ஓவியக்காடுகள் (2)
=====================================
குமிழிகள்
----------------
ஊதுவது யார்
இந்த சோப்புக்குமிழிகளை?
அவள் விழிகளின்
மாயச்சுழிகள்
ஒரு இருட்டுக்கடலுள்
அமிழ்த்திக்கொண்டிருக்கிறது.
இந்த நகரம்
ஜனக்கூட்டம்
அம்மா ..அப்பா
தம்பி தங்கை
இவர்கள் எல்லாம்
எல்லாம்
தொலைதூர
பொம்மைக்கொலுவாய்
மங்கல் உருவங்களாய்...
ஒரு சிரிப்பொலியில்
அவள் வீசிய ஒலிக்கீற்று
ஒரு கயிறாய்
அல்லது
பளிங்கு ப்புன்னகையில்
உருக்கி வார்த்து
"அனக்கோண்டாவாய்"
என் மீது முறுக்கிக்கொண்டிருக்கிறது.
இன்பவலியை
ஒரு ருசியான விஷ ஊசியாய்
என் நாளங்களுக்குள்
ஏற்றுகிறது.
எனக்கு இந்த குமிழிகளைத்தவிர
மற்ற கல் கட்டிடங்கள் எல்லாம் ..
மற்ற கல்லூரிப்பாடங்கள் எல்லாம் ..
காலமே அர்த்தமற்றதாய் போன பிறகு
நிகழ் காலம் வருங்காலம் எல்லாம்
தூள் தூள்.
இந்த நிழலை
என் உடலில் என் உயிரில்
தொங்க விட்டுக்கொண்டிருக்கிறேன்.
இதன் முகம் எது?
கை எது? கால் எது?
எங்கள் உருவங்கள் இதயங்கள்...
யாவும்
காய்ச்சி வடித்த
ஒரு மூளித்தனமான திரவமாய்
நொதித்துக்கொண்டிருக்கிறது..
தளும்ப இடமில்லை.
இந்த கிண்ணங்களின்
கண்ணாடி விளிம்புகள்
உடைந்து நொறுங்கட்டும்.
=============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக