சனி, 22 செப்டம்பர், 2018

கமலின் குடவோலைக்குள்ளிருந்து ஒரு "விஸ்வரூபம்."

கமலின் குடவோலைக்குள்ளிருந்து ஒரு "விஸ்வரூபம்."
================================================‍‍=======ருத்ரா

"புல்லின் வேர்" எனும் கிராம நிலையிலிருந்து
ஜனநாயக விருட்சங்களை
கமல் அவர்கள் பதியம் போட‌
முனைந்திருப்பதை வரவேற்கலாம்.
இந்த "போன்ஸாய்" பொம்மை முறை
எந்த அளவுக்கு பயன்படும்?
நம் ஜனநாயக நாற்காலியின்
நான்கு கால்களும்
கால் ஊன்றியிருப்பது
ஊழல் ஊழல் ஊழல் ஊழலே தான்.
அதில் பஞ்சாயத்து ஆட்சியில்
என்ன மாற்றங்களை சாதிக்க இயலும்?
பஞ்சாயத்துகள் கூட
ஊழல் எனும்
நாகப்பாம்பின் குட்டிகள் தானே.
கூரிய விஷப்பல்லை மக்கள் மீது
அவை கூர் தீட்டுவதை
நாம் பார்த்துதான் இருக்கிறோம்.
பெண்களுக்கு ஒதுக்கப்படும்
தலைவர் பதவிகளின்
முந்தானைக்குள் கூட
அந்த கணவன்மார்களே
டீல் பேசும் காட்சிகள்
நம் ஜனநாயகத்தில் அரங்கேறும்
அவலங்கள் தானே.
ஊராட்சி
ஐம்பேராயம்
என்ற‌
சோழர் காலச்சொற்களுக்கு
புளி போட்டு விளக்கமுயன்றாலும்
அது "கிராம சபை"என்று தானே
வழக்கத்திற்கு வருகிறது.
தமிழின் மீது நாமே
காலம் காலமாய் இந்த‌
பாறாங்கல்லைப்போட்டு
மூடித்தானே வைத்திருக்கிறோம்.
தமிழ்விடுதலைக்கு அவர்
மருதநாயகமாய்
எப்போது குதிரையேறி வருவாரோ?
"அலாவுதீன் அற்புதவிளக்கில்"
நடித்த கமலுக்கு அந்த‌
விளக்கைத்தேய்த்த அனுபவம் உண்டு.
அது போல்
இந்த "குடவோலை"யைத்தேய்த்து
ஜனநாயக பூதத்தை அவர்
எழுப்பித்தர நாமும் அந்த "குடத்துள்"
ஒரு "ஓலைச்"சீட்டு போடுவோம்.
நல்லாட்சி எனும் "விஸ்வரூபம்- 3"
விரைவில் வெளியிடப்பட
நாம் தோள்கொடுப்போம்.

கமல் முயற்சிகள்
நீர்த்துப்போகக்கூடாது.
அவரது "கிராமசபை"இயக்கத்திற்கு
நம் வாழ்த்துக்கள்.

=================================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக