரிகளை
வியக்க வைத்திருக்கின்றன.
உன் ஒரு நாவல் போதும்
நம் கிராமங்களின் நரம்பின் நெசவின்
நேர்த்தி சொல்ல.
அந்த கிராமத்து "வெக்கையில்" படுத்துக்கிடக்கும்
அசுர எரிமலைகள் பரல்கள் தெறித்தபோது...
வெறும் ஆட்டுப்புழுக்கைகள் என
ஆதிக்க வெறிகள் எக்காளமிட்ட போது...
நீ ஆணியடித்துக்காட்டியிருக்கிறாய்
இந்த மரத்த மனங்களின் மீது.
உன் எழுத்துக்கள் கொட்டிய
வெளிச்சத்தில்
ஆயிரம் விடியல்களின்
முகங்கள் தெரிகின்றன.
வாழ்க உன் எழுத்துக்கள்.
அவற்றிற்கு மரணம் இல்லை.
அவை நெருப்பு சிந்தனைகளின்
பிறப்பிடம் அல்லவா.
__________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக