ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

....தருணம் இது!

....தருணம் இது!
===============================================ருத்ரா

இளைய பாரதமே
இளைய தமிழகமே

ஓட்டமும் நடையுமாய்
நீ விரைந்து ஏக வேண்டிய தருணம் இது!
காற்றுக்கு போட்டி போடு.
கடல் அலைகளை க்கூடக் கட்டிபோடு.
மொத்த வேகத்தையும்
குத்தகைக்கு எடுத்துக்கொள்.
இந்த பிரபஞ்சத்தில்
ஒளியை மிஞ்சிய வேகம் இல்லை
என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அவர்களுக்கே தெரியவில்லை
அவர்கள் சிந்திக்கும் வேகம்.
ஒரு குரங்கு மனிதனாக மாற
பல மில்லியன் ஆண்டுகள்
தேவைப்பட்டதாமே.
இன்று நிலாவின் அடிவயிற்று
நீரை உறிஞ்சி அங்கேயே
விவசாயம்
பண்ணி விடுவான் போலிருக்கிறது...
அவனுடைய சிந்திக்கும் வேகத்தால்!
இந்த விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு
மனிதன்
கடவுளையே படைக்கலாம்.
"பைத்தியக்காரா
இப்படி உன்னை நினைக்கவைப்பவனே
அவன் தானே!"
என்று தாடியை வருடிக்கொண்டு
தத்துவ மழை பொழியும்
பெரியவர்கள்
கடவுளை எதிர்த்து கடவுளே
சிந்திப்பது தானே
"டயலக் டிகல் மெட்டிரியலிசம்"
என்று
மார்க்ஸ் எனும் அந்த பெரிய ரிஷி
சொன்னதன் நுட்பம் அறிவார்களா?
மனிதனுக்குள்
முண்டி க்கொண்டிருக்கும்
மூளையின் நியூரான்களின் 
அந்த நுண்ணொலியைக்கேட்க
முயல் மனிதனே முயல்!

மனிதனே
நீ நட்டு வைத்த மைல்கல்லோடு
உன் பயணம் முடிந்து போகவில்லை.
அதற்கு கும்பாபிஷேகம் நடத்திக்கொண்டு
முடங்கிப்போகவா
உன் மூளையின் கதிர்வீச்சு
இங்கே முளை விட்டிருக்கிறது?
அதே போல்
விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு
அதன்  "அண்ட்ராய்டு" நுட்பத்தில்
வேடிக்கை விளையாட்டு "கேம்களில்"
புதைந்து போகவா
நீ துடி துடித்துக்கொண்டிருப்பது?

கோடி ஒளியாண்டுகள் தள்ளி நின்று கொண்டு
உனக்கு புதிர்கள் வீசும்
அந்த "குவாஸர்கள்  பல்சார்கள்"பற்றி
சிந்திப்பதைப்பற்றி சிந்தித்துப்பார்.
இந்த சினிமாவும் விசிலடிப்புகளும்
உனக்குள் தகிக்கும் அறிவு சூரியனை
அணைக்க அனுமதிக்கலாமா நீ?
தினவெடுக்கும்  உன் வெற்று ஆசைகளுக்கு
தீனி போட மட்டுமே
உன்னைச்சுற்றி
ஊடகங்கள்.ஊடகங்கள்.ஊடகங்கள்.
இந்த நாடகங்களுக்குத் திரைபோடு.
காலத்திரைகளுக்கு  ...அதன்
மூர்க்கத்தனமான சீற்றங்களுக்கு
கடிவாளம் போட
வீறு கொண்டெழு !

==========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக