வியாழன், 20 செப்டம்பர், 2018

ஷாமியானா பந்தல்

ஷாமியானா பந்தல்
=========================================ருத்ரா

எல்லோரும் உட்கார்ந்து இருந்தார்கள்
அந்த பந்தலின் அடியில்.
பந்தல் துணி
அற்புத ஓவியங்களுடன்
தையல்வேலை செய்யப்பட்டு
அழகாய் இருந்தன.
அந்த யாளி போன்ற உருவம்
பூங்கொத்துக்களோடு பின்னிப் பிணைந்து
நன்றாய் காட்சி தந்தது.
ஒரு பெண் ஒரு புள்ளிமானைத்தழுவிக்கொண்டு
அதை முத்தம் கொடுத்து
மகிழ்ச்சியில் அந்த பந்தல் துணியையெல்லாம்
ஈரப்படுத்தியிருந்தது போல்
மிக அற்புதம்.
ஓரங்களில் எல்லாம் அவள்
காதோரம் லோலாக்குகள் போல்
டிசைன்கள் அழகாய் தொங்கி
காற்றில் அசைந்து கொண்டிருந்தது.
பந்தலை இழுத்து நிறுத்த‌
கயிறுகள் பூமியில் அடிக்கப்பட்டிருந்தன.
விறைத்த கால் எலும்புகள் போல்
இரும்புக்குழாய்கள் தாங்கிப்பிடிக்க‌
ஷாமியானா பந்தலின் அழகும் கவர்ச்சியும்
வெகு நேரம் உட்கார்ந்திருந்த என்னை
ஒரு உன்மத்தக் களிப்பில்
கரைத்து கரைத்து ஒன்றுமில்லாமல்
செய்து விட்டிருந்தன.
திடீரென்று
ஓலம் ஒப்பாரி..குரல்கள்
கொத்து கொத்தாய் அந்தப்பந்தலை
சல்லடை ஆக்கின.
திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
ஓ!
அந்த உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து
அந்த "சொர்க்க ரதத்தில்"
ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
அந்த கொள்ளிச்சட்டியில்
அந்த உடலின் முற்றுப்புள்ளிகள்
கங்குகளாய் கனல் பரப்பின.
மரணம் ஆழமானது தான்.
என் துக்கவிசாரிப்பு எனும்
ஒரு மனப்புண் இந்நேரம் வரை
ஆறாத புண்ணை யெல்லாம் ஆற்றும்
ஒரு "ஆறுமுகக்களிம்பு" எனும்
அந்த பந்தல் மூலம்
மூடியாக்கிடந்தது?
"அத்வைதம்" அது இது என்று
நம்மீது  அணி அடித்து
வைத்திருந்ததெல்லாம் கூட
இந்த தருணங்களின் நடு நெஞ்சில்
சிலுவையாய்  அறையப்பட்டிருந்தன.
இயற்கை தான்
அந்த சுத்தியலையும்  ஆணியையும்
வெறியாய் அங்கே வீசியெறிந்ததா?

அழுகையின் கடலில் அந்த உடல்
மிதந்து கொண்டிருந்தது.
ஷாமினா மங்கையின் முத்தம்
இப்போதும் அழகாய்த்தான் இருந்தது.

========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக