திங்கள், 24 செப்டம்பர், 2018

ஓவியக்காடுகள் (3)

    ஓவியக்காடுகள்  (3)




ஆசை .
===========================================ருத்ரா

ஆசையை ஒழி
ஒரு போதி  மரத்து நிழல்
கண்டு பிடித்து சொன்னது.
மனிதன்
தான் பிறக்கவேண்டும் என்ற
ஆசையை
அந்த இருட்டுக்குகையில்
இருந்துகொண்டு
ஒழிக்கமுடியாமல் போனதால்
அவன்
ஆசையின் வெளிச்சமாக
வெளிப்பட்டவுடன்
எதுவும் செய்ய முடியவில்லை.
இன்னொரு மனிதன்
பாடையில் வைத்து எரிக்கப்பட
கொண்டுசெல்லப்படும் போது தான்
"வெளிச்சமாக" பிறந்தவன்
இன்னொரு இருட்குகைக்குள்
விழப்போவது தெரிகின்றது.
இந்த "ஞானோதயம்"
உலகம் முழுதும் கிடு கிடுக்க வைக்கிறது.
தானே இப்படி உதிர்ந்து போவது
இயற்கை.
ஆனால் அடுத்தவன் மீது பகைமை கொண்டு
அவன் உடைமைகளை கவர்ந்து கொள்ளும்
ஆசை குமிழியிடும்போது
உயிர்கள் செயற்கையாய் உதிர்க்கப்படுகின்றன.
இந்த ஆசை மன்னர்களுக்குள்
பிரம்மாண்ட வெறியாய் பதாகை விரிக்குபோது
உயிர்கள் ஆயிரம் ஆயிரமாய்
கொல்லப்படுகின்றன.
ஆனால்
மனிதன் இன்னொரு மனிதனிடம்
அன்பு காட்டும்போது
இந்த ரத்தத்தின் காட்டாறுகள்
ஓடத்தேவையில்லை.
மன்னர்களின் தேசப்படங்களும்
இந்த "அன்பு" எனும்
எல்லைக்கோடுகள் கொண்டு
வரையப்பட்டால்
உலகம் முழுமை பூத்து
இன்பம் எனும் மகரந்தங்கள்
எங்கும் தூவிக்கிடக்கும்.
ஆனால்
"ஆசை"பூதம் நுழைந்து விட்டால்
அந்த மகரந்தத் தூள்
ஒவ்வொன்றும்
துப்பாக்கிக்குண்டுகள் ஆகும்.
"என்னைகாப்பாற்ற
நீ துப்பாக்கி ஏந்து " என்று
எந்தக்கடவுளும் சொன்னதில்லையே.
மனிதனை மனிதன் ஆளும் ஆசையே
இந்த உலகத்தில்
பிரம்மாண்டமான ஒரு துப்பாக்கியாய்
அவதாரம் எடுத்திருக்கிறது.
தாராளமய பொருளாதாரத்திற்கு
அது பற்றிக்கவலையில்லை.
லாபம் குவிந்ததால் சரி.
ஆயிரம் அடிக்கும் மேல்
"துப்பாக்கிக்கு" ஒரு சிலை செய்து
அதை சுற்றுலாத்தலம் ஆக்கிட
அதற்கு ஆட்சேபணை இல்லை.



பூமி முழுவதும்
மயானம் ஆகினால்
இந்த "பட்டுப்போன" பூமியை
வைத்துக்கொண்டு என்ன செய்வது?
அழிவு தரும் ஆசையை ஒழிப்பதே
அறம்.
"அறம் செய்ய விரும்பு"
ஆம்.
ஆசையை ஒழிக்கும்
ஆசையே அறம்!

=========================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக