திங்கள், 17 செப்டம்பர், 2018

குட்கா

குட்கா
==============================ருத்ரா

இது என்ன‌
மந்திரவாதிகளின் குகையா?
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஏதோ ஒரு கிளியின்
வயிற்றுக்குள் அடைத்து
வைத்திருக்கும் ரகசியமா இது?
மக்களை...
ஜனநாயகத்தை...
சில்லறை சில்லறையாக‌
மரப்பு செய்து
சிந்தனையற்ற மூளைகளின்
வெறும் கபாலக்கூடுகள் ஆக்கும்
திருப்பணியை செய்வதற்குத்தான்
பெட்டிக்கடைகள் தோறும்
இந்த பிளாஸ்டிக் குடல்கள்
தொங்கிக்கொண்டிருக்கின்றன.
சமுதாயத்தின்
ஒரு நீண்டகால மரணச் சித்திரம்
நீள நீளமான சவப்பெட்டியாகி
தொங்கிக்கொண்டிருக்கின்றன.
வீரதீரமாய் இதை வெட்டிவீழ்த்த‌
வந்துவிட்டோம்
என்கின்ற விக்கிரமாதித்தன்களோ
இந்த லஞ்சத்தின் வேதாளவயிற்றுக்குள்
விழுங்கப்பட்டு கிடக்கிறார்கள்.
ஆட்சி எந்திரமோ
தன் விழாக்களுக்கு அவற்றையே
தோரணங்கள்
ஆக்கிக்கொண்டன போலும்!
குட்கா ஆண்டால் என்ன?
கூஜா ஆண்டால் என்ன?
எனக்கொரு கவலையில்லை
என்று
ரஜனி ஸ்டைலில்
குத்துப்பாட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
ஒட்டுப்பூச்சிகள் எனும்
விட்டில் பூச்சிகள்.
நீதிமன்றங்களோ
"சூ மந்திரக்காளி!
பயம் வேண்டாம்
எல்லாம் சரியாகிவிடும்"
என்று
மரச்சுத்தியல்கள் தட்டி
சப்தம் எழுப்பிவிட்டன!
எல்லோருக்கும்
நன்றி நன்றி நன்றி.
இந்த குட்காவுக்கும் தான்.
நமது மோசமான முகமூடியை
இந்த அளவுக்கு கிழித்து
கடை கடையாய் தொங்கவிட்டிருக்கிறதே!
அதன் மசாலா நெடி தாங்காமல்
நம் தூக்கங்களெல்லாம் கலையட்டும்.
இனி புதிய விழியல் தான்
நம் புதிய விடியல்!

===============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக