( அமெரிக்காவின் "ஹவாய் தீவில்" எடுக்கப்பட்ட படம்)
எங்கள் திருமணநாளின் பொன்விழா இன்று
==============================================ருத்ரா
ஐம்பது நீண்ட ஆண்டுகளா?
அல்லது
ஐம்பது நிமிடங்களாய்
பறந்து விட்ட காலத்துணுக்கா?
என்று எடைபோடும்
நாள் இன்று!
அது நம் உள்ளத்து அருவியைப்பொறுத்தது.
இந்தக்குளியலில்
நம்முள் எழுதப்படும்
வரலாற்று எழுத்துகளுக்குள்
எத்தனை எத்தனை
பூந்திவலைகள்!
எழுவண்ண பளிச்சிடல்களின்
எத்தனை எத்தனை
பளிங்கு நுரைகள்!
நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாள் அது உணர்வார்பெறின்
என்று வள்ளுவர்
அந்த கடிகாரமுள்ளின்
"டிக் டிக்" களில்
பயமுறுத்திக்கொண்டிருந்தாலும்
அந்த வாள்
எங்கள் இனிமையான "கேக்"வெட்டும்
கத்தி தான் என்றும்
அன்பின் இனிய தருணங்களை
பங்கு போட்டுத் தரும்
என் உயிரினும் மேலான
என் மனைவியை
மறக்க இயலுமோ
என்றும்
என் இதய முரசை
கொட்டி கொட்டி
இசைக்கும் நாள் இந்த பொன்னாள்!
அமெரிக்காவில் இருக்கும்
எங்கள் மகள் எங்கள் மகன்
மருமகள் மற்றும் மாப்பிள்ளை
பேரன்கள் பேத்திகள்
எனும் அன்புதேசம்
ஒரு பேரன்பின் நுண்சிறகுகளைக்கொண்டு
எங்கள் மீது அரண்காத்து
மகிழ்விக்கும் திருநாள் இந்நாள்!
அமெரிக்காவின்
கலிஃபொர்னிய
கடற்கரை மணற்துளியெல்லாம்
எங்கள் சுவடிகளின்
எழுத்துக்களை தூவி நிற்கும்.
அந்த கடற்குருகு ஒலிப்புகள் கூட
கரைகாணாத ஒரு உற்சாகக்கடல் நோக்கி
பாடும் ஒரு "ஆற்றுப்படை".
ஆம்
எங்கள் திருமண பொன்விழாவுக்கு
அவை அமுத ஒலிகளின் தோரணங்கள்.
மதுரை கற்பகநகரில்
எங்கள்
இல்லச்சிமிழுக்குள்ளிருந்தும்
கணியன் பூங்குன்றன்
வரிகள் ஒலிக்கட்டும்.
யாதும் ஊரே.யாவரும் கேளிர்.
அன்பு நண்பர்களே
உங்கள் வாழ்த்துக்களோடு தான்
எங்கள் மிச்ச வாழ்க்கையின்
நறுமண மாலைக்கு நார் எடுத்து
பூத்தொடுக்க விழைகின்றோம்.
உங்கள் அன்புக்கு நன்றி.
இப்படிக்கு
அன்புடன்
இ.பரமசிவன்
ப.கஸ்தூரி.
=======================================================
2 கருத்துகள்:
பொன்விழா காணும் புதுமணத்தம்பதிகளுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் பேரன் பேத்திகளின் வாழ்த்துக்களை பெற்ற நீங்கள் கொள்ளு பேரன் பேத்திகளின் வாழ்த்தையும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
கணினிக்கு ஏற்பட்ட பழுதினால் உடன்பதில் இட இயலவில்லை.
கருத்துரையிடுக