வெள்ளி, 28 செப்டம்பர், 2018

உன்னையே நீ அறிவாய்









    ருத்ரா 

உன்னையே நீ அறிவாய்
==========================================ருத்ரா


எவ்வளவு அழுத்தம் திருத்தமான
சொற்கூட்டங்கள் இவை.
ஈராயிரம் ஆண்டுகளுக்கும்   முன்னதாக
அந்த கிரேக்கத்து சான்றோன்
சாக்ரடீஸ் சொன்னவை இவை.
ஏதோ காலைக்காப்பியை
குடிக்கும் சாவதானத்தில்
அந்த "ஹெம்லாக்" விஷக்கோப்பையை
அருந்தியவன் அல்லவா அவன்.
புதிய சிந்தனையை
புதிய கோணத்தில்
தந்ததற்காக
கிரேக்க நாட்டுச்சட்டம்
அவனுக்கு தந்த பரிசு 
அந்த மரணம்.
சட்டம் என்றால்
கட கடத்த ஆணிகள் முறுக்கப்பட்ட
எந்திரம் தானே அது.
பல ஆயிரம் ஆண்டுகள்
எனும் இறுக்கமான உதடுகள்
பாறாங்கல்லாய்
அழுத்திக்கொண்டு
எப்போதோ
ஒரு மூட இருட்டு எனும்
சொல்லில் வேய்ந்த "கடவுள் சாட்சியாக"
என்று ஒலிக்கும் அதன்
கோரைப்பற்களிலும்
கடைவாய்ப்பற்களிலும்
ரத்தம் ஒழுக
தீர்ப்புகளை உச்சாடனம் செய்யும்
எந்திரம் தானே  அது.
உயிரற்ற அதன் ஒலிகளுக்கு
உயிர் கொடுப்பதற்கு
அதன் ஒலிகளில் பலியான
ஆன்றோர்கள் அன்றைக்கு இருந்தார்கள்.
"பெயக்கண்டும் நஞ்சுண்டு  அமைந்த
நயத்தக்க நாகரிகம் "கொண்டவனாயிருந்த
சாக்ரடீஸ் அந்த நச்சுக்கோப்பைக்கு
அஞ்சவில்லை.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
உருண்டபின்
அந்த நச்சுக்கோப்பைக்கூட
உருண்டு விழுந்து
நொறுங்கிபோகிறது.
நாகரிகம்
பாம்புசட்டைகளை கழற்றிக்கொண்டே
இருக்கிறது.
மனித நீதி
அந்த ஆகாயக்குரல்களுக்குள்
புதிதாய் சமூக நீதியை
பாய்ச்சுகிறது.
மாற்றம் எனும் காட்டாறு
"கல் பொருது இறங்கும்
பஃறுளியாறாய்"
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்கிறது.
சாக்ரட்டீஸ் புன்னகை செய்கின்றான்.

==================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக