வியாழன், 20 செப்டம்பர், 2018

முகம்

முகம்
===========================================ருத்ரா

என் மீது எல்லோரும்
கடந்து போனார்கள்.
என் முதுகின் நரம்புகளில்
ரோடு ரோலர்களை
கடமுடா என்று ஓட்டினார்கள்.
என் முகம் தேய்ந்தே போனது.
கனத்த அந்த அரசியல் சாசன
புத்தகத்தின்
பக்கங்களில் மாட்டிக்கொண்டு
லேமினேட் செய்தது போல்
நசுங்கிப்போன ஒரு
கரப்பான் பூச்சியாய்
சிதைந்து போனது
என் முகம்.
ஒவ்வொரு ஆண்டையும்
என்மீது உருட்டி உருட்டி
என்னைக்கூழாக்கி
எழுபது ஆண்டுகளுக்கும்
மேலாய்
இன்னும் என்னை
எழுந்திருக்க விடவில்லை.
பொருட்களை பண்டமாற்றம்
செய்ய வந்த பணம்
மக்களைபிணமாக்கி
பண்டமாற்றம் செய்ய வந்திருக்கிறது.
"தராசு" தட்டுகளில் 
\எடைக்குப்போடப்பட்ட
பழைய பேப்பர்களாய்
மசோதாக்கள் குவிந்து போனதில்
தேச  சக்கரத்தின்
அச்சு முறிந்து போனது தான் மிச்சம்.

அறியாமையும் பழமைவாதமும்
மட்டுமே
நம் மண்ணின் வாசம் ஆனது.
அந்த துர்நாற்றத்தை கங்காஜலம் கொண்டு
மந்திரம் சொல்லி
மிச்சமான நம் சடலங்களால் நிரப்பி
அந்த "ஜீவ நதியையும்"
சவ நதியாய் ஆக்கி விட்டோம் .
கும்பமேளாக்கள் மட்டும்
நம் கும்பமேளாக்கள் அல்ல
நம் தேர்தல்களும் தான்.
நாம் நடத்தும்
இந்த ஐந்தாண்டு ஒலிம்பிக் விளையாட்டு
வெறுமே
வரிசையில் நின்று கொண்டிருப்பது தான்.
ஒவ்வொரு தடவையும்
ஓட்டுகளைத்தான் அதில் போட்டோம்.
எப்படி
ஒவ்வொரு தடவையும்
அதிலிருந்து
ஹிட்லர்கள் வந்தார்கள்?

என் முகம் இன்னும் சிதைந்து தான்
கிடக்கிறது.
ஆம்
ஜனநாயகத்தின் அந்த
"முக"வரி
உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை.
தெருக்களெல்லாம் பாழாய்
வெறிச்சோடிக்கிடக்கின்றன.

====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக